சென்னை, மேற்கு மாம்பலம், ஸ்ரீ சாரதா நடுநிலைப் பள்ளியில், 1967ல், 6ம் வகுப்பு படித்தேன். தலைமை ஆசிரியர் பூவராகமூர்த்தி மிகவும் கண்டிப்பானவர். பஞ்ச கச்சம் கட்டியபடி தான் பள்ளிக்கு வருவார். மாணவ, மாணவியருக்கு ஒழுக்கம், நன்னடத்தையையும் பயிற்றுவித்தார்.
வகுப்பறைகள், கீற்றுக் கொட்டகையால் அமைக்கப்பட்டிருந்தன. பள்ளி வளாகத்தின் உள்ளே அமைந்திருந்த, மைதானத்தில் அமர்ந்து தான் சாப்பிட வேண்டும்.
ஒரு நாள், மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். உடன் படித்தவன் அமைதியாக பக்கத்தில் அமர்ந்திருந்தான். விசாரித்த போது, 'குடும்ப வறுமையால் வீட்டிலிருந்து மதிய உணவு எடுத்துவர வசதி இல்லை...' என்றான். என் உணவில் பகுதியை கொடுத்தும் ஏற்க மறுத்து விட்டான்.
இதை கவனித்த தலைமை ஆசிரியர், விசாரித்து உண்மை அறிந்தார். அவன் அம்மாவுக்கு வேலை கொடுத்து, அவனுக்கு தவறாது மதிய உணவு கிடைக்க வழி செய்தார். இந்த ஏற்பாடு பல ஆண்டுகள் தொடர்ந்தது.
எனக்கு இப்போது, 64 வயதாகிறது; வங்கி மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றேன். ஏழைகளுக்கு உணவு அளிக்க வேண்டும் என, உள்ளத்தில் பதிய வைத்த அந்த தலைமை ஆசிரியரை வணங்குகிறேன்.
- எஸ்.கிருஷ்ணகுமார், சென்னை.தொடர்புக்கு: 94423 78707
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!