Load Image
dinamalar telegram
Advertisement

அன்புடன் அந்தரங்கம்!

அன்புள்ள மகளுக்கு —
நான், 88 வயது ஆண். மத்திய அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்று, 28 ஆண்டுகள் ஆகின்றன.
என் மனைவி ஒன்பது ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டாள். எங்களுக்கு நான்கு மகன்கள். நால்வரில் இருவர் வசதியாகவும், இருவர் ஏழ்மையாகவும் வாழ்கின்றனர்.
இளம் வயதில் செய்த உடற்பயிற்சிகள் காரணமாகவும், என் பெற்றோரின் ஆரோக்கியமான மரபணு காரணமாகவும், நான் எந்த நோய்நொடியும் இன்றி, 30 வயது இளைஞன் போல் வாழ்கிறேன்.

சொந்தமாக நான்கு வீடுகள் கட்டி, மூன்று வீடுகளை வாடகைக்கு விட்டு, ஒரு வீட்டில் தனியாக வசிக்கிறேன். எனக்கு நளபாகம் தெரியும். ஆனால், என் ஒருவனுக்காக சமைக்க வேண்டாம் என கருதி, ஹோட்டலில் வாங்கி சாப்பிடுகிறேன்.
முகநுாலில், 10 ஆண்டுகளாக இருக்கிறேன். முகநுால் மூலம் நுாற்றுக்கணக்கான அன்பு உள்ளங்கள் எனக்கு கிடைத்திருக்கின்றன. முகநுால் நண்பர்கள், என் வீட்டுக்கு வருவர். நான் அவர்கள் வீட்டிற்கு போவேன். தினம் அவர்களுடன் போனில் அளவளாவுவேன்.
நான் ஒரு சுற்றுலா காதலன். இந்தியாவுக்கு உள்ளேயும், வெளியேயும் நான் போகாத இடமில்லை. வேன், பஸ், ரயில் மற்றும் விமானத்திலும் பயணங்கள் மேற்கொள்வேன்.
என் நான்கு மகன்களுக்கும் உயர் ரத்த அழுத்தமும், நீரழிவு நோயும் உண்டு. அவர்கள் வேலை பார்க்கும் இடத்தை தாண்டி எங்கும் சென்றதில்லை.
மகன்களுக்கு என் உடல் ஆரோக்கியம் பார்த்து பொறாமை. 'வயதானவர் எதுக்கு தனியா, 'டூர்' சுத்தறார்; போகும் இடத்தில் எதாவது ஆயிட்டா என்ன பண்றது; வாலை சுருட்டிக்கிட்டு ஒரே இடத்தில் இருக்க வேண்டியது தானே?' என்பர்.
மகன்கள் வீட்டிற்கு போனால், ஒரு நாளைக்கு மேல் தங்க மாட்டேன்.
ஏழ்மையில் வாழும் இரு மகன்கள், என் ஓய்வூதியத்தில் மாதம் தலா, 10 ஆயிரம் ரூபாயை வலுக்கட்டாயமாக பறித்துக் கொள்வர்.
எனக்கு தச்சு வேலைகள் தெரியும். நான் செய்யும் மர சாமான்களுக்கு மார்க்கெட்டில் செம கிராக்கி. நான் செய்யும் மர சாமான்களை நல்ல விலைக்கு விற்று, கிடைத்த பணத்தில், 'டூர்' போவேன்.
போன மாதம், வீட்டிற்கு வந்த மூத்த மகன், 'விட்டா நீ, 100 - 120 வயசு வரைக்கும் வாழ்வ. அவங்கவங்க, 50 வயசிலயே பிள்ளைகளுக்கு சொத்தை பிரிச்சு கொடுத்துடுறாங்க. நீ என்னடான்னா தாய்லாந்துக்கும், ஹாங்காக்கும் போய் ஆட்டம் போட்டுக்கிட்டிருக்க.
'பேசாம சொத்தை பிரிச்சுக் குடுத்திரு. 'டூர்' போறதை நிறுத்திட்டு, ஒற்றை அறையில் குடியிருந்து, நாங்க தர்ற சோத்தை தின்னுக்கிட்டு தேமேன்னு இருக்கணும்...' என்றான்.
'இன்றைய மார்க்கெட் மதிப்பின் படி, 1.20 கோடி ரூபாய் பெறும் நாலு வீட்டையும், நாலு பேருக்கும் பிரிச்சு தரேன். ஆனா, ஏழையாக இருக்கும் இரண்டு மகன்கள் ஒண்ணும் தரவேண்டாம். மீதி இரண்டு மகன்கள், தலா ஆறு லட்சத்தை, 'பிக்சட் டெபாசிட்'டா என் பெயர்ல போட்ருங்க. வீட்டை பிரிச்சு கொடுத்துடுறேன்...' என்றேன்.
'முன் பணம் ஒரு லட்சம் தர்றோம்; மீதிய பத்திரம் பதிஞ்ச பிறகு தர்றோம்...' என்றான், மூத்த மகன்.
அப்பணத்தை பெற்று, வீடுகளை நால்வருக்கும் எழுதி வைத்து விட்டேன்.
மீதி ஐந்து லட்சத்தை இருவரிடம் கேட்டால், தர மாட்டேன் என்று, வீட்டை காலி பண்ண சொல்லி விட்டனர். வாடகை வீட்டில் குடியிருக்கிறேன். தொடர்ந்து, இரு மகன்கள், ஓய்வூதியத்தில் பங்கு போடுகின்றனர்.
மீதி பணத்தை கேட்டால், 'உனக்கெதுக்குய்யா அஞ்சு லட்சம் பணம்? உனக்கு செய்வினை வச்சிட்டோம். இன்னும் இரண்டொரு மாதத்துல மண்டையப் போட்ருவ... 'டூர்' போற உன் காலை உடைச்சு, கண்களை நோண்டி மூலைல போட்டாதான் அடங்குவ...' என்கிறான், மூத்த மகன்.
மேற்கொண்டு நான் என்ன செய்ய வேண்டும் என, ஆலோசனை கூறு மகளே.
— இப்படிக்கு,
அன்பு தந்தை.

அன்பு தந்தைக்கு —
கடும் முதுமையில் ஆரோக்கியம், இறைவன் கொடுத்த வரம். இறைவனால் ஆசிர்வதிக்கபட்ட உங்களை வணங்கி, மகிழ்கிறேன்.
இனி, நீங்கள் என்னென்ன செய்ய வேண்டும் தெரியுமா?
* நீங்கள் உயிருடன் இருக்கும்போது, மகன்கள், சொத்துகளை அனுபவிக்க எழுதி கொடுத்திருக்கக் கூடாது. 'என் காலத்துக்கு பின் அவர்கள் சொத்துகளை அனுபவிக்கலாம். அதுவரை சொத்துகள் என்னிடமே இருக்கும்...' என, நீங்கள் பத்திரம் எழுதியிருத்தல் நலம்.
இப்போதும் ஒன்றும் கெட்டு போய் விடவில்லை. நீங்கள் எழுதிய பத்திரத்தை ரத்து செய்யுங்கள். எல்லாம் பழைய நிலைக்கு திரும்பி விடும். மீண்டும் நீங்கள் சொந்த வீட்டுக்கே குடி போகலாம். மீதி மூன்று வீட்டு வாடகைகளை நான்காய் பிரித்து, மகன்களுக்கு கொடுங்கள்.
ஏழ்மையில் இருக்கும் மகன்கள், உங்கள் ஓய்வூதியத்தை பங்கு பிரிக்க அனுமதிக்காதீர்கள். ஏழ்மையில் வாடும் மகன் வழி பேரன் - பேத்திகளின் கல்வி செலவுகளை ஏற்றுக் கொள்ளுங்கள். மகன்கள் கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுத்து விடுங்கள்
* முகநுால் நண்பர்கள் எதாவது பண உதவி கேட்டால், கண்களை மூடிக்கொண்டு உதவி செய்யாதீர்கள்.
* சுற்றுலாக்களுக்கு தனியாக செல்லாதீர்கள்; சுற்றுலா செல்லும் குழுவுடன் சேர்ந்து செல்லுங்கள்.
* முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். அடுத்த, 20 ஆண்டுகளை, இதே சுறுசுறுப்புடன் கடந்து செல்ல உடலையும், மனதையும் ஆயத்தப்படுத்துங்கள். 100 வயதில், 100 சதவீத அடிப்படை ஓய்வூதியம் பெறும் சாதனையாளராக மாறுங்கள்.
* பேரன் - பேத்திகளுடன் நல்லுறவை பேணுங்கள். அவர்கள் விரும்பும் பரிசுகளை வாங்கித் தாருங்கள். நீங்கள் செல்லும் சுற்றுலாக்களில் முடிந்தால், பேரன்களை இணைத்துக் கொள்ளுங்கள்.
உங்களுக்கு நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும் இறைவன் அருளட்டும்.
— என்றென்றும் பாசத்துடன்,
சகுந்தலா கோபிநாத்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement