கடந்த சில நாட்களாக 'மெட்ராஸ் ஐ' நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
சில ஆண்டுகளுக்கு முன் கோடை காலம், வசந்த காலம் என்று இரண்டு பருவங்களில் மட்டுமே இந்த தொற்றின் பாதிப்பு இருக்கும். தற்போது, ஆண்டு முழுதும் மெட்ராஸ் ஐ பாதிப்பு உள்ளது.
குறிப்பிட்ட நான்கு மாதங்கள் மிக அதிகம் பாதிப்பு இருக்கிறது. இது 'அடினோ' எனப்படும் வைரஸ் தொற்றால் ஏற்படும் பாதிப்பு. இந்த வைரசின் வீரியம், ஆண்டுதோறும் அதிகரித்து வருவது கவலை தரும் விஷயமாக உள்ளது.
ஆரம்ப காலங்களில் இந்த கண் பாதிப்பிற்கு, பாக்டீரியா தொற்று காரணமாக இருந்தது. தற்போது, வைரஸ் தொற்றால் வருகிறது என்பதோடு, அறிகுறிகளும் வித்தியாசமாக உள்ளன. முன்பெல்லாம் மெட்ராஸ் ஐ என்றாலே கண்கள் சிவந்து, வீங்கி, மஞ்சள் நிறத்தில் ஒரு திரவம் வடியும். காலையில் துாங்கி எழுந்தால், கண்களை திறக்கவே சிரமமாக இருக்கும்.
ஆனால், இப்போது வலி, எரிச்சல், அரிப்பு, வீக்கம் என்பது பொதுவான அறிகுறிகளாக உள்ளது.
இதனால், அந்தந்த பருவத்தில் ஏற்படும் அறிகுறிகளின் அடிப்படையில், சிகிச்சை முறையிலும் மாற்றம் செய்ய வேண்டியுள்ளது.
ஆரம்பத்தில், ஆன்டிபயாடிக் மருந்துகள் பயன்பட்டது; தற்போது, ஆரம்ப அறிகுறிகள் இருக்கும் போதே, சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது. சில நோயாளிகளுக்கு வைரஸ் பாதிப்பு சிகிச்சையோடு சேர்த்து, ஆன்டிபயாடிக் மருந்துகளும் அவசியம். காரணம், வீக்கம் மற்றும் கண்களை தேய்ப்பதால், இரண்டாம் நிலைத் தொற்று ஏற்படாமல் பாதுகாக்க வேண்டிஉள்ளது.
பெரும்பாலான நோயாளிகள், பாதிப்பு ஏற்பட்ட முதல் நாளே மருத்துவ ஆலோசனை பெறுவதில்லை. மருந்துக் கடைகளில் அவர்களாகவே 'ஆன்டி வைரல் ஜெல்' வாங்கி பயன்படுத்துகின்றனர்; இந்த மருந்தால் எந்த பலனும் இல்லை.
வயது வித்தியாசம் இல்லாமல், அனைவரையும் பாதிக்கும் தொற்று இது. வீட்டில் ஒருவருக்கு வந்தால், மற்றவர்களுக்கும் வருவதற்கான வாய்ப்பு அதிகம்.
எனவே, பாதிக்கப்பட்டவரை தனியாக பராமரிப்பது நல்லது. அவர் பயன்படுத்தும் பொருட்களை, மற்றவர்கள் பயன்படுத்த வேண்டாம். பாதிக்கப்பட்டவர், 'ஏசி' அறையில் இருக்கக் கூடாது.
கண்களில் கருவிழியைச் சுற்றி உள்ள வெள்ளை பாகத்தில் தான், இந்த வைரஸ் தொற்று முதலில் பாதிக்கும். அந்த நிலையிலேயே சரியான சிகிச்சை எடுத்துக் கொண்டால், முழுமையாக சரியாகிவிடும்; கவனிக்காமல் விட்டால், மெதுவாக கருவிழியை பாதிக்கும் அபாயம் உள்ளது.
இதனால், பார்வை மங்கலாகத் தெரிவதோடு, மிக அரிதாக பார்வை பாதிக்கும் அபாயமும் உள்ளது. ஒரு கண்ணில் பாதிப்பு வந்தால், அடுத்த கண்ணிலும் பாதிப்பு வரும் என்ற விதி தற்போது இல்லை.
டாக்டர் சீனிவாசன் ஜீ ராவ்,
கண் சிறப்பு மருத்துவர், சென்னை.
98402 19333
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!