நாற்பது ஆண்டுகளுக்கு முன், பேருந்து ஓட்டுனராக இருந்தவர், இன்று கோவில் பூசாரி ஆக இருக்கிறார். கோவை, ஓணப்பாளையம் அய்யப்பன் கோவில் பூசாரி உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி தான் அவர்.
தற்போது, இவர் வயது, 63. கோட்டயம், குமாரநல்லுாரை சேர்ந்தவர். வாலிபர் ஆக இருந்த உன்னிகிருஷ்ணன், குமரகம் சுற்றுலா மையத்துக்கு தனியார் பேருந்தை இயக்கி வந்தார். பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்த ஓட்டுனரை காண, அன்று ஆசைப்பட்டுள்ளனர், பல பெண்கள். இவரிடம் பலர், 'ஆட்டோகிராப்' கூட வாங்குவார்களாம்.
இவர், ஓட்டுனராக இருந்தபோது, பேருந்து முன் நிற்கும் புகைப்படம் ஒன்று, நாளிதழில் வந்தது. அதை வெளிநாட்டில் உள்ள ஒரு கோட்டயம்வாசி, சமீபத்தில் முகநுாலில் பதிவு செய்தார். அவர், இன்று எங்கு இருக்கிறார் என்ற கேள்வியையும் பதிவு செய்தார்.
அப்போது தான், ஓட்டுநர், பூசாரியாக இருப்பது தெரிய வந்தது. உன்னிகிருஷ்ணன் மீண்டும் பேருந்து ஓட்டுநராக குமரகத்துக்கு வரவேண்டும் என்று விரும்புகின்றனர், குமரகம்வாசிகள். எனவே, அவர் மீண்டும் தற்காலிகமாக ஓட்டுனராகி, குமரகம் மக்களை மகிழ்விக்கப் போவதாக கூறுகிறார்.
— ஜோல்னாபையன்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!