விதைகளின் முளைப்புத்திறன், வீரியம் மற்றும் சேமிப்புத்தன்மை ஆகியவை விதை பிரித்தெடுக்கும் முறையை பொறுத்தே அமைகிறது.
தக்காளியில் ஒரு கிலோ விதைபெற 120 முதல் 140 கிலோ பழங்கள் தேவைப்படும். கத்தரியில் 20 முதல் 30 கிலோ பழங்களில் இருந்து ஒரு கிலோ விதை எடுக்கலாம். தானியப் பயிர்கள் போலன்றி தக்காளி விதைகள் 100 சதவீத ஈரப்பதம் கொண்டவை. தேர்ந்தெடுத்த தக்காளி பழங்களை நன்கு கசக்கி கூழாக்கி பிளாஸ்டிக் அல்லது சிமென்ட் தொட்டிகளில் இட வேண்டும். ஒரு கிலோ பழத்திற்கு 30 மில்லி ஹைட்ரோகுளோரிக் அமிலம் சேர்த்து கலக்கவேண்டும். அரைமணி நேரம் கழித்து பார்க்கும் போது விதைகள் பிரிந்து அடியில் தங்கிவிடும்.
விதைகளை மட்டும் பிரித்து 4 முறை நீர் சேர்த்து கழுவியபின் நிழலில் உலர்த்த வேண்டும். மிதமான வெயிலில் காயவைத்து விதையின் ஈரப்பதத்தை 7 முதல் 8 சதவீதத்திற்கு குறைக்க வேண்டும். அமில முறையில் விதையை பிரித்தெடுக்கும் போது இரும்பு, தகர வாளியை பயன்படுத்தக் கூடாது. அதிக பரப்பளவில் விதைப்பயிர் சாகுபடி செய்பவர்கள் வேளாண்மைப் பல்கலை உருவாக்கியுள்ள தக்காளி விதை பிரித்தெடுக்கும் இயந்திரத்தை பயன்படுத்தலாம்.
பிரித்தெடுத்த விதைகளுடன் ஒரு கிலோ விதைக்கு 2 அல்லது 3 மில்லி ஹைட்ரோகுளோரிக் அமிலம் கலந்து 3 முதல் 5 நிமிடங்கள் நன்றாக கலந்து உலரவைக்க வேண்டும்.கத்தரிக்காயை பழங்களாக்கிய பின் சிறு துண்டுகளாக்கி அவற்றை சிமென்ட் அல்லது பிளாஸ்டிக் தொட்டியில் தண்ணீருடன் 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
பழங்களை ஓரிரு நாட்கள் ஊற வைத்தும் விதை எடுக்கலாம். மிதக்கும் சதைப் பகுதியை அகற்றிவிட்டு அடியில் படிந்த விதைகளை சேகரிக்க வேண்டும். ஒரு கிலோ விதைக்கு 2 அல்லது 3 மில்லி ஹைட்ரோகுளோரிக் அமிலம் கலந்து 10 நிமிடம் ஊறவைத்து 3 முறை தண்ணீரில் கழுவி உலரவைக்கவேண்டும்.விதைகளை அமிலநேர்த்தி செய்வதால் உலர வைப்பதும் எளிது. பூஞ்சாண தாக்குதலில் இருந்தும் தப்புகிறது. பூஞ்சாணத்தால் ஏற்படும் அழுக்கு நிறம் அகற்றப்பட்டு விதைகளின் நிறம் மற்றும் அதன் வீரியம் கூடுகிறது.
அமிலநேர்த்தி மூலம் விதை வீணாகாமல் அனைத்தையும் பிரித்தெடுக்கலாம். உலர்த்தியபின் ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பன்டசிம் கலந்து விதைநேர்த்தி செய்து அலுமினிய பைகளில் சேமிக்கலாம்.
- சுஜாதா, துறைத்தலைவர்நிலவரசி, ஆராய்ச்சியாளர்
விதை அறிவியல் மற்றும் நுட்பவியல் துறை
விவசாய கல்லுாரி, மதுரை
94437 90200
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!