சினிமா துறையில் புகழடைந்த பிறகும், தன் தாய் வீடான நாடக உலகை மறக்கவில்லை, ஜெய். நேரம் கிடைக்கும் போதெல்லாம் கூத்தபிரானின் நாடகங்களில் நடித்து வந்தார்.
தனக்கு கதாநாயகன் பாத்திரங்களை தந்து, தன் திறமையை உலகறியச் செய்த, 'கல்கி பைன் ஆர்ட்ஸ்' தடுமாறிவிடக் கூடாது என்ற நல்லெண்ணமும், அதற்கு காரணம். ஆனாலும், படங்களின் எண்ணிக்கை கூடியபோது, நாடகங்களில் சரிவர கவனம் செலுத்த முடியவில்லை.
ஒருமுறை, ராஜா அண்ணாமலைபுரம், இளங்கோ கலை மன்றத்தில் நடந்த நாடகத்துக்கு ஜெய்சங்கரால் செல்ல முடியவில்லை. நாடகம் ரத்தாகி, களேபரமானது அரங்கு. ரசிகர்களுக்கு பணம் திருப்பியளிக்கும் தர்மசங்கடமான நிலை. அதற்காக, கூத்தபிரானிடம் வருத்தம் தெரிவித்தார், ஜெய்சங்கர்.
அதேசமயம், கள்ளங்கபடமற்ற கூத்தபிரானின் உழைப்பை, யாரோ சிலர் சுரண்டிக் கொண்டிருந்ததை அறிந்தார்.
'டேய் கூத்தா, யாரோ சம்பாதிக்க தான், நீ, இரவும், பகலும் உட்கார்ந்து நாடகங்கள் எழுதிட்டிருக்கியா... பேரும், புகழும் மட்டும் சாப்பாடு போடாது. 'கல்கி பைன் ஆர்ட்சை' விடு...' என, நண்பனை உரிமையாக கண்டித்தார்.
அத்துடன், 'ஜெய் தியேட்டர்ஸ்' என்ற நாடக குழுவை, கூத்தபிரானுக்காக துவக்கி, தானே கதாநாயகனாக நடித்துக் கொடுப்பதாக, யோசனை தெரிவித்தார்.
தனக்கு சினிமா படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் நடத்தப்படும் இந்த நாடகங்களின் வசூலை, கூத்தபிரானுக்கு வழங்குவது, ஜெய்சங்கரின் திட்டம். வானொலியில் நிரந்தர ஊழியராகி இருந்ததால், மத்திய அரசு ஊழியர் என்ற முறையில், நாடகங்கள் போட, கூத்தபிரானுக்கு சில கட்டுப்பாடுகள் இருந்ததால், அவரும் அதை ஏற்றார்.
'கல்கி பைன் ஆர்ட்சை' கலைத்து விட்டு, 'ஜெய் தியேட்டர்ஸ்' என்ற பெயரில் நல்ல, 'ஸ்கிரிப்ட்'களை மேடையேற்றினார், கூத்தபிரான். 1968ல், 'ஜெய் தியேட்டர்ஸ்' சிங்கப்பூருக்கு நாடகம் நடத்தச் சென்றது.
நாடகத்தில் புதுமையான முயற்சியாக, 'மேக்னடிக் மைக்'கை பயன்படுத்தினர். அதாவது, கதாபாத்திரங்கள் வசனம் பேசுகிறபோது, அவர்களின் நகர்வைப் பொறுத்து தலைக்கு மேல் பொருத்தப் பட்டிருக்கும், 'மைக்'கும் நகரும்.
இதனால், நடிகர்கள் ஒரே இடத்தில் நின்று நடிக்காமல், மேடையின் எந்த மூலைக்கும் சென்று சிரமமின்றி வசனம் பேசி, நடிக்க முடியும். 1968ல், இது மிகவும் புதுமை.
'சங்கர், அருமையான கலைஞன்டா. நாடகங்கள்ல என்னென்னவோ பண்ணிப் பார்க்கணும்ன்னு அவருக்கு ஆசை. ஆனா, சினிமா, 'பிசி'யில அதையெல்லாம் செய்ய முடியாமப் போயிட்டது. நாடக உலகுக்கு அது இழப்பு...' என, நண்பர்களிடம் சொல்வார், கூத்தபிரான்.
நோக்கம் நல்லதென்றாலும், 'ஜெய் தியேட்டர்ஸ்' அல்பாயுசில், மறைந்தது. இடைவிடாத படப்பிடிப்பு சூழலால், வேறு வழியின்றி ஒருநாள், தன் நாடக வாழ்க்கைக்கு, ஜெய்சங்கர் சுபம் கார்டு போட வேண்டியதானது. ஆனாலும், கூத்தபிரானுடனான நட்பு, அவரது இறுதிக்காலம் வரை நீடித்தது.
புகழின் உச்சியில் இருந்தபோது, ஒருநாள், ஜோசப் தளியத்தை தேடிப் போனார், ஜெய்சங்கர். தனக்கு வாழ்வளித்தவருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதே, அந்த வருகையின் நோக்கம். ஆனால், அன்போடு மறுத்து விட்டார், தளியத்.
சங்கர் வற்புறுத்தலுக்கு பிறகு, 'உன் அன்புக்கு நன்றி, சங்கர். ஆனால், நான் பிரம்மசாரி வாழ்க்கை வாழ்பவன். எனக்கான தேவைகள் மிகக் குறைவு. தவிர, தேவைக்கு மேல் அனைத்தும் கிடைக்கப் பெற்ற பாக்கியவான் நான்...' என மறுத்தவர், 'நீ எனக்கு செய்ய விரும்புவதை இன்று ஒருநாள் மட்டும் செய்ய விரும்புகிறாயா அல்லது நிரந்தரமாகவா?' என்றார்.
'நிரந்தரமாக, உங்கள் பிள்ளை ஸ்தானத்திலிருந்து செய்ய விரும்புகிறேன்...' என, நெகிழ்ந்தார், சங்கர்.
'அப்படியானால் காரில் ஏறு...' என்றார்.
சென்னை, கீழ்ப்பாக்கம், டெய்லர்ஸ் சாலையை கடந்து, ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தை ஒட்டிய சந்து வழியே சென்று, 'கருணை இல்லம்' என, பெயர் பலகை பொறித்த கட்டடத்தின் முன் நின்றது, கார். ஜெய்சங்கருக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால், ஏதோ காரணம் இருக்கிறது என்பது மட்டும் தெரிந்தது.
மதம், மொழி, இனம் கடந்து, ஆதரவற்ற பிள்ளைகள், முதியோர்கள், உடல் ஊனமுற்ற சிறார்கள் என, நுாற்றுக்கணக்கானவர்கள், தளியத்தை காண, அங்கே காத்திருந்தனர். தங்கள் முன் நிற்கும் பிரபல நடிகரை பார்த்து, அவர்கள் மெய் மறந்து நின்றனர்.
அதேசமயம், அவர்களை கண்டு நெகிழ்ந்து கொண்டிருந்தார், ஜெய். ஒற்றை மனிதரான தளியத், தன் சம்பாத்தியத்தை என்ன செய்து கொண்டிருக்கிறார் என்ற நீண்ட நாள் கேள்விக்கு, அங்கு அவருக்கு பதில் கிடைத்தது.
'சங்கர்... மத வேறுபாடில்லாமல் இங்கு கைவிடப்பட்டவர்கள் வாழ்கின்றனர். எனக்கு நீ செய்ய விரும்புவதை, ஆதரவற்ற இந்தக் குழந்தைகளுக்கு செய்தால், என் மனம் மகிழ்ச்சியடையும். பொருளுதவி இரண்டாம்பட்சம்.
'நேரம் கிடைக்கும்போது நீ இங்கு வந்தால், அவர்கள் மனம் மகிழும். இந்த ஏழை குழந்தைகளுக்காக இதை நீ செய்தால், என் காலத்திற்கு பிறகும், என் ஆத்மா உன்னை வாழ்த்திக் கொண்டிருக்கும். செய்வாயா?' என்றார், தளியத்.
ஜெய்சங்கரின் கண்களில் தேங்கியிருந்த நீரில், அவருக்கான பதில் இருந்தது.
கருணை இல்லத்திலிருந்து கிளம்ப தயாரான சமயம், பார்வையற்ற ஒரு சிறுமி, ஜெய்சங்கரின் கைகளை இறுகப் பற்றி, தன் முகத்தில் தேய்த்தாள். ஜெய்சங்கர் கண்களில் லேசான ஈரம். நெகிழ்வோடு தன் கரம் பற்றிய சிறுமியின் கையை ஆதரவாக பற்றிக் கொண்டார்.
அன்று, ஆதரவற்ற ஒரு குழந்தையை ஆதரவாய் தொட்ட அந்தக் கரங்கள், பிற்காலத்தில் அதுபோன்ற, ஆயிரம் ஆயிரம் குழந்தைகளுக்கு தன் ஆதரவுக் கரங்களை நீட்டிக் கொண்டே இருந்தது, தமிழகம் அறிந்த வரலாறு.
குரு தளியத்துடன், கருணை இல்லத்துக்குள் நுழைந்தவர், தளியத்தே எதிர்பார்க்காத ஒரு பெருந்தொகையை அந்த இல்லத்திற்கு வழங்கி, மன நிறைவுடன் வெளியில் வந்தார், ஜெய்.
ரசிகர் மன்றங்களில், ஜெய் செய்த மாற்றங்கள்...
- தொடரும்
ஒரு பத்திரிகை பேட்டியில், இயக்குனர் ஸ்ரீதரிடம், 'எந்த ஒரு நடிகரையாவது இயக்காமல் போய் விட்டோமே என, நீங்கள் எப்போதாவது வருந்தியதுண்டா?' என்று கேட்டிருந்தனர்.'ஒரு நடிகரை இயக்க முடியவில்லையே என்ற குறை, நான் புகழின் உச்சியில் இருந்த காலம் தொட்டு இருந்தது. பிற்காலத்தில், ரஜினியை வைத்து நான் இயக்கிய, துடிக்கும் கரங்கள் படத்தில் அவரை நடிக்க வைத்து, அந்தக் குறையை தீர்த்துக் கொண்டேன்...' என்றார்.ஸ்ரீதர் குறிப்பிட்ட நடிகர் வேறு யாருமல்ல, ஜெய்சங்கர் தான்!
இனியன் கிருபாகரன்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!