கடந்த சில வாரங்களாக, சிங்கப்பூரில் உள்ள என் மகளின் வீட்டில் இருக்கிறேன். ஓய்வு பெற்ற பின் அடிக்கடி இங்கு வருவதுண்டு. இங்கு இருக்கும் நாட்களில், பெரும்பாலான நேரத்தை நான் செலவிடுவது, சிங்கப்பூர் தேசிய நுாலகத்தில் தான்.
உலகம் முழுதும் இருந்து வெளிவரும் மருத்துவ ஆராய்ச்சிக் கட்டுரை களை, பல சர்வதேச இதழ்களில் தேடித் தேடி படிப்பதுண்டு. அப்படி ஒன்று தான், அமெரிக்காவில் உள்ள, 'மேயோ கிளினிக்' வெளியிட்ட, நோய் தொற்றை தடுப்பதில், காபியின் பங்கு பற்றிய ஆய்வுக் கட்டுரை.
காபி தரும் நன்மைகள்
இதயம் தொடர்பான கோளாறுகள், நரம்பியல் பிரச்னைகள், உடல் உள்செயல்பாடுகளில் ஏற்படும் பல முரண்கள், மனநிலையில் வரும் மாறுபாடுகள், துாக்கப் பிரச்னைகள்,கேன்சர் செல்களின் வளர்ச்சியை தடுப்பது, அழற்சி கோளாறுகள், பித்தப் பை கற்கள் உருவாவது, கல்லீரலில் ஏற்படும் தழும்புகள், 'டைப் - 2' சர்க்கரை கோளாறு, உடல் பருமன் என்று பல பிரச்னைகளை தடுக்கும் ஆற்றல் காபிக்கு உண்டு என்கிறது ஆராய்ச்சி முடிவுகள்.
அரபு நாடுகளில் இருந்து, 1751ல் காபி நம் நாட்டிற்கு அறிமுகம் ஆனது. இத்தனை நுாற்றாண்டுகளாக பழக்கத்தில் இருக்கும் காபி, உடம்பிற்கு கெடுதல் என்பது தான் பொதுவான அபிப்ராயம்.
'கேபைன்'
காபியில் உள்ள பிரதான மூலப்பொருள், 'கேபைன்!' இது டீ, சாக்லேட் பானங்களிலும் உள்ளது. இன்றைக்கு காபியில் 100க்கும் அதிகமான வகைகள் உள்ளன. பயிர் செய்வதில் இருந்து, உபயோகிக்கும் வரை உள்ள நடைமுறைக்கு ஏற்ப கேபைன் அதில் இருக்கும்.
ஐந்து கிராம் காபி பொடியில், 50 மி.கி., அளவுக்கு கேபைன் சராசரியாக இருக்கும். தினமும் 200 - 250 மி.கிராம் வரை கேபைன் உடலுக்குள் செல்லலாம்.
ஒரு முறை நாம் குடிக்கும் ஒரு கப் காபியில், 5 மி.கிராமிற்கு மேல் கேபைன் இருக்கக் கூடாது. தினமும் 400 மி.கிராமிற்கு மேல் கேபைன் நம் உடலுக்குள் சென்றால், உடல் நடுக்கம், சீரற்ற இதயத் துடிப்பு,தற்கொலை எண்ணம், கருச்சிதைவு, நெஞ்செரிச்சல் என்ற பலபிரச்னைகளை ஏற்படுத்தும்.
அதே நேரத்தில் நிர்ணயிக்கப்பட்ட அளவு, அதாவது தினமும் 250 மி.கி., என்ற அளவில் கேபைன் உடலுக்குள் சென்றால், கெட்ட கொழுப்பைக் குறைத்து, நல்ல கொழுப்பை ரத்தத்தில் அதிகரிக்கும்.
ரத்த நாளங்களின் உட்சுவரில் கொழுப்பு படிவதைத் தடுக்கும். சீரற்ற இதயத் துடிப்பைத் தடுக்கும். சிறிய ரத்த நாளங்களின்செயல்பாட்டை அதிகரிக்கும்.
இதயத் தசைகள் சுருங்கி விரியும் தன்மை வலுவாகும். அதிக ரத்தம் இதயத்திற்கு செல்லும். இதய செயலிழப்பைத் தடுக்கும்.
தொடர்ந்து காபி குடிப்பதால், நீண்ட நாட்கள் இருக்கும் உயர் ரத்த அழுத்தம் குறையும். மாரடைப்பு வருவதையும், இதய செயலிழப்பையும் மறைமுகமாக தடுக்கும்.
இது தவிர, மற்ற உடல் உள்ளுறுப்பு செயல்பாடுகளில், கேபைன் செய்யும் நன்மைகளும் உண்டு. வளர்சிதை மாற்றத்தில் ஏற்படும் நோய் அறிகுறிகளை தடுக்கும். தைராய்டு சுரப்பியை நன்கு வேலை செய்ய வைக்கும்.
உள்ளுறுப்புகளில் ஏற்படும் அழற்சி, கல்லீரல் நோய்கள், பித்தப் பை கற்கள் உருவாவது, நரம்பு கோளாறுகள், மறதி நோய் உட்பட, பல கோளாறுகளை தடுக்கும் ஆற்றல் கொண்டது. வெள்ளை சர்க்கரை சேர்க்காமல், தரமான காபியை ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு கப் குடிக்கலாம் என்கிறது ஆய்வு.
அளவுக்கு அதிகமாக காபி குடித்தால் வரும் பக்க விளைவுகளை தடுக்க, நிறைய தண்ணீர் குடிக்கலாம்; நீண்ட துாரம் நடக்கலாம்; சுவாசப் பயிற்சி செய்யலாம்.
இதனால் எல்லாம் சற்று நேரத்தில் நிலைமை சரியாகாவிட்டால், உடனடியாக டாக்டரிடம் ஆலோசனை பெற வேண்டும்.
டாக்டர் என். தினகரன்
குடல், ஜீரண மண்டல சிறப்பு மருத்துவர்,
முன்னாள் பேராசிரியர்,
அரசு பொது மருத்துவமனை,
சென்னை.
போன்: 98411 51599
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!