Load Image
Advertisement

இது உங்கள் இடம்!

கோவிலின் புனிதத்தை கெடுக்காதீர்!எங்கள் பகுதியில், பழமை வாய்ந்த சிவன் கோவில் ஒன்று உள்ளது. இங்கு, செவ்வாய், வெள்ளி, ஞாயிறு போன்ற நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். மற்ற நாட்களில் அவ்வளவாக கூட்டம் இருக்காது.
சமீபத்தில், ஒரு புதன்கிழமை, என் மகளுக்கு பிறந்த நாள் என்பதால் கோவிலில் அர்ச்சனை செய்து வர சென்றேன். அர்ச்சனை முடித்து பிரகாரத்தை சுற்றி வரும்போது, அங்கே இருந்த ஒவ்வொரு துாணுக்கு பின்னும், இளம் ஜோடிகள் உட்கார்ந்திருந்தனர். சில ஜோடிகள் பேசுவது, சில ஜோடிகள், 'சில்மிஷ'ங்களில் ஈடுபடுவது என, முகம் சுளிக்க வைத்தது.

வேண்டுதல்களுக்காகவும், நிம்மதிக்காகவும் கோவிலுக்கு வருகிறோம். மேலும், இவர்களின் செயல்களை பார்த்து, குழந்தைகள் கெட்டுப் போகவும் கூடும்.
'உங்களுக்கு தான், 'பார்க், லாட்ஜ்' இருக்கிறதே. அங்கு சென்று உங்கள் வேலைகளை செய்ய வேண்டியதுதானே, கோவிலின் புனிதத்தை ஏன் கெடுக்கிறீர்கள்.- '-பேஸ் புக், வாட்ஸ் ஆப்'பில் போட்டு, உங்களை அசிங்கப்படுத்தினால் தான் சரி வரும்...' என்று, திட்டி, மொபைல்போனில் வீடியோ எடுப்பது போல, பாவனை செய்தேன்.
கைகளாலும், சுடிதார் சால்வையாலும் முகத்தை மறைத்து ஓடி விட்டனர். இதே தர்மசங்கடத்தில் இருந்த பல பக்தர்களும், அதன்பின், நிம்மதியாக சாமி கும்பிட்டனர். 'கோவிலில் இவர்களின் தொல்லைகளை தவிர்க்க, விரைவில், 'சிசிடிவி' கேமரா பொருத்துங்கள்...' என, கோவில் நிர்வாகியிடம் கூறிவிட்டு வந்தேன்.
இளம் ஜோடிகள், -காதலர்கள், தங்கள் வேலையை அதற்கென உள்ள இடங்களில் வைத்துக் கொள்ளுங்கள். நிம்மதி வேண்டி கோவிலுக்கு வருவோருக்கு, மன சஞ்சலத்தை ஏற்படுத்தியும்,- கோவிலின் புனிதத்தையும் கெடுக்காதீர்!
- பெ.பொன்ராஜபாண்டி, மதுரை.

தையலுக்கு உதவிய தையல்!திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில், 'கார்மென்ட்ஸ் கம்பெனி'கள் அதிகமாக இருக்கிறது. அவற்றில், வட மாநிலத்தவர்கள் நிறைய பேர் பணிபுரிகின்றனர். அவர்களின் சுறுசுறுப்பும், வேலையில் ஈடுபாடும் திகைக்க வைக்கிறது.
சமீபத்தில், பனியன், ஜட்டி தயாரிக்கும் கம்பெனிக்கு, ஒரு வட மாநில பெண் வந்தார். அரைகுறை தமிழில், 'லைன் இன்சார்ஜர்' ஆக இருக்கும் பெண்ணிடம், 'அக்கா, நல்லா இருக்கியா. நான் ஆறு மாசம் முன் இங்கே வேலை செய்ய வந்தேன். உங்க யோசனைப்படி இப்போ நான் பெரிய, 'லேடீஸ் டெய்லர்' ஆயிட்டேன். சூப்பரா சம்பாதிக்கிறேன். ரொம்ப தேங்க்ஸ் அக்கா...' என்றாள்.
'ஹேய், நீயா. 'லேடீஸ் டெய்லர்' ஆயிட்டியா. நான் சொன்னதை கேட்டதற்கு நல்ல பலன் கிடைச்சுதா...' என்று பாராட்டினார், அந்த பெண் இன்சார்ஜர்.
எங்களிடம், 'இந்தப் பெண், இங்கே குறைவான சம்பளத்தில்,'ஹெல்பர்' ஆக வேலைக்கு வந்தாள். தையல் வகுப்பில் சேர்ந்து, 'டெய்லரிங், ஆரி ஒர்க், எம்ப்ராய்டரிங்' பழகு. உங்க வடமாநில பெண்களுக்கு ஜாக்கெட், சுடிதார் தைச்சுக் கொடுத்தா, நல்ல வருமானம் கிடைக்கும்.
'உங்க ஆளுங்களே உன்னைத் தேடி வருவாங்க. அதுமட்டுமின்றி, உங்க மாநிலத்தவர் குடியிருக்கும் இடத்துக்கு நீயே நேரடியா போய், 'ஆர்டர்' வாங்கலாம். ஹிந்தி பேசற கஷ்டமும் உனக்கு இல்லைன்னு, யோசனை சொன்னேன்.
'அதைக் கேட்டு, இப்போ டெய்லர் ஆயிட்டா. இதையே, நம் தமிழ் பெண்களுக்கும் சொன்னேன். ஆனா, அவங்க அதை கேட்கலை. ஹிந்தி பாஷை பிரச்னை பெரிசா இருந்துச்சு. ஆனாலும், முயற்சி பண்ணியிருந்தா, ஜெயிச்சுருக்கலாம். அட்லீஸ்ட். நம் தமிழ் வாடிக்கையாளர்களையாவது பிடிக்கலாம்ங்கிற எண்ணம் வரலை...' என்றார்.
வட மாநில பெண்ணின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்திய, அப்பெண்ணை அனைவரும் பாராட்டினோம்!
- ஏ.எஸ். யோகானந்தம், ஈரோடு.

இப்படியும் அஞ்சலி செலுத்தலாமே!இறந்த நம் தாய், தந்தை அல்லது ரத்த உறவுகளுக்கு, முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு என்று சுவரொட்டிகளிலும், நாளிதழ்களிலும் விளம்பரம் செய்து, அஞ்சலி செய்வது வழக்கம்.
என் தாயாரின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி அன்று, 10 இடங்களில், மரக்கன்று நட்டு, கம்பி வலை அமைத்து, அதில், முதலாமாண்டு நினைவஞ்சலி என, பலகையும் அமைத்து, பராமரித்து வருகிறேன்.
இதுபோல், மற்றவர்களும் அவரவர் வீட்டுக்கு அருகில், இரண்டு மரக் கன்றுகளையாவது நட்டு வளர்த்தால், நாடே பூஞ்சோலையாக மாறிவிடும். அனாவசிய செலவுகளை தவிர்த்து, நாம் பிறந்த மண்ணுக்கும், அடுத்த தலைமுறைக்கும் இதை செய்து விட்டு போவோமே. மரம் வளர்ப்போம்; மழை பெறுவோம்; சொல்லில் அல்ல, செயலில்!
- ப. ராமமூர்த்தி, சிவகங்கை.வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement