குழந்தைகளை பாதிக்கும் இதய கோளாறுகளில் முக்கியமானது, பிறவியிலேயே வரும் இதயக் கோளாறுகள் தான்.
நாடு முழுதும், ஆண்டிற்கு 2.5 லட்சம் குழந்தைகள் பிறக்கின்றன. பிறந்த ஒரு சில நாட்கள் அல்லது வாரங்களில் உடல் கோளாறு ஏற்படும் குழந்தைகளில், 10 ஆயிரம் குழந்தைகள் தான் மருத்துவ மனைக்கு வருகின்றன. பல குழந்தைகள் என்ன பிரச்னை என்று தெரியாமலேயே இறந்து விடுகின்றன.
இத்தனைக்கும், 2.5 லட்சத்தில், 90 சதவீதம் மருத்துவமனைகளில் தான் பிறக்கின்றன. பிரச்னை என்று வரும் போது, பெரும்பாலும் கண்டுபிடிக்காமல் விட்டு விடும் நிலை உள்ளது. குழந்தை பிறந்ததும் முழுமையாக பரிசோதனை செய்தால், இதயத்தில் என்ன பிரச்னை என்பதை சுலபமாக கண்டுபிடிக்கலாம்.
கருவில் இருக்கும் குழந்தையின் இதய நலத்தை அறிய, 20 வாரங்களில், 'பீட்டல் எக்கோ' என்ற பரிசோதனை உள்ளது. சில இதயக் கோளாறுகளுக்கு, குழந்தை பிறந்த உடனேயே அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும். உடலின் பிற பாகங்களுக்கு, நுரையீரலுக்கு என, இரண்டு பெரிய ரத்தக் குழாய்கள் உள்ளன.
இதயத்தில் இருக்கும் ஓட்டைகள் போன்ற சில வகை இதயக் கோளாறுகள், எந்த சிகிச்சையும் இல்லாமல் தானாகவே குணமாகக் கூடியவை.
அறிகுறிகள்
பிறந்த குழந்தையின் பிரதான வேலையே, தாய்ப்பால் குடிப்பது தான். பால் குடிக்க முடியாமல் சிரமப்படுவது, மூச்சு திணறுவது, அதீதமாக வியர்த்துக் கொட்டுவது, அழும் போது உடல் முழுதும் நீல நிறமாக மாறுவது, பால் குடித்தாலும் உடல் எடையே கூடாமல் இருப்பது.
இவையெல்லாம் இருந்தால், இதயத்தில் பிரச்னை இருக்கலாம். உடனடியாக குழந்தைகள் நல இதய டாக்டரிடம் ஆலோசனை பெற வேண்டும்; மேலும், குழந்தைகளுக்கு வரும் இதய பிரச்னைகளை, 95 சதவீதம் முழுமையாக குணப்படுத்தலாம்.
உலகத்திலேயே மிகவும் பாதுகாப்பான இடம், அம்மாவின் கருவறை தான். கருவிலேயே கோளாறு இருப்பது தெரிந்தாலும், எந்தப் பிரச்னையும் இல்லை; பிறந்த பின் தான் அதற்கான சிகிச்சை தேவைப்படும்.
கருவுற்று இருக்கும் போது, வழக்கமாக செய்யப்படும் 'எக்கோ' பரிசோதனையில், கருவின் இதயத்தில் பிரச்னை இருக்கலாம் என்ற சந்தேகம் இருந்தால், பீட்டல் எக்கோ செய்ய வேண்டும்.
இது தவிர, 'ஹை ரிஸ்க் பிரக்னென்சி' எனப்படும், ஏற்கனவே குழந்தை உருவாகி, இதய பிரச்னைகள் இருப்பது, தாய்க்கு சர்க்கரை கோளாறு, வலிப்பு நோய், வேறு உடல் கோளாறுகளுக்கு தொடர்ந்து மருந்து சாப்பிடுவது.
மதுப் பழக்கம், தாய்க்கு தொற்று, தட்டம்மை, ரூபெல்லா போன்றவற்றிற்கு தடுப்பூசி போடாமல் இருப்பது போன்ற நிலைகளில், கருவிற்கு பீட்டல் எக்கோ செய்ய வேண்டும்.
காரணம், இப்படிப்பட்ட குழந்தைகளுக்கு இதயக் கோளாறு வரும் வாய்ப்பு உள்ளது.
பிறந்த பின் வரும் கோளாறுகள்
பாக்டீரியா தொற்றால் தொண்டையில் சளி, காய்ச்சல் வரும். சரியான மருந்து எடுக்காமல் போனால், நம் கிருமியை அழிக்க, எதிர்ப்பணுக்களை உடல் தானே உருவாக்கும். இவை அதிகமானால் இதயம், மூட்டுகளை பாதிக்க துவங்கும்; இதய வால்வுகளை செயலிழக்கச் செய்யும். இதற்கு, 'ருமாட்டிக்' காய்ச்சல் என்று பெயர்.
அனைத்து மேலை நாடுகளிலும், இதை முழுதும் ஒழித்து விட்டனர். நம் நாட்டில், தொண்டையில் ஏற்படும் தொற்றை அலட்சியம் செய்கின்றனர்.
இது தவிர, 'கார்டியோ மயோபதி' எனப்படும் வைரஸ் தொற்றால், இதயத்தின், 'பம்பிங்' திறன் குறையும். ஐந்து நாட்கள் தொடர்ந்து காய்ச்சல், எந்த மருந்துக்கும் கட்டுப்படாமல் இருக்கும்.
ஐந்து நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால், இதை கண்டுபிடிக்க முடியும். உடல் முழுதும் நிணநீர் கட்டிகளை உருவாக்கும். இந்த நிலையில் கண்டுபிடித்தால் தான், சிகிச்சை செய்து சரி செய்யலாம்.
கண்டுபிடிக்காமல் விட்டால், கரோனரி ரத்தக் குழாய் வீக்கமாகி, இதயம் வீங்கும்; இந்த நிலையில், வாழ்நாள் முழுதும் மருந்து சாப்பிட வேண்டும். சில குழந்தைகளுக்கு, இளம் வயதிலேயே மாரடைப்பு வரவும் வாய்ப்பு உள்ளது. ஒன்று - ஐந்து வயது குழந்தைகளுக்கு, கவாசாக்கி பொதுவான விஷயம்.
நெருங்கிய உறவினர்களுக்குள் திருமணம் செய்யும் போது, மரபியல் ரீதியாக இதயக் கோளாறுகள் வரலாம்.
பிறந்த 10 நாட்களுக்குள் பரிசோதனை செய்தால், எந்தவித இதயக் கோளாறையும் கண்டுபிடித்து விடலாம்.
டாக்டர் சி.எஸ்.முத்துகுமரன்,
குழந்தைகள் நல இதய நோய் சிறப்பு மருத்துவர்,
சென்னை.
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!