Load Image
Advertisement

கார்த்திகை பட்டத்தில் எள் சாகுபடி

எள் குளிர் மற்றும் கோடை கால பயிர். கார்த்திகை, மார்கழியில் தரிசு, மானாவாரி பகுதியில் சாகுபடி செய்யப்படுகிறது. டி.எம்.வி. 7 ரகம் எக்டேருக்கு 850 கிலோ மகசூல் தரும். நேரானது, நடுத்தர கிளைகளுடன் பழுப்பு நிற விதைகளை உடையது. எள் விதை சிறிதாக இருப்பதால் விவசாயநிலம் கட்டிகள் இல்லாமல் பொலபொலப்பு தன்மை அதிகமாக இருக்க வேண்டும்.

2 முறை நாட்டுக்கலப்பை அல்லது சட்டிக்கலப்பை கொண்டோ உழவேண்டும். டிராக்டிரில் சட்டிப்பல்லு கொண்டு விதைப்பு நிலம் தயாரிக்க வேண்டும். கடைசி உழவின் போது ஒரு எக்டேருக்கு 12 டன் தொழு உரம் இட வேண்டும். ஒரு எக்டேருக்கான 5 கிலோ எள் விதையை 20 கிராம் டிரைக்கோடெர்மாவுடன் கலந்து விதை நேர்த்தி செய்து, 95 கிலோ மணலுடன் கலந்து விதைக்க வேண்டும்.

இதனால் பயிர்கள் சரியான இடைவெளியில் முளைப்பதோடு சரியான எண்ணிக்கையில் பராமரிக்கவும் முடியும். விதைத்த 15ம் நாளில் செடிக்கு செடி 30 செ.மீ., இடைவெளியில் பயிர்களை களைத்து விட வேண்டும். எள் பயிரில் களைகளால் மகசூல் பாதிப்பு ஏற்படுகிறது. விதைத்த 15 - 20 நாட்களில் முதல் களையும் 35 - 40 நாட்களில் 2வது களையும் எடுக்க வேண்டும். ஒரு எக்டேருக்கு 50 கிலோ யூரியா, 75 கிலோ சூப்பர் பாஸ்பேட், 25 கிலோ பொட்டாஸ் உரங்களை அடியுரமாக இடவேண்டும்.

45 கிலோ மணலுடன் 5 கிலோ மாங்கனீஸ் சல்பேட் உரம் கலந்து இட்டால் காய்களின் எண்ணிக்கையும் விதையின் எடையும் கூடும். மானாவாரியில் பூக்களின் எண்ணிக்கை குறைந்தால் விதைத்த 40ம் நாள் ஒரு எக்டேருக்கு 375 மில்லி பிளானோடிக்ஸ், ஒரு சதவீத டி.ஏ.பி., கரைசலை மாலை வேளையில் தெளிக்க வேண்டும்.

தத்துப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த மெத்தில் டெமட்டான் மருந்தை 1200 மில்லி ஒரு எக்டேருக்கு பயன்படுத்தலாம். வேரழுகல் இருந்தால் ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒரு கிராம் கார்பென்டசிம் மருந்தை மண்ணிலும் செடியிலும் தெளிக்க வேண்டும். பயிரின் தண்டு மஞ்சள் நிறத்திலும் காய்கள் பச்சை நிறத்திலிருந்து மஞ்சள் நிறத்திற்கும் விதைகள் லேசான பழுப்பு நிறத்திலும் காணப்பட்டால் அறுவடைக்கு உரிய காலமாகும்.

சரியான நேரத்தில் அறுவடை செய்யாவிட்டால் காய்கள் உடைந்து விதைகள் சிதறிவிடும். வேர்ப்பகுதியை மண்ணில் விட்டு தண்டுப் பகுதியை அறுத்து தண்டுப்பகுதி வெளியிலும் தலைப்பகுதி உட்புறமாக வட்ட வடியில் அடுக்க வேண்டும். 5 முதல் 7 நாட்களில் விதைகள் உதிர்ந்திருக்கும்.

- மகேஸ்வரன் திட்ட ஒருங்கிணைப்பாளர் (பொறுப்பு) அருண்ராஜ்,
சபரிநாதன் தொழில் நுட்ப வல்லுநர்கள்
சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையம்,
தேனி.
96776 61410



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement