Load Image
dinamalar telegram
Advertisement

ஒரு ஊர்ல ஒரு பாட்டி!

'என்ன ஐஸ்வர்யா... ஒரு ஆட்டம் போடுவோமா?'
'ஆங்... என்னால முடியாதுன்னு நினைக்கிறியா; இரு வர்றேன்!'
'அய்யோ... நான் சும்மா கேட்டேன்; சரி... இதை விடு... உன் 'லவ் ஸ்டோரி' சொல்லு... கேட்போம்!'
இது... பாட்டிக்கும் பேரனுக்குமான உரையாடல் என்றால் நம்ப முடிகிறதா?

ஐஸ்வர்யாவா... சரோஜாவா; உங்க பேர் என்ன பாட்டி?
சரோஜாதான்; நான் ரொம்ப அழகா இருக்குறதால பேர புள்ளைங்க 'ஐஸ்வர்யா ராய்'னு கூப்பிடுதுக!

தான் அழுத்தமாய் நம்புவதை சிரிக்காமல் சொல்லும் சரோஜா பாட்டிக்கு வயது 82; சேலம் மேம்பால நகர் வசிப்பிடம்!

அந்த 'லவ் ஸ்டோரி'யை எங்களுக்கும் சொல்லுங்களேன்...
அவருக்கு ரயில்வேயில் வேலை. ஒவ்வொரு தடவை என்னை கடற்கரைக்கு கூட்டிட்டு போற போதும், கரையில இருந்து துாரமா என்னை நிப்பாட்டி, 'இதுதான் கடல்'னு காட்டிட்டு 'போவோமா'ன்னு கிளம்புவார். 'ஏங்க இப்படி பண்றீங்க'ன்னு ஒருநாள் கேட்டேன்; 'கடல் மண் கால் இழுக்கும்; உனக்கு ஏதாவது ஆயிடுச்சுன்னா என்னால தாங்க முடியாது'ன்னார்; நான்னா அவருக்கு உசுரு!

ஒருநாள் கூட தாத்தா கோபப்பட்டது இல்லையா?
அய்யோ... 'பளார்'னு அறை வாங்கியிருக்கேன்! அவர் பேரை நான் சொன்னா அவருக்குப் பிடிக்காது! 'புருஷன் பேர் சொன்னா புருஷனோட ஆயுள் குறைஞ்சிடும்; நான் உன்கூட ரொம்ப நாள் வாழணும்'னு பேர் சொல்ல விட மாட்டாரு!
1997ம் ஆண்டு அங்கமுத்து தாத்தா மறைந்துவிட்ட நிலையில், மகன்களும் மகள்களும் அருகிலிருக்க தனியாக வசித்து வரும் பாட்டி, தீவிர எம்.ஜி.ஆர்., ரசிகை!

ஆரோக்கிய உணவு
'எங்க காலத்துல மாசத்துக்கு ஒருநாள் தான் அரிசி சோறு; மத்த நாள் எல்லாம் களி, கம்பஞ்சோறு, சோளச்சோறுதான்! அப்பவும் சரி... இப்பவும் சரி... பசின்னா மட்டும்தான் சாப்பிடுவேன்; சாப்பிடுறதுக்கு தகுந்த மாதிரி வேலை பார்த்திருவேன்; சும்மா உட்கார்ந்திருக்க எனக்குப் பிடிக்காது!
வயதானாலும் உழைக்கத் தயங்காதவர் சரோஜா பாட்டி என்பதற்கு சாட்சிகள்... 'கொரோனா' உச்ச காலத்தில் இலவசமாக இவர் தைத்துக் கொடுத்த 5,000ற்கும் அதிகமான முக கவசங்கள்!

ரொம்ப பெரிய உதவி இது!
அதெல்லாம் ஒண்ணுமில்லை; சில நல்ல மனசுக்காரங்க துணி வாங்கிக் கொடுத்தாங்க... நான் முக கவசம் தைச்சுக் கொடுத்தேன்; அவ்வளவுதான்!

சந்தோஷமா வாழ என்ன வழி பாட்டி?
எந்த ஒரு விஷயத்துலேயும் பிடிவாதமா இருக்காதீங்க; 'இன்னைக்கு வாழ்க்கை நாளைக்கு இல்லை'ன்னு நம்புங்க; சந்தோஷத்தை வெளியில தேடாதீங்க; அவ்வளவுதான்.

பாட்டி சொல்லை தட்டாதே!
இந்த உலகத்துல 'பெண்' இருக்குற வரைக்கும் 'சாமி இல்லை'ன்னு சொல்லாதீங்கய்யா!

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement