தன் மனைவியுடன், திருத்தல யாத்திரை செய்தபடி வந்து கொண்டிருந்தார், கவுதம முனிவர். மதுரையில், சொக்கநாதரையும், அன்னை மீனாட்சியையும் தரிசித்த பின், திருவாதவூர் நோக்கி நடந்தார். திருவாதவூரை நெருங்கும் நேரத்தில், எதிரே ஓடி வந்தது, ஒரு புலி.
அதன் முன்னங்கால் ஒன்றில், முள் தைத்து, ரத்தம் ஒழுகியும், வலி தாங்காமல் துடித்தபடியும் வந்து கொண்டிருந்தது. புலியின் நிலை கண்டு கலங்கினார், முனிவர்.
'இந்த ஜீவன், இந்தப்பாடு படுகிறதே... வாதவூர் இறைவா, என்ன சோதனை இது?' என்று இரங்கி வேண்டினார்.
அதே சமயம், முனிவரின் பார்வை பட்ட புலி, வேதனை நீங்கி, கீழே விழுந்தது. அதன் உடலில் இருந்து ஓர் ஒளி வெளிப்பட்டு, கந்தர்வனாக மாறியது. ஆகாயத்தில் இருந்து அப்போது ஒரு விமானம் இறங்க, அதில் ஏறிய கந்தர்வன், முனிவரை நோக்கிக் கும்பிட்டான்.
முனிவர் வியந்து, 'யாரப்பா நீ?' எனக் கேட்டார்.
கந்தர்வன் தன் வரலாற்றைச் சொன்னான்:
இந்திர சபையில், சித்திரசேனன் என்பவன் இருந்தான். அனைவரையும் மயக்கும் இசைக்கலையில் தேர்ச்சி பெற்றிருந்தான். அதனால், இறுமாப்பு கொண்டிருந்தான்.
ஒருநாள்... இந்திர சபையில், சித்திரசேனன் பெருமிதத்தோடு இருந்தபோது, அங்கு வந்தார், நாரதர்.
நாரதரின் பெருமையும், மகிமையும் அறியாத சித்திரசேனன், தாடி, மீசை, புலித்தோல், மரவுரி, கையில் வீணை ஆகியவற்றுடன் வந்த அவரைப் பார்த்ததும், 'புலி வருது... புலி வருது...' என்று கூவி, பரிகாசம் செய்தான்.
நாரதருக்குக் கோபம் வந்து, சித்திரசேனனை உற்றுப் பார்த்தவர், 'கவுரவமான இந்தச் சபையில் இருக்கத் தகுதியற்றவன், நீ. என்னைப் பார்த்து, புலி புலி என்று கூவி, அவமானப்படுத்திய நீ, புலியாகி பூவுலகில் இரு...' என்று, கடும் சாபம் கொடுத்தார்.
சாபம் பெற்ற சித்திரசேனன், அதன்பின் தன் பிழையை உணர்ந்து, நாரதரின் திருவடிகளில் விழுந்து, சாப விமோசனம் வேண்டினான்.
'திருவாதவூர் அடுத்துள்ள காட்டில், நீ, புலியாக இரு. திருவாதவூருக்கு சிவ தரிசனத்திற்காக வருவார், கவுதம முனிவர். அவர் பார்வை பட்டு, உனக்கு சாப விமோசனம் உண்டாகும்...' என்றார், நாரதர்.
அதன்படியே, நாரதரிடம் சாபம் பெற்ற சித்திரசேனன், புலியாக மாறினான்; கவுதம முனிவரின் பார்வையால், சாப விமோசனமும் பெற்றான். கவுதமரிடம் இந்த வரலாற்றைச் சொல்லி முடித்த சித்திரசேனன், அவரை வணங்கி, விடை பெற்றான். படிப்பு, பணம், பதவி, திறமை என, அனைத்தும் இருந்தாலும், அடுத்தவரைக் கேலி செய்யக் கூடாது எனும் படிப்பினையைச் சொல்லும் வரலாறு இது.
பி. என். பரசுராமன்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!