ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டால் தான் மாரடைப்பு வரும் என்பதில்லை; புகை பிடிக்கும் பழக்கம் இருப்பவர்களுக்கும் எதிர்பாராத விதமாக வரலாம்.
ரத்தக் குழாயின் உள்பக்கத்தை படம் பிடிக்கும் புதிய தொழில்நுட்பத்தின் உதவியுடன் பரிசோதித்தால், தொடர் புகை பழக்கத்தால் கீறல்கள் ஏற்பட்டு, ரத்தம் உறைந்திருப்பதைக் பார்க்கலாம்.
இதய ரத்தக் குழாயில் அடைப்பு சிறிது சிறிதாகத் தான் ஏற்படும். புகை பழக்கம் இருந்தால், இப்படித்தான் கீறல்கள் ஏற்பட்டு, எதிர்பாராத விதமாக மாரடைப்பு ஏற்படும். இதற்கு 'ஸ்டென்ட்' தேவையில்லை; ரத்த உறைவை மருந்துகளால் கரைத்து விடலாம்.
அப்படியானால், 'உணவு கட்டுப்பாடு இல்லாத புகை, மதுப் பழக்கம் இருக்கும் 80 வயதைக் கடந்தவர்களுக்கு ஏன் மாரடைப்பு வருவதில்லை?' என்று என்னிடம் ஆலோசனைக்கு வருபவர்கள் கேட்பது வழக்கம். இதில் வயது விஷயம் இல்லை; அவர்களுக்கு ஆரோக்கியமான, மாரடைப்பை உண்டு பண்ணாத, மரபணு இருக்கலாம் என்று தான் கூற முடியும்.
வருமுன்...
வயதானவர்களுக்கு வயது காரணமாக, நீரிழிவு, ரத்த அழுத்தம், உடற்பயிற்சி இல்லாதது, உடல் பருமன் உட்பட மாரடைப்பை உண்டு பண்ணக் கூடிய உடல் பிரச்னைகள் இருக்கலாம். இந்தப் பிரச்னைகள் எதுவும் இல்லாத அல்லது இருந்தும் கவனிக்காமல் இருக்கும் இளம் வயதினருக்கு, எதிர்பாராத விதமாக மாரடைப்பு வருகிறது. மாரடைப்பு வரக் கூடிய சாத்தியம் உள்ளவர்களில் 50 சதவீதம் பேருக்கு, அறிகுறிகளே இல்லாமல் அல்லது குறைந்தபட்ச அறிகுறிகளுடன் எதிர்பாராத நேரத்தில் தீவிர மாரடைப்பு வரலாம்.
மாரடைப்பு வருவதற்கான காரணங்களை வரிசைப்படுத்தி, இதையெல்லாம் செய்யக் கூடாது என்று ஒட்டு மொத்தமாக சொல்வதை விடவும், மரபியல் ரீதியில் மாரடைப்பு வருவதற்கான சாத்தியம் உள்ளவர்களை தனியாக அடையாளம் காண வேண்டியது முக்கியம். உதாரணமாக, ஒரு அலுவலகத்தில் 1,000 பேர் வேலை செய்தால், அவர்களின் பெற்றோர், தாத்தா, பாட்டி என்று மாரடைப்பு ஏற்படும் அபாயத்தில் உள்ளவர்களைப் தனியாகப் பிரித்து விட வேண்டும்.
இவர்களுக்கு நீரிழிவு, ரத்த அழுத்தம், கொழுப்பு அளவு என இவற்றை ஆண்டிற்கு ஒரு முறை பரிசோதனை செய்ய வேண்டும்.
கொழுப்பு இருந்தால், உணவு, வாழ்க்கை முறையில் மாற்றம் செய்ய வேண்டும். உடற்பயிற்சியில் அதிக கொழுப்பைக் குறைக்க முடியாவிட்டால், மாத்திரைகளை சாப்பிட ஆரம்பிக்க வேண்டும்.
வந்தபின்...
மாரடைப்பு வந்தபின், உடனடியாக மருத்துவ உதவி பெற வேண்டும். எவ்வளவு சீக்கிரம் இதைச் செய்கிறோமோ, அவ்வளவு எளிதில் தசைகள் செயலிழப்பைத் தடுக்க முடியும்.
ஒரு மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்கு வந்தால் மாரடைப்பு வருவதையே தடுத்து விடலாம். நடு மார்பில் வலி, அதிகப்படியான வியர்வை, 20 நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து வலி, மூச்சு விடுவதில் சிரமம் இது போன்ற அறிகுறிகள் இருந்தால், உடனடியாக டாக்டரை பார்த்து ஆலோசனை பெறுவது அவசியம்.
டாக்டர் ஜி.செங்கோட்டுவேலு,
இதய சிகிச்சை சிறப்பு நிபுணர்,
சென்னை
94457 76666
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!