Load Image
Advertisement

சகட ராசி!

நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த வீரராகவன், ''டேய்... என் மகளுக்குச் சகட ராசிடா. அதனால தான், டாக்டரான அவளுக்கு, டாக்டர் மாப்பிள்ளையே கிடைச்சிருக்கான்,'' என்றார்.

''நீ, எவ்வளவு சீர் செய்யப் போற?'' கேட்டான், ஒரு நண்பன்.

''நானா... அவங்க தான் சொல்லிட்டாங்களே, வரதட்சணை என்ற பேச்சே எடுக்கக் கூடாதாம்; கல்யாணச் செலவில் பாதிக்கு பாதின்னு சொல்லிட்டாங்களே.''

''மாப்பிள்ளை எந்த ஊரு?''

''அருப்புக்கோட்டை. பையனோட அப்பா, ரயில்வேயில் உயர் அதிகாரி; அம்மா, அரசுப் பள்ளித் தலைமையாசிரியை. பையன், தோல் நோய் சிறப்பு மருத்துவர்.''

''வீரா, நீ அநியாயத்திற்கு அதிர்ஷ்டக்காரன்டா.''

சக நண்பன் பேசிக் கொண்டிருக்கும் போதே, வீரராகவனின் மொபைல்போனில், 'உலகம் பிறந்தது எனக்காக, ஓடும் நதிகளும் எனக்காக...' என்ற பாடல் அலறியது.

''பஸ் சரோஜ்... இங்க, நண்பர்களுடன் பேசிக்கிட்டு இருக்கேன். சொல்லு, எதுக்கு போன் செய்த?''

''ஏங்க, பையன் வீட்டிலிருந்து போன். பிப்., 9ம் தேதி, நம் மகள் சிவபாலாவப் பார்க்க வர்றாங்களாம்; சீக்கிரம் வீட்டுக்கு வாங்க.''

எட்டாம் தேதி-

''ஏன்டி சரோ, நாளைக்கு, நம் பொண்ணை, பார்க்க வர்றாங்களே... என்ன செய்யப் போற?''

''எப்ப வர்றாங்கன்னு கேளுங்க, அதுக்குத் தகுந்த மாதிரி செய்திடலாம்.''

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, போனில், 'உலகம் பிறந்தது எனக்காக...' என்று பாடத் துவங்கியது.

''ஹலோ, வணக்கம் சம்பந்தி. நாங்களே உங்களுக்குப் போன் செய்யலாம்ன்னு இருந்தோம். நீங்களே செய்திட்டீங்க,'' என்றார், வீரராகவன்.

''மாமா, நான் சபரீஷ் பேசறேன். அப்பாவுக்குக் காய்ச்சல் அதிகமா இருந்தது; டாக்டரிடம் அழைத்துப் போய், 'டெஸ்ட்' எடுத்ததில், 'கொரோனா' வாம். அப்பாவுக்குச் சரியானதும் வருகிறோம்.''

''சரி மாப்ளே, அப்பா உடம்ப நல்லா பார்த்துக்கச் சொல்லுங்க.''

''சரிங்க மாமா!''

இதற்குள், பையனும், பெண்ணும் போனில் அடிக்கடி பேசி வந்தனர். அன்று முழுவதும் சபரீஷிடமிருந்து போன் வரவில்லை. சரி, நாம் பேசுவோம் என்று, சிவபாலா தொடர்பு கொண்டால், 'ஸ்விட்ச் ஆப்' என்று வந்தது.

பொறுமையிழந்த சிவபாலா, தன் வருங்கால மாமனாருக்கு போன் செய்தாள்.

ஈனசுரத்தில், ''எப்படிம்மா இருக்க... சபரீஷின் போன், நேற்று தண்ணில விழுந்துடுச்சு. எனக்கு உடம்பு சரியில்லாததால, புது போன் வாங்க, மதுரை போகணும். நாளை மறுநாள் ஞாயித்துக் கிழமை தான், மதுரை போய் புது மொபைல்போன் வாங்கணும். இரும்மா, இந்த போன்லயே சபரீஷ்ட்ட பேசு; டேய் சபரீஷ், சிவபாலா பேசுது. சீக்கிரம் வா,'' என்றார், மாமனார்.

''ஹலோ, சிவபாலா... சாரி, நேற்று என் மொபைல் போன் தண்ணில விழுந்துடுச்சு. மதுரை போய் தான் போனை, 'ரிப்பேர்' செய்யணும், இல்லாட்டி வேற புது போன் வாங்கணும்,'' என்றான்.

''சரியான லுாசுங்க நீங்க. போன், 'ரிப்பேர்'ன்னா, உங்க அப்பா போன்ல பேசி, விபரத்த சொல்லலாமுல்ல?''

''உன் நம்பர் அந்தப் போன்ல தான இருக்கு. அதை சரி செய்து, இல்ல, புது போன் வாங்கி 'ஆக்டிவேட்' செஞ்சாத்தானே பேச முடியும்.''

''மை காட்... சரிங்க, டேக் கேர்.''

மறுநாள் காலையில், 'பார்சல்' வந்தது தெரிந்து, அதை வாங்கினான், சபரீஷ். அதில், ஒன்றரை லட்சம் மதிப்புள்ள, 'சாம்சங் கேலக்ஸி இசட் பொல்ட்' மொபைல் போன். கிடைத்த ஒருமணி நேரத்தில், புது போனில் பேசினான், சபரீஷ்.

''ஹாய்... வாட் எ சர்ப்ரைஸ்... ஏன், நீ வாங்கின?''

''ஏங்க, நமக்குள்ள என்ன கணக்கு.''

ஒரு வாரத்தில், அவனது அம்மாவிற்கும், 'கொரோனா' வந்தது. தொலைபேசியிலேயே நாட்கள் ஓடின. அதில் பெரிய, 'கிப்ட்' எது என்றால், மதுரை முகவரியிலிருந்து, புது மாடல் பைக் ஒன்றின், 'பில்' வந்தது. மதுரைக்கு போய், பைக்கை எடுத்து வந்தான், சபரீஷ். அதன் விலை, இரண்டரை லட்சம்.

மாப்பிள்ளையும், அவரது பெற்றோரும் வர தாமதமானதால், மதுரையில் உள்ள உறவினரை அருப்புக்கோட்டை சென்று, விசாரித்து வரும்படி கூறினார், வீரராகவன்.

சென்று பார்த்ததாகவும், நல்ல குடும்பம் எனவும், தகவல் தந்தார், உறவினர்.

தொடர்ந்து தடங்கல் வரவே, ''நேரடியாக, திருமணத் தேதியை முடிவு செய்யுங்கள்; திருமணத்தை திருத்தணியில் நடத்துவோம். வரவேற்பை சிறப்பாகச் செய்வோம்,'' என, சபரீஷின் அப்பா கூற, அதற்கு ஒப்புக் கொண்டு, திருமண வேலைகளை செய்ய ஆரம்பித்தார், வீரராகவன்.

''பொண்ணுக்கு முகூர்த்தப் புடவை எப்ப எடுக்கப் போறீங்க... சீக்கிரம் எடுத்தால் தான், ஜாக்கெட் எல்லாம் தைக்க நேரம் சரியாக இருக்கும்,'' என்று சம்பந்தியிடம் சொன்னார்.

''நாங்க வரணும்கிற சம்பிரதாயம் எல்லாம் வேண்டாம். நீங்களே ஒரு லட்ச ரூபாய் மதிப்பில் எடுத்துட்டு, 'பில்'லை எனக்கு, 'வாட்ஸ் ஆப்' செய்யுங்க. பணத்தை, உங்க வங்கிக் கணக்கில் போட்டுடறேன்,'' என்றார், சம்பந்தி.

அந்த மாதக் கணக்கு விபரங்களை ஆடிட்டருக்கு அனுப்பியதில், சரி பார்த்த ஆடிட்டர், ''என்ன வீரராகவன், உங்க மக சிவபாலா கணக்கில் கடந்த மூன்று மாதமா, சுமார், 12 லட்சம் வரை செலவு செய்திருக்காங்க?''

மகளிடம் விபரம் கேட்டதற்கு, தன் வருங்கால கணவருக்குச் செலவு செய்ததாகக் கூறினாள்.

''சிவபாலா, செலவு செய்யறது தவறுன்னு சொல்லலம்மா... நீ இவ்வளவு செலவு செய்திருக்க, சபரீஷ், உனக்கு என்னம்மா வாங்கித் தந்தார்?'' என்றார், வீரராகவன்.

சிவபாலா, 'ஓ'வென அழ துவங்கினாள்.

''ஏம்மா அழுவற... நான் எதுவும் தப்பாக் கேட்டுட்டேனா?''

