சிங்காங் காட்டு மன்னர் சிங்கம், அப்போது தான் துாங்கி எழுந்து உட்கார்ந்திருந்தார். அங்கு அவசரமாக ஓடி வந்த யானை, 'மன்னா... நாட்டில் ஆபத்தான புதிய நோய் பரவி வருகிறது...' என்றது.
'இருக்கிற நோய்கள் போதாதுன்னு, இன்னொன்றா... என்ன நோய்...' என கேட்டது சிங்கம்.
'தலைவலி...'
'என்ன... கேலி செய்ய நான் தான் கிடைத்தேனா...'
'கேலி இல்லை மன்னா... உண்மையில் திடீர் தலைவலி பரவி வருகிறது; சில நாட்களுக்கு பின், மூளையை பாதித்து, இறப்பு நேரிடுகிறது; மருந்து மாத்திரைகளுக்கு கட்டுப்படுவதில்லை; இதை எப்படி போக்குவது என்று மருத்துவர்களுக்கும் தெரியவில்லை...'
'புதிய நோயாக இருக்கிறதே...'
'ஆம் மன்னா...'
இதை ஆமோதித்தவாறு எதிரில் மரக்கிளையில் வந்து அமர்ந்தது அண்டங்காக்கை.
'நீ... என்ன செய்தி எடுத்து வந்தாய்...' என்றது சிங்கம்.
'காட்டில் தலைவலி வேகமாக பரவி வருகிறது. இறப்பு எண்ணிக்கை அதிகரித்து உள்ளது; பக்கத்தில் பூம்பூம் காட்டு மன்னர் புலி புலம்புகிறார். அங்கும் இறப்பு எண்ணிக்கை உயர்ந்து விட்டது; கருப்பங்காட்டு மன்னர் கரடியாரோ, இறப்பை கட்டுப்படுத்த முடியவில்லை என கண்ணீர் விடுகிறார்...' என்றது அண்டங்காக்கை.
'அப்படியா... தாமதிக்க கூடாது... அவசரமா முடிவு எடுக்கணும்; குறுநில மன்னர்களுக்கு செய்தி அனுப்புங்க...' என்றது சிங்கம்.
அவசர கூட்டம் துவங்கியது.
'தலைவலி எப்படி பரவுகிறது என அறிய முடியவில்லை; எந்த மருந்து மாத்திரையாலும் கட்டுப்படுத்த முடியவில்லை...'
காட்டு விலங்குகள் ஒரே குரலில் கூறின.
சற்று நேரம் கண்களை மூடி சிந்தித்த சிங்கம், ' உலகில் நவீனமாக வந்துள்ள இப்போதைய கண்டுபிடிப்பு என்ன...' என கேட்டது.
ஆயிரம் கிலோ மீட்டருக்கு, அப்பால் இருக்கும், இலக்கையும் அரை நொடியில் தாக்கி அழிக்கும், ஒரு ஏவுகணையை உருவாக்கி இருப்பதாக கூறியது ஒட்டகச் சிவிங்கி.
'இது அறிவியல் வல்லமையை காட்டுவதற்காகவா...' என்றது சிங்கம்.
'ஆம்...'
குரல்கள் ஓங்கி ஒலித்தன.
'இல்லை... இதை அனுமதிக்கக் கூடாது...'
அழுத்தமாக கூறியது, சிங்கம்.
குழப்பத்துடன் பார்த்தன வன விலங்குகள்.
'நவீன கண்டுப் பிடிப்புகள் அனைத்தும் நம்மை அழித்து கொள்ள உருவாக்கப்பட்டவை; இதை தவிர்த்து, விலங்கு இனம் அழியாமல் தடுக்க ஏதேனும் வழி உண்டா...' என்றது சிங்கம்.
'இல்லை...'
தலை குனிந்தபடி நின்றன விலங்குகள்.
'என்ன செய்ய வேண்டும்...' என்றது கரடி.
'ஒருவரை ஒருவர் எதிரியாக எண்ணி, தொல்லை கொடுத்து கொண்டிருப்பதை உடனே நிறுத்துவோம். விலங்கு இனத்தை அழித்து கொண்டிருக்கும், பொல்லாத தலைவலியை போக்க மருந்து கண்டுப்பிடிப்போம்... அதற்கான ஆய்வை மேற்கொள்ள அறிவியல் வல்லுனர்களை கேட்டுக்கொள்கிறேன்...' என்றது சிங்கம்.
அது, தீர்மானமாக நிறைவேறியது.
குழந்தைகளே... எந்த செயலும் அனைவருக்கும் நன்மை தரக்கூடியதாக இருக்க வேண்டும். அது போன்றே செய்யுங்கள்!
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!