மழை, குளிர், இருள் என எந்த தடை இருந்தாலும் வீட்டிற்குள் தயங்கி நிற்காமல் அதிகாலையிலேயே சைக்கிளில் வீடு வீடாக செல்ல வேண்டிய பணி, நாளிதழ் வினியோகம்.
பெரும்பாலும் ஆண்களே செய்யும் இந்த பணியில் வெற்றிகரமாக தடம் பதித்திருக்கிறார் கேரள மாநிலம் கொச்சி அருகே உதயம்பேரூரை சேர்ந்த அனிதா; அதுவும் பள்ளியில் இசை ஆசிரியையாய் பணிபுரிந்து கொண்டே!
இசையில் எம்.ஏ.,எம்.பில்., பட்டம் பெற்று இப்போது முனைவர் பட்ட ஆராய்ச்சியில் இருக்கும் அனிதா தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு சங்கீத ஆராதனையில் பாடி பெருமை பெற்றவர்.
இசை ஆசிரியை, நாளிதழ் வினியோகிப்பவர் (நியூஸ் பேப்பர் கேர்ள்) ஆனது எப்படி? அனிதாவே கூறுகிறார்...
என் தந்தை நாளிதழ் ஏஜன்ட். வீடுகளுக்கு நாளிதழ் அவரே எடுத்துச்செல்வார். சில ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு விபத்து ஏற்பட்டு, இரண்டு மாதம் ஓய்வில் இருந்தார். ஒரு நாள் கூட விடுப்பு எடுக்க முடியாத இந்த பணிக்கு அப்பாவிற்கு மாற்றாக நாளிதழ் வினியோகம் செய்ய யாரும் கிடைக்க வில்லை. அது கொரோனா காலம் வேறு; எல்லோரும் தயங்கிய போது, நானே வினியோகம் செய்கிறேன் என்று அப்பாவிடம் சொன்னேன். எந்த வீட்டிற்கு என்ன பேப்பர் என்று லிஸ்டை எழுதி வாங்கி கொண்டேன். முதல் நாள் மட்டும் அப்பா, காரில் கூடவே வந்து வீடுகளை அடையாளம் காட்டினார்.
எப்படி பேப்பர் போட வேண்டும் என்று பயிற்சியும் தந்தார்.
மறுநாள் முதல், மூன்றாண்டுகளாக 200 வீடுகளுக்கு நாளிதழ் வினியோகம் செய்து வருகிறேன். அதிகாலை 4:00 மணிக்கு எழுந்து விடுவேன். 4:30 மணிக்கெல்லாம் பேப்பர் கட்டை பிரித்து சைக்கிளில் வைத்துக்கொண்டு கிளம்புவேன். ஆரம்பத்தில் இருட்டில் நாய்கள் துரத்தும்;
தெருக்களில் வெளிச்சம் இருக்காது. கொஞ்சம் சிரமம் தோன்றியது. 'அக்கம்பக்கத்தாரும் இருட்டில் இந்த பெண் கிளம்பி செல்கிறாளே; பெண் ஒருத்தி வீடு வீடா போய் பேப்பர் போடுவதா' என்றெல்லாம் ஏளனம் செய்தார்கள்.
பல வீடுகளில் அதிகாலையில் எழும்புவது குடும்பத்தலைவிகள் தான். நான் பேப்பர் போடும் போது அவர்கள் என்னை அன்பொழுக பார்க்க, நான் அவர்களிடம் ஓரிரு நிமிடங்கள் நலம் விசாரிக்க, இன்று 200 வாசகர் குடும்பங்களும் என் உறவாகி இந்த பணி 'இனிய இசையாய்' என்னுள் இணைந்து விட்டது.
இந்த வேலையை ஏழு மணிக்குள் முடித்து விடுவேன். ஒன்பது மணிக்கு தனியார் பள்ளி வேலைக்கு சென்று விடுவேன். 'ஆசிரியை பேப்பர் வினியோகிக்கிறாரே' என்று என் மாணவர்களும் நினைப்பது இல்லை. எப்போதும் போலவே பழகுகின்றனர். மாலையில் வீட்டிற்கு வந்து ஆன்லைனில் இசை வகுப்புகள் நடத்துகிறேன்.
'நியூஸ் பேப்பர் கேர்ள்' ஆன பிறகு தான் திருமணம் நடந்தது. கணவர் ஹரிகிருஷ்ணன் மெக்கானிக்காக பணிபுரிகிறார். அவரும் காலையில் 'சைக்கிளிங்' செல்லும் போது எனக்கு உதவுகிறார்.
வயலின் வாசிப்பேன்; பாடுவேன், பரதநாட்டியம் ஆடுவேன். கச்சேரிகளுக்கு செல்கிறேன்.
பிஎச்.டி., முடித்த பிறகு அரசு வேலை கிடைத்து வெளியூர் சென்றாலும் அந்த ஊரில் அதிகாலையில் நாளிதழ் வினியோகம் செய்ய வேண்டும் என்பதே ஆசை. அது எனக்கு கிடைக்கும் கூடுதல் வருமானத்திற்காக அல்ல. இந்த பணியில் அப்படி ஒரு மன நிறைவு. ஏனெனில் நான் 200 வீடுகளுக்கு தினந்தோறும் தருவது வெறும் பேப்பர் அல்ல; தினமும் புதிதாய் மலரும் அறிவின் பொக்கிஷம்!
இவ்வாறு நம்மிடம் பேசியவாறே, உதயம்பேரூர் என்ற அந்த சிற்றுாரின் தென்னந்தோப்புகளுக்குள் மறைந்திருக்கும் வாசகர் வீட்டின் வாசலுக்கு சென்று 'சார் பேப்பர்!' என்று சத்தமாய் அழைத்தார் அந்த சங்கீத ஆசிரியை!
பாராட்ட: an.anitha3@gmail.com
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!