தமிழ், சமூகம், வரலாற்றை நம் மனதில் பசைபோட்டு அப்பிவிட்டவர்கள். காலம் கடந்தும் நிற்கக்கூடியவை மட்டுமல்ல. காலத்தை ஒட்டியும் நிற்கக்கூடிய பாடல்களை எழுதியவர்கள் உடுமலை நாராயணகவியும், அவரது சீடர் கவிஞர் மருதகாசியும்.
தன்னை வளர்த்த உடுமலை நாராயண கவி பற்றி “என்னுடைய இரண்டாயிரம் பாடலும் கவிராயரின் இரண்டு பாடலுக்கு சமமாகாது,' என்று மருதகாசி கூறியுள்ளார். சமகாலத்தில் ஒரு துறையில் பணிபுரிந்த இருவர், தங்களுக்குள் போட்டி, பொறாமை கொள்ளாமல், ஒருவர் தகுதி மீது இன்னொருவர் காட்டிய அக்கறை வியக்க வைக்கிறது. இவர்களின் வாழ்க்கையிலிருந்து இளம் தலைமுறை நெஞ்சில் நிலைநிறுத்த வேண்டிய பாடங்கள் பல.
உடுமலை நாராயண கவி
உடுமலைப்பேட்டை அருகே பூவிளைவாடி என்னும் பூளவாடியில் பிறந்தவர். வறுமையால் நான்காம் வகுப்போடு படிப்பை நிறுத்தினார். மதுரை சங்கரதாஸ் சுவாமியிடம் யாப்பிலக்கணம் கற்றார். நாடகங்களுக்கு உரையாடல், பாடல் எழுதி பொருளீட்டினார்.
'சம்பள தேதி ஒண்ணிலே இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம் - இருபத்தொண்ணிலே இருந்து முப்பது வரைக்கும் திண்டாட்டம்,' என 1955ல் மாதச் சம்பளக்காரர்களின் நிலையை துல்லியமாக எழுதிய தீர்க்கதரிசி.
'விஞ்ஞானத்தை வளர்க்கப்போறேண்டி-பொஞ்சாதி புருஷன் இல்லாம புள்ளயும் குட்டியும் பொறக்குறாப்புல விஞ்ஞானத்தை வளர்க்கப்போறேண்டி -நெல்லுகுத்த, மாவரைக்க, நீர் இறைக்க மிஷினு அல்லும், பகலும் ஆக்கி அடுக்க அதுக்கொரு மிஷினு கொல்லபுரத்தில குழாய் வைக்கணும் குளிரு மிஷினும் கூட வைக்கணும், பள்ளிக்கூடத்துக்கு புள்ளைங்க போகாம படிக்க கருவி பண்ணியும் வைக்கணும்'-இப்படி இன்றைய தொழில்நுட்ப வாழ்க்கையை 1949ல் முன்னுணர்ந்து எழுதிய மேதை.
'பணத்தை எங்கே தேடுவேன், உலகம் செழிக்க உதவும் பணத்தை எங்கே தேடுவேன், கருப்பு மார்க்கட்டில் போய் மறைந்தாயோ, கஞ்சன் கையில் சிக்கிக் கொண்டாயோ,'- என இவரது பாடல்கள் நீள்கின்றன. இவரது உதவியாளராக இருந்தவர் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன்.
கவிஞர் மருதகாசி
திருச்சி மாவட்டம் மேலக்குடிகாடுவில் பிறந்தவர். 'மணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏரு பூட்டி வயக்காட்டை உழுது போடு சின்னக்கண்ணு, ஆத்துாரு கிச்சிடிச்சம்பா பாத்து வாங்கி வெதை வெதைச்சு, கருத நெல்லா வெளையவச்சு மருதெ சில்லா ஆளெவெச்சு அறுத்துப்போடு களத்து மேட்டிலே, பொதியெ ஏத்தி வண்டியிலே பொள்ளாச்சி சந்தையிலே விருதுநகர் வியாபாரிக்கு வித்துப் போட்டு பணத்தை எண்ணு செல்லக்கண்ணு- என விவசாயத்தில் அந்தந்த ஊர்களின் சிறப்பை எழுதியவர்.
'கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி! என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில் ஒழுங்காய் பாடுபடு வயல்காட்டில் உயரும் உன் மதிப்பு அயல்நாட்டில்,' என விவசாயியின் மேன்மையை எழுதியவர்.
இவரது 'தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம்', பாடலுடன்தான் தை பிறந்து கொண்டிருக்கிறது. 'ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லை! என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லை!, மாட்டுக்கார வேலா ஓ மாட்டைக் கொஞ்சம் பார்த்துக்கடா-என விவசாய வாழ்க்கை குறித்து 17 பாடல்கள் எழுதிய கவிஞர்.
'மனுஷனை மனுசன் சாப்பிடுறாண்டா தம்பிப்பயலே - இது மாறுவதெப்போ, தீருவதெப்போ நம்மக் கவலே தரையைப் பார்த்து நிக்குது நல்ல கதிரு - தன் குறையை மறந்து மேலே பாக்குது பதரு-அதுபோல் அறிவு உள்ளது
அடங்கிக் கிடக்குது வீட்டிலே-எதுக்கும் ஆகாத சிலது ஆர்ப்பாட்டம் பண்ணுது நாட்டுலே' - சிந்தனையைத் துாண்டும் இவரது பாடல் மூலம் எம்.ஜி.ஆர்., புரட்சி நடிகரானார். நான்காயிரம் பாடல்களை சொத்தாக மக்களுக்கு வழங்கிய மருத காசியால் தமிழ் கவிதை உலகம் தலைநிமிர்ந்து நிற்கிறது.
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!