Load Image
Advertisement

6 லட்சம் மரக்கன்றுகள்... 64 குறுங்காடுகள்

காணும் இடங்கள் எல்லாம் காடுகள்... இருக்கும் இடமெல்லாம் இயற்கை சூழல்... சுவாசிக்கும் காற்றெல்லாம் சுத்தமான காற்று... பசுமை போர்த்திய ஊர்கள்... இதெல்லாம் சாத்தியமா என்றால் சாத்தியம்தான் என சத்தியம் செய்கிறார் 45 வயது 'காடு' மணி... இல்லை... இல்லை... கலைமணி. இந்த காடுகளின் காதலன் திருவாரூரைச் சேர்ந்தவர்.
திருவாரூர் ஆழித்தேர் போன்று இவர் நட்ட மரக்கன்றுகளும், உருவாக்கிய குறுங்காடுகளும் இன்று பிரமாண்டமாக உருவெடுத்திருக்கின்றன. எப்படி சாத்தியமானது... அவரே தினமலர் பொங்கல் மலருக்காக இங்கே பேசுகிறார்....

''நான் பிளஸ் 2 தாவரவியல் பாடம் படிக்கும் ேபாது மரங்கள் குறித்து அறிய வேண்டியிருந்தது. இதற்காக மரக்கன்றுகளை நட ஆரம்பித்தேன். பின் கல்லுாரியில் எம்.எஸ்.சி., வனவாழ் உயிரியல் படித்தபோது மரக்கன்றுகளின் மீது காதல் ஏற்பட்டது. அதற்கு பின் நேரு யுவகேந்திராவில் பணிபுரிந்த போது, இளைஞர் மன்றங்கள் மூலம் மரக்கன்றுகளை நட்டேன்.
இதுவரை 142 விருதுகளை பெற்றுள்ளேன். செல்லும் இடங்களில் எல்லாம் நாட்டு மரங்களான மகிழம், நாவல் போன்றவற்றை நட ஆரம்பித்தேன். பலரும் மரம் நட முன்வந்தார்கள். அவர்களுக்கு மரக்கன்றுகளை விலைக்கு வாங்கி கொடுத்தேன்.
தேவை அதிகமாக, 2006 முதல் உற்பத்தி செய்து 6 லட்சம் மரக்கன்றுகளை கொடுத்துள்ளேன்.

'வனம்' பின்னணி
நண்பர் நடராஜனுடன் சேர்ந்து 'கிராம வனம்' என்ற அமைப்பை தொடங்கி மரக்கன்றுகளை நட ஆரம்பித்தேன். இதில் 117 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். தமிழகத்தில் 33.3 சதவீதம் வனப்பரப்பு இருந்தால்தான் சுற்றுச்சூழலுக்கு நல்லது. துாய்மையான ஆக்சிஜன் கிடைக்கும். பறவைகளுக்கு வாழ்விடம் பாதிக்காது.
பல்லுயிர் பாதுகாக்கப்படும். ஆனால் 22.2 சதவீதம்தான் நம்மிடம் உள்ளது. இதனால் ஒரே இடத்தில் 1000 முதல் 5000 மரக்கன்றுகளை நட்டு குறுங்காடுகளை உருவாக்கினோம். இதுவரை 17 மாவட்டங்களில் 64 குறுங்காடுகளை உருவாக்கியுள்ளோம்.
தனியார் அமைப்புகளுக்கு காடுகளை உருவாக்குவது குறித்து ஆலோசனையும் வழங்கி வருகிறோம். 'பசுமை முதன்மையாளர்' என்ற விருது தமிழக அரசால் வழங்கப்பட்டது.
2023 மார்ச்சிற்குள் 10 காடுகளை உருவாக்க உள்ளோம். கல்லுாரிகளில் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க செய்து வருகிறோம். அதிகபட்சமாக மயிலாடுதுறை மன்னன் பந்தல் கல்லுாரியில் 174 வகை மரக்கன்றுகளை நட்டுள்ளோம். அழிந்த, பாரம்பரியமான 174 வகை நெல் விதைகளை தேடி கொண்டு வந்த 'நெல்' ஜெயராமன் நினைவாக அந்த எண்ணிக்கையில் நட்டோம்.
மரங்கள் குறித்து விழிப்புணர்வு கண்காட்சியும் நடத்தி வருகிறோம். முதல் கண்காட்சியை நடிகர் விவேக் தொடங்கி வைத்தார். இதன்பிறகே மரக்கன்றுகள் நடுவதில் அதிக ஆர்வம் கொண்டு முழு வீச்சில் அவர் இறங்கினார். நாங்கள் மரக்கன்றுகளை மட்டும் நடுவதில்லை. சுற்றுச்சூழல் பாதுகாப்பு கூட்டமும் நடத்துகிறோம்.

காடு அறியும் பயணம்
காடு அறிதல் பயணம் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ஒருமுறை காடுகளுக்கு பயணிக்கிறோம். சமீபத்தில்கூட திருநெல்வேலி களக்காடு சென்று வந்தோம். 3 மாதத்திற்கு ஒருமுறை கடற்கரை ஓரங்களிலும், மலை பயணத்திலும் பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து அழித்து வருகிறோம்.
அடுத்ததாக 'கோயில் காடுகள்' என்ற அடிப்படையில் கோயில் இடங்களில் மூலிகை மரக்கன்றுகளை நட்டு வருகிறோம். நாகப்பட்டினம் மாவட்டம் திருப்புகழுர் ஊராட்சி அரசலுாரில் 24 வகை மூலிகை கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறோம்.
காடுகளை வனத்துறை மட்டும் உருவாக்க முடியாது. சமூக காடுகள் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் மக்களும் வளர்க்க முடியும். புறம்போக்கு இடங்கள், கோயில் இடங்கள், ஆக்கிரமிப்பு இடங்களில் உரிய அனுமதி பெற்று உருவாக்கலாம்.
அந்தந்த ஊர் மண்ணில் வளர்ந்த, வளரும் மரக்கன்றுகளை நட்டால் நல்லது என்கிறார் இந்த காடுகளின் காதலன் கலைமணி. வாழ்த்த: 98424 67821வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement