மழைக் காலங்களில், குழந்தைகளுக்கு தொற்று நோய் பாதிக்கும் தன்மை பொதுவாகவே அதிகம் இருக்கும். இதற்கு பல காரணங்கள் உள்ளன; பிரதான காரணம், காற்று.
காற்று மூலம் பரவும் தொற்றுகள் மிக அதிகமாக இருக்கும். அடுத்து, தண்ணீரின் தரம் குறைந்து போகும். இதனால், உணவு வாயிலாக பரவும் தொற்றுகள் அதிகமாகி வாந்தி, பேதியால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவர்.
இன்புளுயென்சா உட்பட வைரஸ் தொற்றுகளும் மழை, குளிர் காலத்தில் அதிகமாக இருக்கும்; கொரோனா வைரஸ் இன்னும் இருக்கிறது. இது போல எல்லா வைரசும் இருப்பதால், ஏதாவது ஒரு வைரசின் பாதிப்பு, குழந்தைக்கு வருவதற்கான வாய்ப்புஅதிகம் உள்ளது.
ஒருவருக்கு வைரஸ் தொற்று வந்தால், வீட்டில் உள்ள மற்றவர்களுக்கும் பரவுவதற்கான வாய்ப்புகள் இருக்கும். பல வைரஸ் கிருமிகள் இருந்தாலும், ஒரு நேரத்தில் ஒரு வைரஸ் தான் தொற்றும்.
எந்த வைரஸ் பாதிப்பு வந்தாலும் சளி, இருமல் அதிகமாக இருக்கும்; கூடவே காய்ச்சலும் இரண்டு, மூன்று நாட்களுக்கு இருக்கும். சளி, இருமல், காய்ச்சல் மூன்று நாட்களுக்கு மேல் இருந்தால், டாக்டரிடம் அழைத்து வர வேண்டியது அவசியம். பொதுவான அறிகுறிகளை வைத்தே, என்ன மாதிரியான பிரச்னை என்பதை தெரிந்து சிகிச்சை தர முடியும்; சில குழந்தைகளுக்கு ரத்தப் பரிசோதனை தேவைப்படலாம்.
கொரோனா இருந்தாலும், அதற்கென்று தனியாக பரிசோதனை செய்யச் சொல்வதில்லை. ஆரம்ப கட்டத்தில் இருந்தால், சிகிச்சை தருவதில் பெரிய மாற்றம் எதுவும் செய்யப் போவதில்லை. தீவிர அறிகுறிகள் இருந்தால் மட்டுமே, பரிசோதனை செய்து, உறுதி செய்த பின் சிகிச்சை தருகிறோம்.
ஏன் மூன்று நாட்கள்?
சாதாரணமான காய்ச்சல், சளி என்று நினைப்போம்; ஆனால் அது டைபாய்டாகவோ, நெஞ்சில் சளி இருந்து, அது நிமோனியாவாகவோ மாறலாம். சிறுநீரகத் தொற்றாக இருந்து அதனால் காய்ச்சல் வரலாம்.
மூன்று நாட்கள் தாண்டியும் காய்ச்சல் இருந்தால், இதையெல்லாம் யோசிப்பது அவசியம். இன்புளுயென்சாவிற்கு தடுப்பூசி உள்ளது; இதை ஆண்டிற்கு ஒரு முறை போட்டுக் கொள்ளலாம். அந்தந்த ஆண்டில் இன்புளுயென்சாவை உண்டாக்கும் வைரசில், என்ன மாதிரியான மரபணு மாற்றம் ஏற்படுமோ, அதற்கேற்ப, பிப்ரவரி மாதத்தில் ஒன்றும், ஆகஸ்ட் மாதத்தில் இன்னொன்றும் வெளி வரும்.
நமக்கு நவம்பர் மாதம் மழைக்காலம் என்பதால், ஆறு மாத குழந்தை முதல் எந்த வயதினரும் ஆகஸ்ட் மாதத்திலேயே இந்த தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம். இதனால் நோய் வராமல் தடுக்கும்; வந்தாலும் அதன் தீவிரத்தை குறைக்கும். நிமோனியாவிற்கு தடுப்பூசி இருக்கிறது; அந்த அளவிற்கு வீரியமாக இல்லை. தடுப்பூசி போடுவதால், பக்க விளைவுகள் எதுவும் இல்லாமல், அந்த சீசனுக்குரிய பாதுகாப்பு அதிகரிக்கும்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, பல குழந்தைகளுக்கு வழக்கமாக போடும் தடுப்பூசியை போடாமல் விட்டு விட்டனர். தட்டம்மை இல்லாமல் இருந்தது; இப்போது தட்டம்மை வரும் வாய்ப்பு அதிகமாகலாம். மும்பை, டில்லியில் இது அதிகரித்து வருகிறது; நமக்கும் வர வாய்ப்பு அதிகம்.
சாப்பாடும், சளியும்
பொதுவாக, நாம் சாப்பிடும் உணவுகளால் சளி வராது. ஏற்கனவே தொற்று ஏற்பட்டவரிடம் இருந்து பரவுகிறது. உடல்நிலை சரியில்லாத போது, குழந்தைக்கு பழம், காய்கறிகள், தயிர் கொடுப்பதால் நல்ல ஊட்டச்சத்துகள் கிடைக்கும். வெளியில் வாங்கி தருவதை தவிர்த்து, சுத்தமாக வீட்டில் செய்த உணவுகளை மட்டும் சாப்பிட பழக்க வேண்டும்.
டாக்டர் ஜே.ஜெயகுமார்,
குழந்தைகள் நல தொற்று நோய் மருத்துவர், சென்னை.044 - 4477 7000
சரியாக வாரம் ஒரு முரை சுத்தம் செய்யப்படாத குளிர் சாதன பெட்டியில் வைத்து சாப்பிடப்படும் பழங்கள் ஐஸ் கிரீம் போன்றவை நிச்சயம் இருமலை , சளியை ஜலதோஷத்தை வரவைக்கும்