''அப்பா, நீங்க தப்பாக் கேட்கல, வாங்கித் தர்றது இருக்கட்டும்; இதுவரை, அந்தாளு முகத்தைக் கூட காட்டியதில்லை; பார்க்க வர்றேன்னாலும், வர விடமாட்டேங்கறாங்க,'' என்று அழுதபடியே சொன்னபோது தான், எங்கோ தவறு இருப்பதை, உணரத் துவங்கினார், வீரராகவன்.

உடனே, சபரீஷுக்கு போன் செய்து, ''ஏங்க... பிப்ரவரி மாதத்தில் இருந்து இப்போ ஜூலை ஆகிறது. எப்பத்தான் வரப் போறீங்க?''

''சாரி மாமா... இது, ஆடி மாசம். ஆடி முடிந்ததும், கண்டிப்பா வருவதாக இருக்கோம். ஏன் மாமா கோபப்படறீங்க?''

''சரிங்க, ஆடி முடிந்து வாங்க. இப்ப, 'வீடியோ காலில்' பேசுங்க. உங்களைப் பார்க்க ஆசைப்படறோம்,'' என்று கேட்க, எதிர்ப்பக்கம் கொஞ்ச நேரம் அமைதி. தொடர்ந்து தொலைபேசி இணைப்பிலிருந்து துண்டிக்கப்பட்டது.

மீண்டும் தொடர்பு கொண்டார். 'ஸ்விட்ச் ஆப்' என, வந்தது. அடுத்து, பையனின் தந்தைக்குப் போன் செய்தால், அதுவும், 'ஸ்விட்ச் ஆப்!'

வீரராகவனுக்கு பொறி தட்டியது. ஆரம்பத்தில், மதுரையில் இருந்த உறவினரிடம் கூறி, பார்த்து வரச் சொன்னவரைத் தொடர்பு கொண்டார்.

''நான்கைந்து மாதத்திற்கு முன், சிவபாலாவுக்குப் பார்த்த பையனின் குடும்பத்தை பற்றிய தகவல் கேட்டேன். நல்ல குடும்பம்தான்னு சொன்னீங்க. பெரிய வீடா, குடும்பம் எப்படி?'' என்றார், வீரராகவன்.

''சாரிங்க, நீங்க பார்த்து வரச் சொன்னீங்க. என்னால அருப்புக்கோட்டை வரை போய் வர நேரமில்ல. நீங்களும், பையன் டாக்டர்ன்னு சொன்னீங்க. டாக்டர் குடும்பம்ங்கிறதால, நல்லவங்களாக தான் இருக்கும் என்ற எண்ணத்தில், பார்க்காமலே, 'நல்ல குடும்பம்'ன்னு சொல்லிட்டேன். ஏன், என்னாச்சு?'' என்றார்.

''எங்க மக வாழ்க்கையில இப்படி விளையாடிட்டீங்களே... அவங்க ஆறு மாதமா வருவதாகச் சொல்றாங்க, வரலை. நம்ம பாப்பாவிடம் தினமும் பேசுகிறான். சிவபாலாவும் அவன் பேச்சை நம்பி, பல லட்ச ரூபாய் ஏமாந்திருக்கு. என்னங்க, இப்படிச் செய்துட்டீங்க?''

''என்னை மன்னிச்சிடுங்க. உடனே அந்த முகவரியையும், பையன் புகைப்படத்தையும் அனுப்புங்க,'' என்றார், உறவினர்.

முகவரி மற்றும் புகைப்படத்துடன் அருப்புக்கோட்டை போய் தேடினார். அருப்புக்கோட்டையின் வெளிப்புறத்திலிருந்த அந்த முகவரியில், ஒரு பாழடைந்த வீடு இருந்தது.

அக்கம்பக்கத்தில் இருப்பவர்களிடம் உறவினர் கேட்ட போது, 'அந்தப் படத்தில் இருப்பவர் மாதிரி இங்க யாருமில்ல... இந்த இடத்திற்கு ஒரு ஆளு அப்பப்ப வருவார், அதப் பாத்திருக்கோம். ஆனா, இந்தப் படத்தில் உள்ள ஆள நாங்க பார்த்ததே இல்லை...' என்றனர்.

மதுரைக்காரர் விபரத்தைச் சொல்லியதும், இடி விழுந்த அதிர்ச்சி அடைந்தார்; உடனே, போலீசில் புகார் கொடுத்தார், வீரராகவன்.

போலீஸ் விசாரணையைத் துவங்கி, ஆளைத் தேடியது. சிவபாலா கடிதங்கள், பார்சல்கள் அனுப்பிய, 'கூரியர் கம்பெனி'யை விசாரித்தனர்.

