புதுச்சேரி, திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து, தேனுார் அரசு உயர்நிலைப் பள்ளியில், 1968ல், 6ம் வகுப்பு படித்தபோது ஆங்கில ஆசிரியராக இருந்தார், சேதுராமன்; மிகவும் கண்டிப்பானவர். உடன் படித்த காமராஜுக்கு ஆங்கிலம் படிக்கவோ, எழுதவோ வராது. நான் தான், 'ஈஸ், வாஸ்' என தமிழில் எழுதி கொடுப்பேன். தட்டுத்தடுமாறி படித்து சமாளித்து வந்தான்.
ஒரு நாள், முந்தைய நாள் நடத்திய பாடத்தை படிக்க சொன்னார் ஆசிரியர். படிக்க இயலாமல் தடுமாறியவனை அதட்டி கேட்டதும் உண்மையை கூறி அழுதான். நோட்டு புத்தகத்தை சோதனையிட்டவர், 'இது போல், தமிழில் எழுதி வைத்து ஆங்கில மொழியை படிக்க கூடாது; முறையாக புரிந்து படிக்க வேண்டும்...' என்று அறிவுரைத்து, 'இனி நானே பிரத்யேகமாக ஆங்கிலம் கற்று தருகிறேன்...' என்று ஆறுதல் கூறினார். தமிழில் எழுதி கொடுத்து, தவறாக வழி காட்டிய என்னையும் கண்டித்தார்.
பின், அடிப்படை ஆங்கிலத்தை முறையாக பயிற்றுவித்தார். ஆறு மாதத்தில் சரளமாக எழுத, படிக்க ஆரம்பித்தான். இறுதி தேர்வில் நல்ல மதிப்பெண்களுடன் வென்றான். தொழிற்கல்வி பயின்று, தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றான்.தற்போது, என் வயது, 63; வாழ்வில் ஒளி ஏற்றிய அந்த ஆசிரியரை, மானசீகமாக அவன் வணங்கி வருவதை இன்றும் காண்கிறேன்.
- கே.கல்யாணம், திருவள்ளூர்.
தொடர்புக்கு: 98408 78810
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!