தாயின் வயிற்றில் இருந்து குழந்தைகள் பிறப்பது தான், உலக நியதி. ஆனால், தந்தையின் கண்ணில் இருந்து, ஒரு மகன் பிறந்தான் என்றால், அதிசயம் தானே... அதுவும், அந்த கண், நெற்றியில் இருந்தது என்றால், இன்னும் வியப்பாக இருக்கிறது, அல்லவா!
'யாவையும் படைப்பாய் போற்றி...' என்று, சிவனைப் பற்றி துவங்கும் பாடல் ஒன்றில், 'நெற்றிச் செங்கணா போற்றி, யாவையும் அறிந்தாய் போற்றி, யாவையும் மறந்தாய் போற்றி...' என்ற மூன்று வரிகள் குறிப்பிடத்தக்கவை.
சிவனுக்கு, ஒரு கண் சூரியன், இன்னொரு கண் சந்திரன், மற்றது நெற்றிக்கண். இதில், நெற்றிக்கண்ணின் தத்துவம், மகத்துவம் நிறைந்தது.
மனிதனுக்கு கோபம், மகிழ்ச்சி, துக்கம் போன்ற எண்ணற்ற உணர்வுகள், அவனுக்குள் சூழ்நிலைக்கேற்ப ஏற்படுகிறது. இதை யாரிடமாவது கொட்டி விட்டால், மனம் லேசாகி விடுகிறது. உள்ளுக்குள்ளேயே புதைத்தால், அது ஏதோ ஒரு வழியில் வெடித்து வெளிப்பட்டு விடும். குறிப்பாக, கோபத்தின் போது வாயின் வழியே வார்த்தைகளாகவும், கை, கால்கள் வழியே தாக்குதலாகவும் வெளியாகிறது.
சிவனும் அப்படித்தான். அவரிடம் வரம் பெற்று, அதையே தவறாகப் பயன்படுத்தும் போது, அவரது உணர்வுகள் நெற்றிக்கண் வழியே அக்னியாக வெளிப்படுகிறது. வரம் பெற்றவன் அழிந்து போகிறான். அவ்வாறு அழிந்தவர்களில் ஒருவன் தான், பத்மாசுரன்.
காஷ்யபர் என்ற புனிதமான முனிவரின் மகனாகப் பிறந்தான், பத்மாசுரன். காஷ்யபர், அவனை பக்தி மார்க்கத்தில் ஈடுபடுத்தி, மக்களுக்கு நன்மை செய்ய அறிவுறுத்தினார். அவனோ, தன் தவ பலத்தால் பெற்ற வரத்தைப் பயன்படுத்தி, மக்களை துன்புறுத்தினான்.
விளைவு, சிவனின் நெற்றிக்கண் திறந்தது. அதிலிருந்து புறப்பட்ட, கதிர்கள் சரவணப் பொய்கை என்ற குளத்திலுள்ள ஆறு தாமரை மலர்களில் விழுந்தது. ஒவ்வொன்றும், ஒரு குழந்தையாய் மாறியது.
பார்வதி அந்த குழந்தைகளை அள்ளி எடுத்த போது, அது ஒரே குழந்தையாக மாறியது. ஆனால், தலை மட்டும் ஆறு. எந்த திசையில் இருந்து எதிரிகள் வந்தாலும், அவற்றை பார்க்கும் அமைப்பு இது. அவரை, கார்த்திகை நட்சத்திர மண்டலத்தில் இருந்த ஆறு பெண்கள் வளர்த்தனர். எனவே, அவர்கள், கார்த்திகை பெண்கள் எனப்பட்டனர். ஒரு தமிழ் மாதத்திற்கு இவர்களது பெயர் சூட்டப்பட்டு கவுரவிக்கப்பட்டனர்.
கார்த்திகை மாத கார்த்திகையன்று, இவர்களின் சக்தி அபாரமாக இருக்கும் என்பதால், அன்று, சிவனும், முருகனும் நெருப்பாக மலைகளில் ஒளிர்கின்றனர். இதனால் தான், சிவன், முருகன் கோவில்களில் தீபம் ஏற்றுகின்றனர்.
இதுதவிர, சொக்கப்பனையும் கொளுத்துவர். சொர்க்க பாவனை என்பதே, சொக்கப்பனை ஆனது. சிவனை நெருப்பு வடிவில் தரிசிக்கும் போது, நாமும் நம் ஆணவத்தை நெருப்பில் எரிக்கும் உணர்வைப் பெற வேண்டும்.
ஆணவம் அழிந்து விட்டால், மனம் ஆன்மிகப் பாதையில் செல்லும். அப்போது, சொர்க்கத்தில் இருப்பது போன்ற பாவனை ஏற்படும். நம் முன்னோர்கள் சொக்கப்பனை போன்றவற்றை வேடிக்கைக்காக மட்டும் செய்யவில்லை; ஒவ்வொன்றிலும் ஒரு தத்துவத்தை புதைத்து வைத்தனர்.
இந்த தத்துவங்களின் வழி நடந்து, கார்த்திகை தீப திருவிழாவை அர்த்தமுடன் கொண்டாடுவோம்.
தி. செல்லப்பா
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!