வாழ்நாளில், அவருக்குள் நெருப்பாய் எரிந்து, நீராய்ச் சுழித்தப் பெரும் அவா நிறைவேறிவிட்டதில், மிகுந்த சந்தோஷம்.
குக்கிராமத்தில் பிறந்து, குடிசை வீட்டில் வாழ்ந்து, வெயிலுக்குக் கூரை மறைவை ஊடறுத்துக் கொண்டு, குடிசைக்குள் கரம் நீட்டும் சூரியக்கதிர்களைத் தாங்கி... மழைக்கு ஒழுக்கு மிகுந்தக் கூரைப் பொத்தல்கள் அனுமதிக்கும் நீர்த் திவலைகளை உடம்பில் ஏற்று...வறுமையில் காய்ந்த வயிற்றைச் சுமந்து, சீமை எண்ணெய் வறண்ட, 'சிம்னி விளக்கு' அணையும் போதெல்லாம், மனதில் பற்றிக் கொள்ளும் படிப்பார்வத்திற்கு வாய்தா வைத்து... தட்டுத்தடுமாறிப் படித்து, உயர்நிலைப்பள்ளி, கல்லுாரி படியேறி, அரசு நிறுவனம் ஒன்றில் வேலையில் நுழைந்து, நடுத்தர வாழ்க்கையை ஏற்று, திருமணம் முடித்து, ஆணொன்று, பெண்ணொன்று பிள்ளைகள் பெற்று, இன்று முழு வாழ்வு வாழ்ந்து வருகிறார், வைரமணி.
வறுமை நீங்கி, வாழ்க்கையை மனப்பூர்வமாக ஏற்று, மனைவி, நல்ல பிள்ளைகள் என்ற திருப்தியில், சென்னை நகர சந்தடிக்குள், ஒரு வாடகை வீட்டில் வாழ்ந்தார். இதை கூடப் பொறுக்க இயலாத இறைவன், அந்தக் கூட்டிற்குள்ளிருந்து, குடும்பம் நடத்தியவரின் மனைவியை... மக்களிருவரின் தாயைத் தன்னோடு அழைத்துப் போய் விட்டதை கண்ணீருடன் ஏற்றார், வைரமணி.
மகனையும், மகளையும் நன்கு படிக்க வைத்தார்.குக்கிராமத்தில், தான் வாழ்ந்த குடிசையும், வாழ்வும் அவருக்குள் ஒரு வைராக்கியத்தைச் செருகி விட்டிருந்தது. அது, தன் உயிர் இந்த மண்ணின் மடியில் மறைவதற்குள், விசாலமான, ஓட்டை, ஒழுகலில்லாத, ஒயிலான ஒரு வீட்டைக் கட்டி விடவேண்டும் என்ற லட்சியம் தான்!
தக்கி, முக்கி, வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டிச் சேர்த்து வைத்திருந்த பணத்தில், நீலாங்கரைக் கடற்கரைக்கு அருகில், காற்றோட்டமான ஒரு இடத்தை வாங்கிப் போட்டார்; தன் செல்ல மகளுக்கும், திருமணத்தை நடத்தி விட்டார்.மகனும் நல்லவனாக வளர்ந்திருந்தான். படிப்பிற்கேற்ற உத்தியோகம் கிடைத்தவுடன், அங்கு வேலை பார்த்த ஒரு பெண்ணின் பார்வையில் தன்னை இழந்தான். தகப்பனைக் கேட்காமலேயே அவளை இழுத்துக் கொண்டு வந்தான்.
இடி வந்து தன் தலையில் இறங்கி விட்டதாய் கருதினாலும், தாயில்லாமல் வளர்ந்த மகனைக் கடிந்து கொள்ள மனமின்றி, திருமணம் நடத்தி வைத்தார், வைரமணி.எல்லா ஆசைகளையும் தன்னிலிருந்து நீக்கி வைத்து வாழப் பழகிக் கொண்டவருக்கு, தன் இளமைப்பருவத்து ஓட்டைக் குடிசையின் நினைவுகளை நீக்கி வைக்க இயலவில்லை. ஆதலால், தான் வாங்கிப் போட்டிருக்கும் முக்கால் கிரவுண்ட் நிலத்தில், தன் கற்பனையிலிருந்து சிறிதும் பிசகாமல் ஒரு வீட்டைக் கட்டியே ஆகவேண்டும் என்ற வைராக்கியத்தை விலக்கி வைக்கவே இல்லை.
வயது, அவரையும், பணி நிறைவைப் பார்க்க வைத்தது. பணி நிறைவுப் பணப்பயன்கள் கணிசமாக வந்தன. ஏற்கனவே தன்னிடமிருந்த பணத்தையும் சேர்த்து, வீடு கட்டும் முடிவுக்கு வந்தார், வைரமணி.
நல்ல நாள் பார்த்து, கடைக்கால் போட்டார். தன் லட்சியப்படி திட்டமிட்டு, ஓய்வின்றி, உண்ணாமல், உறங்காமல், யார் கான்ட்ராக்ட்டிலும் விடாமல், கொத்தனார், சித்தாள் பிடித்து, வீடு கட்டி விட்டார்.
குக்கிராமத்தில், ஓட்டைக் குடிசை தந்த வைராக்கிய நெருப்பு, அவர் நெஞ்சத்தில் எரிந்து தணிந்து விடாமல், தீபமாகிப் பிரகாசித்து விட்டது என்ற பெருமிதத்தில், ஆசுவாசப் பெரு மூச்சுவிட நினைத்தார். அப்போது, தொண்டைக்குள் மூச்சுக் காற்று, வறட்சியடைத்து, இருமல் இடம் பிடித்து அமர்ந்து கொண்டது.
இரண்டு மாடி, தனித்தனி அறைகள், அழகிய வேலைப்பாடுகளுடன் அமைந்த முகப்பு. தன் மனதிற்கு நிறைவாக அனைத்து வசதிகளுடன் கூடிய வீடு, சிறப்பாய் அமைந்து விட்டது.
கிரகப்பிரவேசம் நடத்தி, சிறப்பாகக் குடி புகுந்தாகி விட்டது. அவருக்குள் மிகுந்த சந்தோஷம். அப்பாடா, ஓய்வெடுக்க வேண்டும்.
தனக்கெனக் கட்டிய தரைத்தள அறையில், கிழக்குப் பக்கச் சாளரத்தைத் திறந்து வைத்து, கண்ணில்படும், வீசிக் கொண்டிருக்கும் கடல் அலை மற்றும் தென்னை மரங்களைப் பார்த்தபடி ஓய்வெடுக்க வேண்டும். ஆனால், எல்லாம் நன்றாக அமைந்து விட்டபோதும், இந்தப் பாழாய் போன இருமல் மட்டும் விடாமல் துரத்தி, அவரை சிந்திக்கச் சொன்னது.
மகனும், மருமகளும் புறநகரிலிருந்து, சென்னை நகரத்திற்குள் தினம் வேலைக்குச் சென்று திரும்பியாக வேண்டும். அவர்கள் இல்லாதபோது, தனக்கு ஏதாவது தேவைகள் என்றால் என, சிந்தித்தபடியே ஈசிச் சேரில் சாயப்போனவர் முன், வந்து நின்றான், மகன்.
''வாப்பா, நம்ம குலம் விளங்க, என்ன செய்யணும்ன்னு, என் இளமைக் காலத்திலேருந்து கனவு கண்டேனோ, அதை நிறைவேற்றி விட்டேன்ப்பா... உனக்கும், மருமகளுக்கும் திருப்தி தானே?'' பெருமிதத்தோடு கேட்டார்.
''தாங்க்ஸ் அப்பா!''
''என்னடா?''
''நானும், உங்க மருமகளும் ரொம்ப நாளா, 'டிஸ்கஸ்' பண்ணி, ஒரு முடிவுக்கு வந்திருக்கோம்ப்பா... உங்களுக்கு இருமல் ரொம்ப அதிகமாயிடுச்சி, நாங்க தினமும் நகரத்திற்கு வேலைக்குப் போயிடுவோம். உங்களைக் கவனிக்க யாருமில்ல... இந்த பேப்பர்ஸ்ல, கையெழுத்து போடுங்கப்பா...'' மகன் நீட்டிய படிவங்களை வாங்கிப் பார்த்தவருக்கு, துாக்கிவாரிப் போட்டது.
'முதியோர் இல்லத்துல, எனக்கு இடம் பார்த்துட்டியா... நான் கட்டின இந்த வீட்டுல இருக்க விடாம என்னைத் தொரத்துறியா மகனே...' என, முணுமுணுத்தார்.
தான் பார்த்துப் பார்த்துக் கட்டிய மாளிகையையும், அதற்குள் தனக்குத்தான் எனக் கற்பிதம் செய்து அமைத்திருந்த சாளரம் விரிந்த அறையையும் ஏமாற்றத்தோடு பார்த்தார். அவரின் நெஞ்சினுள், 'பளிச்'சென ஒரு நெருப்புப் பற்றிக் கொண்டதை வேதனையோடு உணர்ந்து, மவுனமானார்.
தாமரை செந்துார் பாண்டி
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!