அன்பு பிளாரன்ஸ் ஆன்டி...
நான், 16 வயது சிறுமி. எனக்கு, 10 வயதில் தம்பி இருக்கிறான். பெற்றோர் இருவருமே அரசு பணியில் இருக்கின்றனர். இருவரும் விழுந்து விழுந்து என் தம்பியின் மீது பாச மழை பொழிகின்றனர். அவன் கேட்கும் பொருள், கேட்காத பொருட்களை வாங்கி தருகின்றனர். தம்பி மகாராஜா என்றால், நான் சாமரம் வீசும் சேடிப்பெண்.
சொந்த வீட்டிலேயே, இரண்டாம் குடிமகளாக உணர்கிறேன். பாவம் செய்தவர்கள் தான், மூத்த பிள்ளையாக பிறக்கின்றனர். அதுவும், மூத்த பிள்ளையாக பிறக்கும் பெண்களின் கதி அதோ கதி என்கிறேன். உங்கள் கருத்து என்ன ஆன்டி...
இப்படிக்கு,
ச.சுபா.
அன்பு பூக்குட்டிக்கு...
அந்த காலத்தில், ஒவ்வொரு குடும்பத்திலும், ஒன்பது, பத்து பிள்ளைகள் இருப்பர். தகப்பனுக்கு எல்லா குழந்தைகளின் பெயரும், அவர்கள் என்ன படிக்கின்றனர் என்ற விபரமும் ஞாபகம் இருக்காது.
வீட்டில், மூத்த குழந்தைக்கு தான் முழு அதிகாரமும் இருக்கும். வீட்டிற்கு எந்த பொருள் வந்தாலும், 'கிங் ஷேர்' மூத்த குழந்தைக்கு தான். கடைக்குட்டிகள், மூத்த குழந்தைகளுக்கு வேலைக்காரனாக ஊழியம் செய்வர்.
இப்போது காலம் மாறி விட்டது. எல்லார் வீட்டிலும், இரண்டு குழந்தைகள்; சில வீடுகளில் ஒரே குழந்தை. இப்படியுள்ள குடும்பங்களில், அக்கா, தங்கை, அண்ணன், தம்பி, உறவில்லாத ஏக்கம் வந்து விடுகிறது.
இரண்டு குழந்தைகள் இருக்கும் வீட்டை உதாரணத்துக்கு எடுத்து கொள்வோம்.
திருமணமான புதிதில், கணவன், மனைவி சிறிய வேலையில் இருப்பர். அப்போது பிறக்கும் குழந்தை மெலிந்து கறுத்திருக்கும்.
கணவன், மனைவி செழிப்பாக பதவி உயர்வு பெற்ற பின், இரண்டாவது குழந்தை பிறக்கும். அது, 'கொழு... கொழு...' என அழகாய் இருக்கும். இந்த குழந்தை பிறந்த நேரத்தில் தான், பதவி உயர்வு வந்தது என்ற சென்டிமென்ட்டும், பெற்றோருக்கு இருக்கும்.
ஆண் குழந்தை உசத்தி, பெண் குழந்தை தாழ்த்தி என்ற மனோபாவம் குறைந்திருந்தாலும், சில பெற்றோரிடம் இன்னும் இருக்கத்தான் செய்கிறது.
இன்னொரு முக்கிய விஷயம் இருக்கிறது... மூத்த குழந்தைக்கும், இளைய குழந்தைக்கும் பெற்றோர் சமமாகத்தான் செய்கின்றனர். ஆனால், மூத்த குழந்தையிடம், குழந்தை பருவத்தில் பெற்றோர் காட்டிய பேரன்பு மறந்து விடும்.
மறதி காரணமாக, பெற்றோர் எதுவும் செய்யவில்லை என, மூத்த குழந்தை ஆவலாதிபடும். இப்போதெல்லாம் பிறக்கும் எல்லா குழந்தைகளும் சுயநலமாய் தான் வளர்கின்றன. எதையும், யாருக்கும் விட்டு தர தயாராக இல்லை.
உனக்கு ஏதாவது வேண்டும் என்றால், பெற்றோரிடம் நைச்சியமாக கேட்டு பெறு. தம்பியை பாசத்தால் நெருங்கு. கோடிக்கணக்கான குழந்தைகள், பசி, பட்டினியால் வாடும் போது, இறைவன் இந்தளவாவது தந்திருக்கிறானே என மனதில் திருப்தி கொண்டு வாழப்பழகு!
- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!