Load Image
dinamalar telegram
Advertisement

மாத்தி யோசிப்போம்!

அன்று மாதத்தின் முதல் தேதி, மாலை, 6:00 மணி. வழக்கம்போல, அந்த ஹோட்டலின் அனைத்து டேபிள்களிலும் வாடிக்கையாளர்கள் வியாபித்திருந்தனர். வாடிக்கையாளர், 'ஆர்டர்' செய்த உணவுகளை, உடனுக்குடன், சுடச்சுட எடுத்து வந்து டேபிளில் சேர்த்துக் கொண்டிருந்தான், சப்ளையர் சாரதி.
வழக்கமாக மாதத்தின் முதல் தேதியிலேயே சம்பளம் போடும் நல்ல முதலாளி தான், அவனுக்கு அமைந்திருக்கிறார். ஆனாலும், சில நேரம் இரண்டொரு நாள் தள்ளிப்போகும்.

வேலையில் மூழ்கியிருந்த சாரதியின் மனம், 'அப்பாவோட மருந்து, மாத்திரை இன்றோடு தீர்ந்துடும். அதை, உடனே வாங்கணும். இன்றைக்கு சம்பளம் போட்டாத்தான், எல்லாத்தையும் சமாளிக்க முடியும். இல்லைன்னா, முன்பணமாக கொஞ்சம் கேட்டு வாங்கிடணும்...' என, பணத்தேவையை நினைவூட்டியது. பலவித சிந்தனைகளோடு முதலாளி அமர்ந்திருந்த மேசையை அவ்வப்போது பார்த்தபடியே இருந்தான்.
அன்று ஹோட்டல், 'பிசி'யாக இருந்ததால், நல்ல வருமானம் தான். அதிக வாடிக்கையாளர்களால் நிறைந்திருந்த கல்லாவைத் திறந்து, பணத்தை எண்ணிக் கொண்டிருந்தார், முதலாளி முத்து.
அதை, ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டிருந்த சாரதி, 'அப்பாடா... இன்னக்கி எப்படியும் சம்பளம் கிடைச்சிடும். அப்பாவுக்கு மருந்து வாங்கிடலாம்...' என, நினைத்து நகர்ந்தபோது, ஒரு மேசையில், கணக்கு ஆசிரியர் கணேசனைப் பார்த்தான். அவரிடம் விசாரிக்க வேகமாய் சென்றவன், பள்ளிப் பருவத்தில், அவர் அவனை அவமானப்படுத்தியது நினைவுக்கு வந்ததும், சுவரில் அடித்த பந்தாய் திரும்பினான்.
சற்று நேரத்தில், சமையலறைப் பக்கம் முதலாளி போவதைப் பார்த்ததும் பரவசமானான், சாரதி. வழக்கமாக சம்பளம் அங்கு வைத்து தான் கொடுப்பார். அவன் நினைத்தது போலவே, ஒவ்வொருவராய் அழைத்தார். பதற்றமாய் இருந்தான், சாரதி.
ஒரு வழியாய் அவனை அழைத்து, சம்பள கவரைக் கொடுத்து, ''சாரதி... இதுல, 22 நாள் சம்பளம் இருக்கு,'' என்றார், முதலாளி முத்து.
''என்னங்க முதலாளி, எனக்கு, 25 நாள் சம்பளம் வரணும். சரியா கணக்குப் பாருங்க,'' என்றான்.
''ஏய்... என்கிட்டயே கணக்குச் சொல்றியா. எல்லாம் சரியாத்தான் கொடுத்திருக்கேன். போடா, போய் வேலையைப் பாரு,'' என்றார்.
சாப்பிட்டு முடித்து கை கழுவச் சென்ற ஆசிரியர் கணேசன், ஏதோ சத்தம் கேட்டு, சமையலறைப் பக்கம் எட்டிப் பார்த்தார். முதலாளியோடு சாரதி பேசிய அனைத்தையும், கவனித்துக் கொண்டிருந்தார்.
''நான் சரியாத்தான் சொல்றேன் முதலாளி. போன மாசமும் இப்படியேதான் சொன்னீங்க. மூணு நாள் சம்பளம், 1,500 சேர்த்துக் கொடுங்க,'' செலவுகளை மனதில் வைத்து, பதற்றமுடன் கறாராய்க் கேட்ட சாரதியை முறைத்தார், முதலாளி.
சட்டென கோபமாய், பாக்கெட்டிலிருந்த, 1,500 ரூபாயை எடுத்து, சாரதியின் முகத்தில் வீசிய முதலாளி, ''என் கணக்கையே தப்புன்னு சொல்றியா... இத எடுத்துக்கிட்டு உடனே இடத்தைக் காலி பண்ணு... நாளையிலிருந்து வேற வேலை பார்த்துக்கோ,'' என விரட்டினார்.
நிதானமாய், சிதறிக் கிடந்த ரூபாயை எடுத்து, எண்ணிப் பார்த்தான். அவன் கேட்ட பணம் சரியாக இருந்தது. நடந்ததையெல்லாம், சக ஊழியர்கள் பார்த்துக் கொண்டிருந்ததால், அவமானத்துடன், 'விடுவிடு'வென ஹோட்டலில் இருந்து வெளியேறினான், சாரதி.
உடனே, முதலாளியின் அருகே சென்ற ஆசிரியர் கணேசன், ''சார்... இவன் படிக்கற காலத்துலயே இப்படித்தான் இருப்பான். சரியா கணக்கு வராது. முட்டை மார்க் வாங்குவான்,'' என்றார்.
''இவனை உங்களுக்குத் தெரியுமா?''
''தெரியுமாவா... இவனை என் வாழ்நாள்ல மறக்கவே முடியாது. இவனால என் மானமே போயிருக்கு.''
''அப்படியா?''
''ஆமாம். என் சர்வீஸ்ல தொடர்ந்து, 100 சதவீதம் ரிசல்ட் கொடுப்பேன். ஆனா, இவன் படிச்ச வருஷம், கணக்குல, 'பெயில்' ஆனதால, அது போச்சு. அப்பவே, 'தெருத்தெருவா அலையப் போறேன்'னு சொன்னேன். அதுதான் இப்போ நடக்குது.''
முதலாளிக்கு ஆதரவாய்ப் பேசி, நடையைக் கட்டிய கணேசனை, நக்கலாய்ப் பார்த்த சர்வர் ஒருவர், ''சார்... உங்களுக்கு எங்க முதலாளியைப் பத்தி என்ன தெரியும்... எங்க எல்லார்கிட்டயும், இப்படித்தான் பொய் சொல்லி, மூணு - நாலு நாள் காசை குறைச்சுத்தான் சம்பளம் கொடுப்பார்.
''சாரதி, வேலைக்குச் சேர்ந்து ரெண்டு மாசம் தான் ஆகுது. அவனுக்கு, இதெல்லாம் தெரியாது. ஆனா, கடும் உழைப்பாளி. அதான், எதிர்த்துக் கேட்டான்,'' என்றவன், 'வந்துட்டாரு வாத்தியாரு, கருத்துச் சொல்ல...' என, முணுமுணுத்தபடியே நகர்ந்தான்.
சமையலறையில் மறந்து வைத்துவிட்ட இரு சக்கர வாகனச் சாவியை எடுக்க, திரும்ப வந்த சாரதி, அங்கு நடந்த அனைத்தையும் கேட்டு விட்டான்.

வேலையை இழந்த சோகம் மற்றும் ஆசிரியரால் அவமானம் என, சாரதியின் மனதில் ஒரு சேர குடியேறியது. சாலையில் நடந்து சென்றவன் உடலில், காலையில் இருந்த தெம்பு போய் விட்டதை உணர முடிந்தது.
அப்போது, உணவு எடுத்துச் செல்லும் பையைச் சுமந்தபடி, இரு சக்கர வாகனத்தில் சீருடையுடன் சென்று கொண்டிருந்த சாரதியின் நண்பன் துருவன், அவனைப் பார்த்ததும், வண்டியை நிறுத்தினான்.
''டேய் சாரதி... எப்படிடா இருக்க?'' என்றதும், யாரோ அடித்தது போல அழ ஆரம்பித்தான், சாரதி.
''என்னடா ஆச்சு, ஏன்டா... இப்படிக் குழந்தை மாதிரி அழற?'' என்றதும், அழுகையை நிறுத்திய சாரதி, ஹோட்டலில் நடந்த அவமானம், அப்பா, உடம்பு முடியாம படுத்த படுக்கையா இருப்பது, அம்மா, வீட்டு வேலைக்குப் போய் கஷ்டப்படுவது மற்றும் ஓரளவு குடும்பச் செலவுக்கு உதவியாக இருந்த தன் சம்பளமும் இல்லாது போன நிலையை, கொட்டித் தீர்த்தான்.
''கவலைப்படாத சாரதி... நான், என் கம்பெனியில பேசிப் பார்க்கறேன். ஆதார் கார்டை என், 'வாட்ஸ் ஆப்'புக்கு அனுப்பு. ஒரு நாள் பொறுத்துக்கோ. உனக்கு, நல்ல பதிலாச் சொல்றேன்,'' என்றான்.
துருவன் புறப்பட்டதும், மறக்காமல் அப்பாவுக்கு மருந்துகளை வாங்கினான். வீடு வந்தடைந்ததும், முதல் வேலையாக ஆதார் கார்டை தேடி எடுத்து படம்
பிடித்து, துருவனின், 'வாட்ஸ் ஆப்' எண்ணிற்கு அனுப்பியதும், சற்று நிம்மதியடைந்தான்.

அன்று இரவு முழுதும், வேலையின்றி மறுநாள் கழியப் போகும் நேரங்களை எண்ணி பல்வேறு சிந்தனைகள் மனதில் வந்து போனது. சரியான உறக்கம் இல்லை.
விடிந்ததும், காலையிலே குளித்து, வழக்கமாகக் கிளம்பும் நேரத்துக்கு வீட்டை விட்டுப் புறப்படத் தயாராகும்போது, துருவனிடமிருந்து அழைப்பு வந்தது.
''நீ உடனே கிளம்பி, டவுன்ல இருக்கற பெரிய ரவுண்டானா சிக்னலுக்கு அருகே வா,'' எனக் கூற, 20 நிமிடத்தில் அங்கிருந்தான், சாரதி.
''ஒருவழியாப் பேசி, என் கம்பெனியிலயே வேலை வாங்கிட்டேன்டா. ஒரு வாரம் பாரு; பிடிச்சா செய். இல்லைன்னா, வேற வேலை பார்த்துக்கலாம். உனக்கு ஜாமின் பணமும் நானே கட்டிட்டேன்,'' என, வாகனத்தில் இருந்த உணவு சுமக்கும் பெரிய பையை சாரதியிடம் கொடுத்தான்.
''இனி, உன் மொபைல்போனுக்கு, உணவு, 'ஆர்டர்' வரும். உடனே, அவங்க சொல்ற இடத்துல, அதை வாங்கிக் கொடுக்கறதுதான் வேலை. ஆனா, விரைவாய் கொண்டு போய்க் கொடுக்கணும். நீ எவ்வளவுக்கெவ்வளவு சுறுசுறுப்பா இருக்கியோ, அவ்வளவு கமிஷன் கிடைக்கும்,'' சாரதியைக் கை குலுக்கி, வாழ்த்தி விடை பெற்றான், துருவன்.

இரண்டு நாட்கள் கடந்தன.
உணவு, 'ஆர்டர்' கொடுக்க ஒரு வீட்டு வாசலில் இரு சக்கர வாகனத்தை நிறுத்திய சாரதி, அங்கு ஆசிரியர் கணேசனை சந்திப்பான் என, கனவிலும் நினைக்கவில்லை. அவனைச் சற்றும் எதிர்பார்க்காத கணேசன், எதுவும் பேசாமல், அவன் முகத்தை நேரடியாக பார்க்காமல், உணவுப் பொட்டலத்தைப் பெற்றுக் கொண்டார்.
''சார்...'' என்றதும், நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்த்த கணேசன், ''எப்படிப் போகிறது வேலை,'' என, கேட்டார்.
''பரவாயில்லை சார்... வேலை செய்யாம சும்மா சுத்திச் சுத்தி வருவதற்கு, இப்படி உணவோட சுத்தறது, நிம்மதியையும், ஓரளவு சம்பளத்தையும் தருது. சர்வீஸ் எப்படின்னு, கம்பெனியிலிருந்து மெசேஜ் வரும் சார். நல்ல, 'ரேட்டிங்' போடுங்க பிளீஸ்...'' யதார்த்தமாய்ச் சொல்லி, நகர்ந்த சாரதியை, சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்த கணேசனுக்கு கண்கள் லேசாகக் கலங்கியது.
கடும் உழைப்பு, சுறுசுறுப்பு மற்றும் விசுவாசம் இவையெல்லாம் நல்ல வருமானத்தைத் தந்ததால், சாரதியின் பிரச்னைகள் சிறிது சிறிதாகக் குறைந்தது.

நாட்கள் வேகமாய் நகர்ந்தன. இரண்டு ஆண்டுக்குப் பிறகு ஒரு நாள், பெட்ரோல் பங்க்கில் சாரதியை மீண்டும் சந்தித்தார், அவன் பழைய ஹோட்டல் முதலாளி முத்து. ஆளே ஒடுங்கிப் போயிருந்தார். வழக்கமாக காரில் வரும் அவர், அன்று பழைய இருசக்கர வாகனம் ஒன்றில் உட்கார்ந்திருந்தார்.
சொகுசு கார் ஒன்றில் அமர்ந்தபடி வாகனத்துக்கு எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்த, சாரதி, முதலாளியைப் பார்த்ததும், இறங்கி ஓடினான். வணக்கம் சொல்லி, ''முதலாளி... என்னாச்சு, ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க,'' என்றான் அக்கறையாய்.
''என்னத்தச் சொல்ல... எல்லாம் போச்சு... என் பையன்...'' என்றார் இழுத்தபடி. அதற்குமேல் பேச வார்த்தை வராமல் கலங்கினார்.
''சின்ன முதலாளிக்கு என்னாச்சு?'' பதற்றமாய்க் கேட்ட சாரதியின் வார்த்தைகளில், விசுவாசம் தெரிந்தது.
''சம்பாதிச்சு வச்ச பணத்தையெல்லாம், கொஞ்சம் கொஞ்சமா, 'ஆன்லைன்' சூதாட்டத்துல இழந்துட்டான். ஹோட்டலை விக்கற அளவுக்கு, நிறையக் கடன். இதுக்குமேல ஒண்ணும் சொல்றதுக்கில்ல,'' என, கலங்கிய கண்களைத் துடைத்தபடி, ''எல்லாம் நான் செஞ்ச பாவம். சரி... அத விடுப்பா, நீ என்னப்பா ஆளே மாறிட்டே. காரெல்லாம் வாங்கியிருக்கியே. எப்படி வந்தது இந்த அதிர்ஷ்டம்?'' என்றார் அதிர்ச்சியும், ஆச்சரியமுமாய்.
வாகனத்தின் உள்ளேயிருந்து எட்டிப் பார்த்த, துருவன், ''அதிர்ஷ்டமெல்லாம் ஒண்ணுமில்ல சார்... கொஞ்சம் மாத்தி யோசிச்சோம். அதற்குப் பலன் கிடைத்தது,'' என்றான்.
புரியாமல் விழித்த, ஹோட்டல் முதலாளியிடம் விளக்கினான், சாரதி...
''ஒரு வருஷமா, நானும், நண்பன் துருவனும் உணவு கொடுக்க பல தெருவுக்கும், வீடுகளுக்கும் அலையும்போதெல்லாம், எந்த வீடு விலைக்கு வருது, எந்த வீடு வாடகைக்கு இருக்குறதுங்கற விபரங்களைக் கொஞ்சம் கொஞ்சமா சேகரித்து வந்தோம்.
''கொஞ்சம் மாத்தி யோசிச்சோம். வீடு வாங்கறது, விற்கறது, வாடகைக்கு வீடு பிடித்து விடறதுன்னு, 'கன்சல்ட்டிங் ஏஜென்சி' ஒண்ணு துவங்கி, நாமே நடத்தலாம்ன்னு, துருவன்கிட்டச் சொன்னேன். சரின்னு சொன்னதும், ரெண்டு பேரும் பார்ட்னரா சேர்ந்து, கொஞ்சம் முதலீடு போட்டு தொழில் துவங்கினோம். இப்போ, நல்ல வருமானம் வருது.
''ரொம்ப நன்றி முதலாளி. ஏதாவது உதவி தேவைன்னா தயங்காமக் கேளுங்க. நான் இந்த அளவுக்கு வளர்ந்ததே, உங்களால தான். என் வாழ்நாளில், உங்களை மறக்கவே மாட்டேன்.
''நீங்க மட்டும் அன்னைக்கு என்னை, ஹோட்டலிலிருந்து வெளிய விரட்டலைன்னா, நான் இந்த அளவுக்கு முன்னேறி இருக்க முடியாது, முதலாளி. அதான் சொன்னேன்,'' என, கம்பெனி விசிட்டிங் கார்டை கொடுத்த சாரதி, அவர் காலில் விழுந்து வணங்கி, விடைபெற்றான்.

பூபதி பெரியசாமி

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து (2)

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement