Load Image
Advertisement

பிரபஞ்சத்தின் பேரழகு பிச்சாவரம்!

கடலுார் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள பிச்சாவரம் மாங்குரோவ் காடுகளை படைக்கும் போது பிரம்மனும் பித்தனாகியிருக்க வேண்டும். பிரமிக்க வைக்கும் பிரபஞ்சத்தின் பேரழகு… நம் தமிழகத்திற்குள் அமைதியாக அடங்கி கிடப்பது ஆச்சர்யத்தின் உச்சம்.
கடலுாரில் சுற்றுலா என்றதும் கண்மூடி தியானிப்பது சிதம்பரம் நடராஜர் கோயிலும், கண்திறந்து இயற்கை வசப்படுவது பிச்சாவரம் நீர்க்காடுகளும் தான். சிதம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சிதம்பரம் நடராஜர் கோயில்.

ஆதியோடு அந்தமாக ஆகாயம் பார்த்து வீற்றிருக்கும் சிவனின் திருத்தலத்தினுள்ளே நுழைந்ததும் வெட்டவெளியே ஆன்மிகமயமாக காட்சிதரும். இல்லாதோர், உள்ளோர் எல்லோருமே பார்க்கும் வகையில் சிவகாம சுந்தரி அம்மன் காட்சி தருகிறார். இங்கு மட்டும் கருவறை தெற்கு பார்த்தபடி உள்ளது.
எந்த வாசலில் நுழைந்தாலும் கருவறை தவிர மற்ற இடங்கள் ஆகாயத்தை நோக்கி இருக்கும். ஒன்பது வாசல்களுடன் கருவறை மேற்கூரை 21ஆயிரம் தங்க ஓடுகளால் அலங்கரிக்கப்பட்டது. பரந்த வெளியில் இயற்கையோடு இணைந்த கோயிலின் ஆன்ம அனுபவம் நம் இதயத்தை இதமாய் வருடி புதிய உத்வேகம் தரும். தினமும் காலை 6:00 - மதியம் 12:30 மணி, மாலை 5:00 முதல் இரவு 11:00 மணி வரை தரிசனத்திற்கு அனுமதி.
ஆன்மிக தரிசனம் தந்த மனநிறைவுடன் அங்கிருந்து அரைமணி நேரத்தில் (18 கி.மீ.,) பிச்சாவரம்செல்லலாம். மோட்டார் படகு, துடுப்பு படகுகள் உள்ளன. மோட்டார் படகில் 8 பேர் 40 நிமிடம் பயணம் செய்ய ரூ.1800, துடுப்பு படகில் 4 பேர் ஒரு மணிநேரம் பயணம் செய்ய ரூ.400. தினமும் காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை படகு பயணம் உண்டு.
மோட்டார் படகு அலுங்காமல் குலுங்காமல் தண்ணீரை கிழித்துச் செல்கிறது. படகின் இயந்திர சத்தம் இடைவிடாமல் கேட்டு கொண்டிருக்க, பரந்த வெளியில் கண்ணுக்கு எட்டிய துாரம் வரை தண்ணீரும், சுரபுன்னை மரங்களுமே காட்சியளிக்கும்.
அண்ணாந்து ஆகாயத்தை பார்த்தால் மவுன உலகில் மனம் சஞ்சரிக்கும். துடுப்பு படகின் பயணம் அலாதியானது. இது குறுக்கு சந்திற்குள் சாகச பயணம் செய்வது போல. தண்ணீருக்குள் துடுப்பு நுழைந்து வெளியேறும் போது 'கிளக்' என எழுப்பும் சத்தம் சீரான ஓசையுடன் இசையாய் கேட்கும். நீரின் பாதையை மறைத்து சுரபுன்னை காடுகள் எழுப்பியுள்ள வேர்களின் கோட்டை நம்மை பிரமிக்க வைக்கும். அடர்ந்து படர்ந்த சுரபுன்னை தாவர வேர்களின் நீட்சி கண்ணை குத்தாமல் கவனித்து செல்ல வேண்டும். அவ்வப்போது படகு ஆடி ஆடி செல்லும் பயணம் நம்மை பரவசப்படுத்தும்.
தண்ணீரின் ஆழத்திலிருந்து 2 முதல் 3 அடி வரை வேர்கள் பற்றி வீழ்ந்து விடாமல் கிளைகளை பரப்பி பசுமை சேர்க்கின்றன. வேர்களை ஒட்டியுள்ள திட்டு பகுதியில் நுாற்றுக்கணக்கான சிவப்புநிற நண்டுகள் நடைபயின்று கொண்டிருப்பதை ரசிக்கலாம். அவற்றை தொட்டால் வளைக்குள் ஒளிந்து விடுகின்றன.
இவற்றை வேட்டையாட நீர்நாய்கள் உலாவரும். இங்குள்ள இன்னொரு அதிசயம் சில செடிகளின் வேர்கள் தண்ணீரிலிருந்து மேலெழும்பி மனிதர்களை போல காற்றை சுவாசிக்கின்றன. வனத்துறை அனுமதித்துள்ள எல்லை வரையே இந்த பயணம் மேற்கொள்ள முடியும்.
இயந்திர படகில் பயணித்தாலும் துடுப்பு படகின் அனுபவத்தை பெறுவதே பிச்சாவரத்தை நிறைவு செய்வதற்கு சமமாக இருக்கும். ஒருநாள் சுற்றுலாவில் ஆன்மிகத்தையும் அழகியலையும் ஒருசேர அனுபவிக்க வேண்டுமா அதற்கு இந்த சுற்றுலாவே முதல் 'சாய்ஸ்!'

சோழர்கள் சூரியகுலத்தவர் என்றும், பாண்டியர்கள் சந்திரகுலத்தவர் என்றும், சேரர்கள் வானவர் குலத்தினர் என்றும் தங்களை அழைத்தனர். சிலப்பதிகாரம் 'ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்' என சூரியனை போற்றுகிறது.வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement