ரத்தத்தில் சர்க்கரையின் அளவு இயல்பைவிட அதிகமாக இருப்பதை, 'ப்ரீ டயாபடீஸ்' என்கிறோம். குறிப்பிட்ட ஆண்டுக்கு மேல், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்போது நீரிழிவு ஏற்படுகிறது.
இன்சுலின் ஹார்மோனை, கணையம் சரியான அளவில் சுரக்காததாலும், உடல் அதை சரியான முறையில் பயன்படுத்தாததாலும், இது உருவாகிறது. ப்ரீ டயாபடீஸ் நிலையில் எவ்வித அறிகுறிகளும் காணப்படாது.
ஆனால், உடலின் ஒரு சில இடங்களில், அதாவது கழுத்து, இடுப்பு, அக்குள் பகுதிகளில் தோல் கருமையாக மாற வாய்ப்புள்ளது. ப்ரீ டயாபடீஸ் நிலை நீரிழிவாக மாறும் தருவாயில் அதிக பசி, அதிக தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், சோர்வு, கண் பார்வை மங்குதல் போன்ற அறிகுறிகள் ஏற்படும். ப்ரீ டயாபடீஸ் நிலைக்கான காரணம் அறியப்படாத நிலையில், பரம்பரையாகவும் நோய் ஏற்படலாம்.
அதிக எடை, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, உடல் உழைப்பற்று இருப்பது, பொதுவாக 40 வயது தாண்டும் போது பரம்பரை வழியாகவும், கர்ப்ப கால நீரிழிவு, நீர்கட்டி பிரச்னை, துாக்கமின்மை, புகை பிடித்தல், அதிக ரத்த அழுத்தம், கொழுப்பு ஆகியவை ப்ரீ டயாபடீஸ் நிலை ஏற்படுவதற்கான சில காரணங்கள்.
ப்ரீ டயாபடீஸ் நிலை நீரிழிவாக மாறாவிட்டாலும், இதய நோய், ரத்தக்குழாய் அடைப்பு, சிறுநீரக கோளாறுகள் உருவாக இது வழிவகுக்கும். சில நேரங்களில், இது எவ்வித அறிகுறியும் இல்லாமல், மாரடைப்பு வரவும் காரணமாகிறது.
ப்ரீ டயாபடீஸ் நிலை 'டைப் - 2' வகை நீரிழிவாக மாறும்போது, அதிக ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, இதய நோய் பாதிப்பு, பக்கவாதம், சிறுநீரக கோளாறு, கண் பார்வை கோளாறுகள் போன்ற பாதிப்புகள் உண்டாகின்றன.
ஆரோக்கியமான உணவுப் பழக்கம், உடல் உழைப்பை அதிகரித்தல், எடை குறைத்தல், ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பை கட்டுப்படுத்தல், புகை பிடிப்பதை தவிர்த்தல் ஆகியவை ஆரோக்கியமான வாழ்க்கை முறையாகும்.
எனவே, நாம் அனைவரும் ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சியால் நமக்கு வரக்கூடிய ப்ரீ டயாபடீஸ் நிலையையும், டைப் - 2 வகை நீரிழிவையும், நம்மால் எவ்வித கடினமுமின்றி தவிர்க்க இயலும்.
டாக்டர் ஆர்.எம்.அஞ்சனா,
சர்க்கரை நோய் ஆலோசகர், சென்னை.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!