Load Image
dinamalar telegram
Advertisement

இளஸ் மனஸ்! (158)

அன்புள்ள அம்மா...
என் வயது, 16; பிரபல மகளிர் பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறேன். எப்போதும், யாருடனாவது பேசியபடியே இருப்பேன். என்னை, 'ஓட்டை வாய்... வாயாடி வனஜா... வாயால் வடை சுடுபவள்...' என, தோழியர் கிண்டல் செய்வர்.
நான் புத்திசாலிதனமாக பேசுவேன்; என் அறிவு, வார்த்தைகளில் வழிகிறது என நம்பியுள்ளேன். என் பேச்சை கேட்டு அனைவரும் பொறாமைப் படுகின்றனர்.
ஆனால், என் தந்தை வழி பாட்டி, மாதத்திற்கு ஒருநாள் என்னை மவுன விரதம் இருக்க சொல்கிறார். மவுன விரதம் கடைபிடிப்பதால் என்ன பெரிதாய் சாதித்து விட முடியும். இது பற்றி விளக்கி கூறுங்கள் அம்மா.

இப்படிக்கு,
மா.சந்தியா.

அன்பு மகளுக்கு...
தத்துவமேதை ரூமி, 'உதடுகள் மவுனம் காக்கும் போது, இதயத்துக்கு ஆயிரம் நாக்குகள்...' என்று விளக்கம் அளித்துள்ளார். புத்த சமயம், 'மவுனம் காலி பாத்திரமல்ல; ஆயிரம் பதில்கள் நிரம்பியுள்ள அறிவு சூட்சுமம்...' என்று கூறுகிறது.
வாழ்வில் பேசுவதற்கு, மூன்று ஆண்டுகளில் கற்றுக் கொள்கிறோம்; ஆனால், நாக்கை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை கற்றுக்கொள்ள ஆயுட்காலம் போதவில்லை.
பிரபஞ்சம் ஆயிரமாயிரம் சப்தங்களின், அதிர்வுகளின் மணி மண்டபம்; நீயும் சப்தங்களை எழுப்பி, கூட்டத்தில் ஒருத்தியாக காணாமல் போகாதே. யோக சூத்திரம் நுாலில், 'பேசாதிருப்பதே சிறப்பான மவுன விரதம்...' என, கூறியிருக்கிறார், பதஞ்சலி முனிவர்.
மவுனம் என்பது, ஆழ்நிலையில் அமைதியாக இருப்பதாகும்; மவுன விரதம் இருக்கும் போது, சைகையில் பேசுதல், எழுதிக் காட்டுதல் கூடவே கூடாது. மவுன விரதத்தை, எல்லா மதங்களும் போற்றுகின்றன; நிசப்தம், சப்தத்தை தாண்டிய ஒன்று.
தங்க நகையில், சிறிது செம்பு கலந்திருப்பது போல, பேச்சில் எப்போதுமே சிறிது பொய் கலந்து விடும். பொய் கலவாத பேச்சு, இவ்வுலகத்தில் இல்லை.
ஆசிய நாடான இந்தோனேசியாவில், மார்ச் மாதத்தில் ஒரு நாள், இந்துக்கள் அனைவரும், மவுன விரதம் இருக்கின்றனர். அதை, 'நியாப்பி நாள்' என கூறுகின்றனர்.
உன் பாட்டி கூற்றுபடி நடப்பது முறையானது. கண், காதுகளை விரிய திறந்து, வாயை மூடி வை; கேள்வியால் ஞானம் பெறலாம்.
மவுன விரதத்தின் போது, பழச்சாறு அல்லது வெறும் தண்ணீர் மட்டும் உட்கொள்ளவும்.
மவுன விரதம் இருக்கும் போது, ஹரிச்சந்திரனாக, கூடு விட்டு கூடு பாயலாம்.
பேசும் வார்த்தைகளுக்கு நீ அடிமை! பேசா வார்த்தைகளுக்கு நீ எஜமான்.
பேச்சை குறைத்தால் சர்ச்சைகளிலிருந்து விடுபடலாம். அதனால் தான் வள்ளுவர், 'தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு...' என்கிறார்.
தவறான வார்த்தையால், உறவும், நட்பும் சிதைந்து விடும் அபாயம் உள்ளது.
பேசி பேசி அறிவாளியாக காட்ட முயலாதே; வார்த்தைகளை அளந்து பேசி, மெய்யான அறிவு ஜீவியாக வெளிப்படு.
மகாத்மா காந்திஜி மவுன விரதம் இருந்துதான், அகிம்சை வழி போராட்டத்தில் ஜெயித்தார்.
நீயும், காந்திஜியின் கொள்ளு பேத்தியாக அவதாரம் எடு; நரம்பில்லாத நாக்கை மவுன விரதம் எனும் அங்குசத்தால், வீட்டுக் காவலில் வை. வாழ்வில் வெற்றிகள் கூடும்!
- அள்ளக்குறையா அன்புடன்,
பிளாரன்ஸ்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement