Load Image
dinamalar telegram
Advertisement

மீம் கிரியேட்டர் வைதிக்!

பிகாஸோ அடுக்குமாடி குடியிருப்பு, நான்காம் தளம், அதிகாலை மணி, 5:30.
படுக்கையிலிருந்து எழுந்தான், வைதிக். வயது, 38. திருமணத்தை விரும்பாத பிரம்மச்சாரி. சிவந்த பென்சில் குச்சி உடல்வாகு. கருகரு தலைகேசம். ஒழுங்கீனமான தாடி. பவர் கிளாஸ் கண்கள். கும்பகோணம் ஓவியக் கல்லுாரியில் படித்தவன். கேலி சித்திரங்கள் வரைவதில் கெட்டிக்காரன்.
பல் துலக்கி, காலைக் கடன்களை முடித்தான். கைபேசியில், இணையத்தில் காலை ஆங்கில, தமிழ் தினசரிகளை வாசித்தபடியே வீட்டுக்குள் ஒருமணிநேரம் நடந்தான். பிரட் ஆம்லேட் தின்றபடி, 'டிவி'யை உயிர்ப்பித்தான். தமிழ், ஆங்கில சேனல்களில் செய்தி கேட்டான்.

குறிப்பு புத்தகம் எடுத்து, மீம்ஸ்களுக்கான ஐடியாக்களை குறித்தவன், காபி குடித்து, கணினியை திறந்தான்.
தமிழக அரசியலையும், மேற்கு வங்க அரசியலையும் இணைத்து, செயலிகள் மற்றும் 'போட்டோ ஷாப்' உதவியுடன், மூன்று மீம்ஸ்கள் தயாரித்தான்.
தமிழகத்தில் மூன்று மாநிலக் கட்சிகளும், ஒரு தேசிய கட்சியும் தகவல் தொழில்நுட்ப பிரிவு வைத்திருக்கின்றன. அவை, தங்கள் கட்சிக்கு ஆதரவாகவும், எதிரி கட்சிகளுக்கு எதிரான கருத்துகளையும், முகநுால், டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில், 24 மணி நேரமும் பதிவிட்டு கொண்டே இருக்கின்றன. தனக்கு தேவையான பதிவுகளை தயாரித்து தரும் பதிவர்களுக்கு, 200 முதல் 5,000 ரூபாய் வரை கூலி தருகின்றன. சில தகவல் தொழில்நுட்ப பிரிவுகள் மாத சம்பளத்துக்கு, மீம் கிரியேட்டர்களை வேலைக்கு வைத்திருக்கின்றன.
நா.தி.க., கட்சிக்கு, மீம்ஸ் தயாரித்து கொடுப்பவன், வைதிக். மாத சம்பளம், 40 ஆயிரம் ரூபாய். தினம், ஐந்து மீம்ஸ்களும், இரண்டு முகநுால் பதிவுகளும் அவன் தயாரித்துக் கொடுக்க வேண்டும்.
தயாரித்த மீமை, நா.தி.க.,வின் தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கு அனுப்பினான், வைதிக்.
அடுத்த அரைமணி நேரத்தில் மொபைலில் அழைப்பு வந்தது; எடுத்தான்.
தகவல் தொழில்நுட்ப பிரிவின் பொறுப்பாளர் கட்டபொம்மன், ''துாள் கிளப்பிட்ட வைதிக். மீம்ஸை பார்த்துட்டு, உனக்கு போன் பண்ற வரைக்கும் சிரிச்சுக்கிட்டே தான் இருந்தேன்... பேக் ஐடில உன் மீம்ஸை போஸ்ட் பண்ணியாச்சு,'' என்றார்.
''பாராட்டுக்கு நன்றி!''
''நீ போடுற மீம்ஸ்களை ஒண்ணு விடாம தலைவர் பார்த்துக்கிட்டு தான் இருக்கார். உன்னை ஒரு தடவை கட்சிக்காரங்ககிட்ட மனம் விட்டு பாராட்டினார்!''
''தலைவரின் பாராட்டு, எனக்கு ஒரு பிட்சா கூட வாங்கித் தராதுண்ணே.''
''என்னப்பா இப்படி பேசுற?''
''பின்ன என்னண்ணே... நான் உங்ககிட்ட வேலைக்கு வந்து எத்தினி வருஷமாகுது?''
''நாலு வருஷமாகுது. அதுக்கென்ன இப்ப?''
''வந்தப்ப பிசாத்து, 10 ஆயிரம் ரூபா சம்பளம் குடுத்தீங்க. படிப்படியாக கூடி இப்ப, 40 ஆயிரம் ஆகிருக்கு.''
''அப்படித்தானப்பா தர முடியும்!''
''மத்த ஐடி லிங்குகளுக்கு வேலை பார்க்கிற மீம்ஸ் கிரியேட்டர்ஸ் எல்லாம், பண மழைல குளிக்குறான்க. தேசிய கட்சி, ஒரு மீம்முக்கு, 5,000 ரூபா தருது!''
''அதே தேசிய கட்சி, ஒரு முகநுால் பதிவுக்கு இரண்டு ரூபா தர்றதா, மீடியால கேலி பேச்சு இருக்குது. ஒரு மீம்முக்கு யானையை தரான், பூனையை தரான்னு உன்னை உசுப்பேத்தி விடுவான்க, நம்பாதே. இன்னும் ஆறு மாசம் பொறு. உன் சம்பளத்தை, 50 ஆயிரமா உயர்த்த சொல்றேன்!''
''கூலி கட்டாதுண்ணே... விடுங்கண்ணே வேற எங்காவது போய் பிழைச்சிக்கிறேன்.''
''மத்த மீம் கிரியேட்டர்கள், அவன்க சார்ந்திருக்கிற கட்சிக்கு ஆசை நாயகின்னா, நீ, நம்ம கட்சிக்கு தாலி கட்டின பொண்டாட்டி மாதிரி. நினைச்சப்ப அத்துக்கிட்டு ஓட முடியுமா?''
''முறைப்படி விவாகரத்து வாங்கிட வேண்டியது தான்.''
''இப்ப உனக்கு என்ன வேணும்ன்ற?''
''எனக்கு சம்பளத்தை ஒரு லட்சமா உயர்த்திக் கொடுங்கள். அதுவும் வர்ற மாசத்துலயிருந்து இந்த சம்பள உயர்வை அமல்படுத்தணும்.''
''என்னப்பா, இப்படி பேஜார் பண்ற... 5,000 - 10 ஆயிரம் உயர்த்துறதுன்னா நானே பண்ணிடலாம். உன் கோரிக்கையை தலைவர்தான்பா நிறைவேத்தணும்.''
''எனக்கு ஒரு வாரத்துல சாதகமான பதில் தேவை.''
''அவசரப்படாதப்பா, நான் தலைவர்கிட்ட பேசுறேன். அவரை, நீ சந்திக்க ஏற்பாடு பண்றேன். அவர்கிட்ட நேரடியா பேசி, உன் ஆவலாதியை நேர் பண்ணிக்க.''
''சம்பள உயர்வாடா கேட்ட படுவான்னு சொல்லி, தலைவர் என்னை நாலு உதை உதைக்க ஏற்பாடு பண்றீங்களாண்ணே.''
''சேச்சே... அப்படி எத்தினி பேரை அடிச்சார் சொல்லு.... கோபம் வந்தா, கெட்ட வார்த்தைகள் பேசுவார்; அவ்வளவு தான். தலைவர்கிட்ட கேட்டு நேரம் வாங்கித் தரேன். போய் சாமர்த்தியமா பேசி, சம்பள உயர்வை வாங்கிக்க. நான் குறுக்கே நிக்க மாட்டேன்,'' என்றார், கட்டபொம்மன்.
''நன்றிண்ணே.''
''தலைவர் சம்பள உயர்வுக்கு ஒத்துக்கிட்டா, எனக்கு ஒரு புல்லு மேன்ஷன் ஹவுஸ் வாங்கித் தந்திடணும்.''
''சரி!''
''பைப்பா... மீண்டும் சந்திப்போம்,'' தொடர்பு அறுந்தது.
குளிர்பதன அறைக்குள் பிரவேசித்தான், வைதிக்.
சரிந்து அமர்ந்து, குண்டானில் இருந்த வறுத்த முந்திரி பருப்புகளை தின்று கொண்டிருந்தார், தலைவர், அதியமான்.
''வணக்கம் சார்!''
''என்னை தலைவர்ன்னு கூப்பிடாம, சார்னு கூப்பிடுற ஒரே ஆளு நீதான், வைதிக்.  நல்லாருக்கியாப்பா?''
''இருக்கேன் சார்!''
''முந்திரி தின்றியாப்பா?''
''வேணாம் சார்!''
''என்ன விஷயமா என்னை பார்க்க வந்த?''
''ஐ.டி., லிங் இன்சார்ஜ் எதுவும் சொல்லலையா?''
''அவன் சொல்றது இருக்கட்டும், உன் வாயால சொல்லு. உனக்கென்ன வேணும்?''
''என் சம்பளத்தை ஒரு லட்சமா உயர்த்தி தரணும்!''
''போதுமா? ரெண்டு லட்சமா கேளேன்.''
''கொடுத்தா சந்தோஷம் தான்.''
''நீ துணிச்சல்காரன்; என்கிட்டயே வாதாடுறியே!''
''என் வேலைக்கு போதுமான கூலியை கேட்கறதுக்கு துணிச்சல் தேவையில்லை; வெறும் வாய் போதும்!''
வைதிக்கின் சட்டைக்காலரை கொத்தாய் பற்றி தன்னருகே இழுத்தார்,
அதியமான். அவரருகே போய் விழுந்து, அமர்ந்தான்.
வைதிக்கின் முகத்தை, 'டைட் குளோஸ் - அப்'பில் பார்த்தார், அதியமான். அவரிடமிருந்து விஸ்கி வாசனை எழுந்தது.
''உன்னை கொன்று, என் தோட்டத்துல புதைச்சுடவா?''
''நான் போடுற, மீம்ஸ்கள்தான் உங்க கட்சியை உயிரோட வச்சிருக்கு. என்னை புதைக்கிறப்ப, உங்க கட்சியையும் சேர்த்து புதைச்சுடுங்க சார்!''
''உனக்கு செம தில்லுடா.''
''நான் நாகர்கோயில்காரன்; அப்படித்தான் இருப்பேன்.''
''வைதிக், நம் கட்சிக்கு எவ்வளவு உறுப்பினர்கள் இருப்பாங்கன்னு நினைக்கிற?''
''ஒரு கோடி!''
''ம்ஹும், ஒண்ணே கால் கோடி. மயிரிழைல ஆட்சியை பிடிக்கிற வாய்ப்பை தவற விட்டுட்டோம். தொடர்ந்து வேலை செஞ்சா, அடுத்த சட்டசபை தேர்தல்ல ஜெயிச்சிடலாம். சம்பளம் ஒரு லட்சம், நான் கொடுத்து, உனக்கு திருப்தி வரப்போகுதா? கட்சி பொறுப்பு எதாவது ஒண்ணை கைப்பற்றி கோடீஸ்வரனாக பாரு. பால் தாக்கரே கூட கார்ட்டூனிஸ்ட் தான்... மீம் கிரியேட்டர், பக்கா அரசியல்வாதி ஆகலாம்.''
முழித்தான், வைதிக்.
''நான் கட்சிக்கு நிரந்தர பொது செயலர். தலைவர் பதவி காலியா இருக்கு. அந்த பதவிக்கு ஆறு காலாவதியான பசங்க போட்டி போடுறான்க. அவன்களை விட நீ, தமிழக அரசியலையும், இந்திய அரசியலையும் கரைச்சு குடிச்சுருக்க. பேசாம நீ, என் கட்சியோட தலைவர் ஆயிடுறியா? போட்டி இல்லாம உன்னை நியமனம் பண்ணிடுறேன்.''
''கூலி உயர்வு கேட்டா, தலைவர் பதவியா?''
''நான், மத்திய ஆட்சில இருந்தா,
உன்னை எதாவது வடகிழக்கு மாநிலத்துக்கு கவர்னரா போட்ருவேன்; இருக்கறததானே கொடுக்க முடியும்.''
கண்களை மூடித் திறந்தான், வைதிக்.
''சார், நீங்க விளையாட்டா பேசுறீங்களோ, சீரியஸா பேசுறீங்களோ எனக்கு தெரியாது. மீம்ஸ் கிரியேட்டர்ஸ் எல்லாம் பப்ளிக்குக்கு மூஞ்சியை காட்ட மாட்டோம். இன்னைக்கு உங்க கட்சிக்கு வேலை பார்ப்போம், நாளைக்கு இன்னொரு கட்சிக்கு வேலை பார்ப்போம்.
''குறும்பு, கேலி, எங்க பிறவிக்குணம். ரோட்ல படம் வரையுற மாதிரி யார்கிட்டயும் பத்து பைசா வாங்காம, மீம்ஸ் போடுற சந்தோஷத்துக்காக, மீம்ஸ் ரெடி பண்ணி போஸ்ட் பண்ணிட்டு போயிட்டே இருப்போம்.
''ஸ்கூல் சுவத்துல கிறுக்கற பயலை பிடிச்சு, ஹெட்மாஸ்டரா போட முடியுமா? பிச்சைக்காரியை மகாராணியாக்கினா, மாடக்குழிக்கு மாடக்குழி பிச்சை கேட்பா... விடுங்க சார், நான் சம்பள உயர்வு கேக்கல... அலைவரிசை ஒத்துபோற வரைக்கும் உங்களுக்கு, மீம்ஸ் போட்டு தந்திட்டுருப்பேன். வரேன் சாரே!''
''நில்லுப்பா நில்லு,'' என, அதியமான் கூவ கூவ, வெளியேறினான், வைதிக்.

அடுத்த ஐந்தாவது நிமிடம், ஒளிந்திருந்த தகவல் தொழில்நுட்ப பொறுப்பாளர் கட்டபொம்மன் வெளியே வந்தார்.
''தலைவரே, நீங்க சொன்னப்ப நான் நம்பல. கட்சி தலைவர் பதவியை வேணாம்ன்னு தலைதெறிக்க ஓடுறான், அந்த பய.''
''பொம்மை கேட்குற குழந்தைக்கு, தேரை கொண்டு வந்து நிறுத்துனா குழந்தை தாங்குமா, மீம்ஸ் கிரியேட்டர்ஸ் சைக்காலஜி தெரிஞ்சு தாக்கினேன். பய புள்ள பஞ்சா பறந்து ஓடிருச்சு.''
இருவரும் புகைய புகைய சிரித்தனர்.
'அரசியல் சூதுகள் தெரியாத அப்பாவிகள், தான் மீம்ஸ் கிரியேட்டர்ஸ்... அவர்கள் அப்படி இருப்பது மீம்ஸ் கலைக்கு நல்லது...' என முணுமுணுத்தான், அரசியல் சாத்தான்.

ஆர்னிகா நாசர்வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement