உயிர்காக்கும் ஆம்புலன்ஸ்!
உயிருக்கு போராடுபவரைக் காக்க உதவுகிறது, ஆம்புலன்ஸ் சேவை. முதலுதவியுடன் தாமதமின்றி மருத்துவ உதவி கிடைக்கவும் வழி செய்கிறது. இந்த சேவை, 500 ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டது.
ஆம்புலன்ஸ் சேவை பிறந்த கதையை பார்ப்போம்...
லத்தீன் மொழி சொல்லான, 'ஆம்புலரே' என்பதிலிருந்து பிறந்தது, ஆம்புலன்ஸ். இதற்கு, 'நட' அல்லது 'நகர்த்து' என்று பொருள். போரில் காயம்பட்டோரைக் காக்கும் வகையில் தான், முதலில் இந்த சேவை துவங்கப்பட்டது. வலுவான மூங்கில் குச்சிகளில் தொட்டில் போல் துணியை கட்டி, போர்க்களத்தில் காயம் பட்ட வீரர்களை, துாக்கி செல்ல ஏற்றவாறு அமைந்திருந்தது.
உடல் திறன் வாய்ந்தவர்கள் இதை துாக்கும் பணியில் நியமிக்கப்பட்டிருந்தனர்.ஐரோப்பிய நாடான ஸ்பெயினில், கி.பி., 1487ல் முதல் ஆம்புலன்ஸ் சேவை துவங்கப்பட்டதாக வரலாற்றில் குறிப்பு உள்ளது. ஆனாலும், ஆம்புலன்ஸ் சேவையை துவக்கிய பெருமை, டொமினிக் ஜுன் லரே என்பவரையே சாரும்.
ஐரோப்பிய நாடான பிரான்சில், 1766ல் பிறந்த இவர் மருத்துவராக பணியாற்றி வந்தார். ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி - பிரான்ஸ் இடையே நடந்த போரில் ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். அப்போதைய சட்டப்படி, போர்க்களத்தில் இருந்து, 2.5 கி.மீ., துாரத்துக்கு அப்பால் தான், மருத்துவர்கள் பணியாற்ற வேண்டியிருந்தது. இதனால், காயம்பட்டோரை காப்பாற்ற முடியாத நிலை இருந்தது.
மருத்துவ உதவியின்றி பல்லாயிரம் வீரர்கள் மடிந்தனர். இதை தடுக்க வழி தேடினார் டொமினிக்.பிரான்ஸ் நாட்டின் ஆட்சியை, நெப்போலியன் பிடித்தபோது, தலைமை மருத்துவராக நியமிக்கப்பட்டார் டொமினிக். அப்போது தான், ஆம்புலன்ஸ் வாகனத்தை வடிவமைத்தார். குதிரை வண்டியில் சில மாற்றங்கள் செய்து அது உருவாக்கப்பட்டிருந்தது. போர்க்களத்தில் பயன்படுத்துவதற்கு ஏற்ப இருந்தது. காயம்பட்ட வீரர்களுக்கு சிகிச்சை அளிக்க உதவியது.
போர்க்களத்தில், 1793ல் பயன்படுத்தப் பட்ட இந்த வாகனம், பின், பொதுமக்கள் பயன்பாட்டுக்கும் கொண்டு வரப்பட்டது. ஐரோப்பிய நாடான இங்கிலாந்து தலைநகர் லண்டனில், ஆம்புலன்ஸ் சேவையை, 1887ல் துவங்கியது, செயின்ட் ஜான் நிறுவனம். அதற்கு, நல்ல வரவேற்பு கிடைத்ததால், குறுகிய காலத்தில் பல நாடுகளில் கிளைகளைத் துவங்கியது.மோட்டார் வாகனத்தில் ஆம்புலன்ஸ் சேவை, 1899ல் துவங்கப்பட்டது.
இந்த வாகனம், அமெரிக்காவில் வடிவமைக்கப்பட்டது. அங்குள்ள சிகாகோ நகரில், மைக்கேல் ரீஸ் மருத்துவமனை அந்த வாகனத்தை அவசர சிகிச்சை அளிக்க பயன்படுத்தியது. இப்போது, உலகம் முழுதும் எளிதாக கிடைக்கிறது. இந்தியாவில் முதலில், மும்பை நகரில் ஆம்புலன்ஸ் சேவை துவங்கியது. தமிழகம் உட்பட பல மாநிலங்களிலும், இப்போது இலவசமாக கிடைக்கிறது.
தொலைபேசி எண், 108ல் அழைத்தால், இருக்கும் இடத்துக்கு வந்து ஆம்புலன்ஸ் வாகனம் சேவை வழங்குகிறது. தென்னாப்பிரிக்காவில், இந்தியன் ஆம்புலன்ஸ் கிராப்ஸ் என்ற நிறுவனத்தை துவங்கி, ஆம்புலன்ஸ் சேவையை வழங்கி வந்தார் காந்திஜி. அதில், ஸ்ட்ரெச்சர் துாக்கும் பணியையும் செய்தார். எல்லா சேவைகளிலும் முன்மாதிரியாக செயல் பட்டதால், மனிதரில் மாணிக்கமாக போற்றப்படுகிறார் காந்தி மகான்.
- என்றென்றும் அன்புடன், அங்குராசு.
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!