ஜல்லிக்கட்டு என்றாலே மதுரை தான் நினைவுக்கு வரும். அடுத்தடுத்து 3 நாட்கள் மூன்று இடங்களில் ஜல்லிக்கட்டு அமர்க்களப்படும்.
ஜன.15ல் அவனியாபுரம், 16ல் பாலமேடு, 17ல் அலங்காநல்லுாரில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளை காண வெளிநாட்டு, வெளிமாநில பயணிகள் வந்து குவிந்து விடுவர். ஏதோ ஒரு காளையை அடக்கினோம், பரிசு பெற்றோம் என இளைஞர்கள் தங்கள் வீரத்திற்கு விடுமுறை விடுவதில்லை. அடுத்தடுத்து களத்தில் நின்று, தங்களை எதிர்கொள்ள வரும் காளைகளின் திமில் பிடித்து உற்சாக துள்ளல் போடும் இளைஞர்களின் சந்தோஷம்... அடுத்த ஜல்லிக்கட்டு நடக்கும் வரை மனதில் நிற்கும்.
அலங்காநல்லுார்
மதுரை மாவட்டம் அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு அதிசயத்திற்கும் ஆச்சர்யத்திற்கும் பெயர்பெற்றது. அலங்காநல்லுார் வாடிவாசல் கிழக்குப்பக்கமாக இருக்கும். காளைகள் உள்ளிருந்து வாடிவாசல் வழியாக வந்து வடக்குப்பக்கமாக திரும்ப வேண்டும். பிற இடங்களில் வாடிவாசல்கள் நேரடியாக ஒரே திசையில் இருக்கும் என்கிறார் அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு விழா கமிட்டி தலைவர் ரகுபதி.
''முதலில் காளியம்மனுக்கு கிடா வெட்டி பூஜை தொடங்குவோம். அபிஷேகம், ஆராதனை, மாவிளக்கு பூஜை நடைபெறும். நுாறாண்டுகளாக நிரந்தரமாக வாடிவாசல் அமைக்கப்பட்டுள்ளது.
அலங்காநல்லுார் முனியாண்டி சுவாமி சார்பில் கிராமத்து காளையும் அருவிமலை கருப்பசாமி கோயில் காளையும், பூஜைக்கு பின் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்படும்.
அடுத்ததாக வலசை கிராம பொது காளை அவிழ்த்து விடப்படும். 3 காளைகளையும் மாடுபிடி வீரர்கள் பிடிக்கக்கூடாது. அதன்பின்பே ஜல்லிக்கட்டு துவங்கும். பங்கேற்கும் அனைத்து காளைகளுக்கும் தங்கக்காசு பரிசாக வழங்கப்படுகிறது. பிடிபடாத மாடு, மாடுகளை பிடிக்கும் வீரர்களுக்கு பரிசுகள் உண்டு. வாடிவாசலில் இருந்து காளை வெளியேறிய 50 மீட்டர் துாரத்திற்குள் பிடிக்க வேண்டும். அதிகபட்சம் 30 வினாடிகளில் ஆட்டம் முடிந்துவிடும். சில காளைகள் யாருக்கும் அஞ்சாமல் களத்தில் நின்றாடும் போது அதிகபட்சம் ஒரு நிமிடம் வரை தாக்குபிடிக்கும் என்றார்.
பாலமேடு
மஞ்சமலையாற்றில் அமைந்துள்ள பாலமேடு வாடிவாசல் நுாறாண்டு பழமையானது என்கிறார் பாலமேடு கிராம பொது மகாலிங்கசுவாமி மடத்து கமிட்டி செயலாளர் பிரபு.
''மார்கழி பிறந்தவுடன் மஞ்சமலை சுவாமி வாடிவாசல் முன்பாக தினமும் பெண்கள் கோலமிட்டு வழிபடுவர். சுண்ணாம்புக்கல், கருப்பட்டியால் கட்டப்பட்ட பெருமையுடையது இந்த வாடி வாசல். இந்த இடத்தில் கிராமத்தினர் செருப்பணிந்து நிற்க மாட்டோம். ஜன. 1 முதல் மாட்டுப்பொங்கல் வரை அசைவம் சாப்பிட மாட்டோம். எங்கள் ஊருக்கு சொந்தமான 7 காளைகளுக்கு மரியாதை செய்வோம். அவற்றை வணங்கி வாடிவாசல் வழியாக முதலில் அனுப்புவோம். அதன்பின் மாடுபிடி விழா தொடங்கும்.
எங்கள் ஊரில் மாட்டுப்பொங்கலன்று தான் ஜல்லிக்கட்டு. எங்கள் ஊரில் போட்டியை எந்த இடத்திலிருந்தும் பார்ப்பதற்கு வசதியாக மேடை அமைக்கப்பட்டிருக்கும்.
ஒலிம்பிக் ஓட்டப்பந்தயத்தை போல ஜல்லிக்கட்டு வீரர்களின் வெற்றி, தோல்வியை சில வினாடிகளே தீர்மானிக்கின்றன. இந்த 'திரில்லிங்' வெற்றியும் ஒரு போதை தான். போட்டி துவங்குவதற்கு 3 மாதங்கள் முன்பிருந்தே, ஒத்திகை பார்ப்பர்.
களத்தில் காளையின் திமிலைப் பிடித்து கால் தரையில் படாமல் 3 முறை சுற்றினால் வீரருக்கு வெற்றி. திமிலை தொட்டவுடன் தலையை உலுக்கி துாக்கி எறிந்தால் காளைக்கு வெற்றி. ஒரே காளையை இருவர் பற்றி சுற்றினாலும் வெற்றி கிடைக்காது. 3வது சுற்று பாதியில் திமிலை கைவிட்டாலும் பரிசு கிடைக்காது.
மீண்டும் அடுத்தாண்டு ஜல்லிக்கட்டு வரை வெற்றிக்காக காத்திருக்க வேண்டும். கடந்தாண்டு கைவிட்ட வெற்றியை எட்டிப் பிடிக்க காத்திருக்கும் அனைத்து ஜல்லிக்கட்டு வீரர்களுக்கும் வாழ்த்துகள்.
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!