அப்போது, 'பார்சலோ, கடிதமோ வந்தா, நாங்க போன் செய்வோம்; அவங்களே வந்து வாங்கிக்குவாங்க. இந்த முகவரிக்கு கடிதங்களும், பார்சலும் வந்தபோது, போன் செய்தோம். பேசுவார்; அவர் வந்ததில்லை. அவருடைய வேலையாளை அனுப்பி வாங்கிக் கொள்வார். ஆனா, இந்தப் படத்தில் உள்ளவரை, நாங்கள் பார்த்ததில்லை...' என்றனர்.

தீவிர விசாரணையில்... ஒருமுறை சிவபாலா வாங்கித் தந்த ஒன்றரை லட்ச ரூபாய் மொபைல்போனில் பேசிய தடயத்தில் அந்த மொபைல்போனின் எண்ணைக் கண்டுபிடித்து, 'ட்ராக்' செய்தனர். புதுச்சேரியை காட்டியது.

ஒருவழியாக, புதுச்சேரி முகவரியை கண்டுபிடித்து, அந்த மொபைல் போன் வைத்திருந்தவரைப் பிடித்தால், மேலும் ஒரு அதிர்ச்சி.

பிடிபட்டவன், புகைப்படத்தில் இருந்தவன் அல்ல. உடனே, அவனை வீரராகவனிடம் பேசச் சொன்னதில், 'இதே குரல் தான்...' என்றார்.

போலீஸ் அவர்கள் பாணியில் கவனிக்க, உண்மையைச் சொன்னான்.

'நெட்டில் எடுத்த இந்த புகைப்படத்தை அனுப்பி, நான் தான் ஏமாற்றினேன். இதுபோல் பலரை ஏமாற்றியுள்ளேன்...' என்று வாக்குமூலம் தந்தான்.

திருடன், 8ம் வகுப்பு மட்டுமே படித்துள்ளான். அவன் அப்பா யார் என்று விசாரித்ததில், 'அப்பாவும் நான் தான். அப்பாவாகப் பேசும்போது, தொண்டையைக் கொஞ்சம் அழுத்தியபடி பேசுவேன்...' என்றான்.

அவனை கைது செய்து கைப்பற்றியதில், மொபைல் போன், பைக் மற்றும் ஒரு செயின் மட்டுமே மிஞ்சியது.

'என்னை விட்டுடுங்க. அவங்க பணத்தைத் தந்து விடுகிறேன்...' என்று அலறினான், அந்த ஏமாற்றுக்கார பேர்வழி.

இது, அண்மையில் நடந்த உண்மைச் சம்பவம்.

'பாக்கெட் நாவல்' ஜி. அசோகன்வாசகர் கருத்து (1)

  • Girija - Chennai,இந்தியா

    மொபைல் தண்ணீல விழுந்தா என்ன ? சிம் ஐ கழட்டி வேறு போனில் போட்டு பேச முடியாதா ? இல்லை அருப்புக்கோட்டையில் மொபைல் கடையே இல்லையா ? பெண்ணின் நம்பரை கண்டுபிடிக்க எத்தனையோ வழிகள் உள்ளது. கொரியர் நிறுவனம் போனில் கூப்பிட்டுத்தானே பார்சல் வழங்கியது ? பை எப்படி டெலிவெரி கொடுத்தார்கள் ? ஆதார் அவசியம் ஆயிற்றே ? அதை எப்படி தொடர்புகொண்டு வாங்கினா அந்த பெண் டாக்ட்டர்? இப்படி உள்ளவர் வைத்தியம் பார்த்தால் வீராங்கனைக்கு நேர்ந்த கதிதான் நோயாளிகளுக்கு, இங்க எலி ஏரோபிலேனே ஓட்டிடுச்சு, பெண் வீட்டில் அத்தனை கேணைகள்.

  • எஸ். எஸ் சென்னை- 78 -

    இவர் கதை எழுதறேன் பேர்வழினு எல்லா பத்திரிக்கையிலும் எழுதி உயிர் எடுக்கிறார். நட்பு அடிப்படையில் கதை போடறாங்க. ஆனால் அந்த கதையை வாசிக்கிற வாசகர்கள் தான் பாவம்.

  • deep - Chennai,இந்தியா

    Completely fabricated story. Nothing else

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

ஸ்ரீபெரும்புதூரில் சொந்த மனை வாங்க சரியான நேரம் வந்தாச்சு!

Advertisement
 
Advertisement