அன்புள்ள அம்மா...
என் வயது, 33; கணவருடன் சென்னை புறநகர் பகுதியில் வசித்து வருகிறேன். வீட்டின் முன் பகுதியை, சிறு மளிகை கடையாக மாற்றி வியாபாரம் செய்கிறார் என் கணவர்.எங்களுக்கு, 9 வயதில் மகள் இருக்கிறாள்; அழகாக, 'துறு... துறு...' என இருப்பாள். சமத்தாக பேசுவாள்; பள்ளிக்கு சென்ற அவளை, 'டிவி' சீரியல் தயாரிக்கும் நிறுவன மேனேஜர் பார்த்திருக்கிறார். அவர்கள் தயாரிக்கும் மெகா சீரியல் தொடரில் எங்கள் மகள் நடிக்க வேண்டும் என கெஞ்சுகிறார். ஏராளமான வாக்குறுதிகள் தருகிறார். என்ன பதில் சொல்லலாம் என தெரியாமல் குழம்பியுள்ளோம்.
தயவுசெய்து நல்ல ஆலோசனை தாருங்கள்.
இப்படிக்கு,
ஆ.வினு.
அன்புள்ள அம்மா...
உலகின், முதல் குழந்தை நட்சத்திரம் யார் என தெரியுமா...சார்லி சாப்ளின் படத்தில், 1921ல் நடித்த ஜாக்கி கூகன் என்ற, 7 வயது சிறுமி தான். தமிழ் படம் மற்றும் தொடர்களில் நடிக்கும் குழந்தை நட்சத்திரங்களின் பட்டியல் இதோ...
பேபி அங்கிதா, சாரா, பேபி சாதனா, நைனிகா, ரமேஷ், கவின், சாதன்யா, ராஜமாணிக்கம், அக்சத், சாதனா என சொல்லிக் கொண்டே போகலாம். சிறுவர், சிறுமியர் சினிமாக்களிலும், சீரியல்களிலும் நடிப்பதை, குழந்தை தொழிலாளர் (தடை மற்றும் ஒழுங்குபடுத்தல்) திருத்த விதிகள், 2017 நிபந்தனைகளுடன் அனுமதிக்கிறது.
சீரியல்களிலோ, சினிமாக்களிலோ நடிக்கும் குழந்தைகளின் பெயர், பெற்றோர் விபரம் எல்லாம் எழுத்துப் பூர்வமாக குறிப்பிட்டு, மாவட்ட நீதிமன்றத்திடம் சீரியல் தயாரிப்பு நிறுவனம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஒரு நாளைக்கு, அதிகபட்சம், ஐந்து மணி நேரத்துக்கு மேல், குழந்தை நட்சத்திரங்களை நடிக்க வைக்க கூடாது. தொடர்ச்சியாக, மூன்று மணி நேரம் மட்டுமே நடிக்க வைக்கலாம். தரப்படும் சம்பளத்தில், 20 சதவீதத்தை குழந்தை பெயரில், வங்கியில், 'டிபாசிட்' செய்ய வேண்டும். நடிக்கும் குழந்தை, பாலியல் வன்முறைகள் இல்லாத சூழலில் பாதுகாக்கப்பட வேண்டும்.
அவர்களுக்கு, சத்தான உணவு, துாய்மையான ஓய்விடம் வழங்கப்பட வேண்டும். குழந்தைகள் படிப்புக்கு, பாதிப்பு இல்லாமல் படப்பிடிப்பு நடத்த வேண்டும். குழந்தை நட்சத்திரங்களை தொடர்ச்சியாக, 27 நாட்கள் வேலை வாங்க கூடாது; அடிக்கவோ, துன்புறுத்தவோ கூடாது.
உங்கள் மகளை நடிக்க வைக்கும் முன், சீரியலின் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் சீரியல் ஒளிபரப்பாகும் சேனல் பற்றி முழுமையாக விசாரிக்கவும். 'ஷூட்டிங்' இடத்துக்கு சென்று வர தகுந்த போக்குவரத்து ஏற்பாடுகளை செய்து தருகின்றனரா என உறுதி பெறவும். சீரியலில் நடிக்க போகும் கதாபாத்திரத்தை பற்றியும், சீரியலின் முழு கதை பற்றியும், முழுமையாக கேட்டறிந்து கொள்ளவும்.
பெண்களை இழிவுபடுத்தும் கதை என்றால் வேண்டாம் என்று ஆணித்தரமாக கூறி விடவும்.உங்கள் மகள் நடிக்கும் சீரியலை பார்க்க, ஆவலுடன் காத்திருக்கிறேன்!
வாழ்த்துகள்!
- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!