Load Image
dinamalar telegram
Advertisement

இடியாப்ப சிக்கலா?

மீள முடியாத கஷ்டத்தை இடியாப்ப சிக்கல் என்பர். இவ்வாறு சிக்கித் தவிப்பவர்கள், வணங்க வேண்டிய தெய்வம், அனுமனின் தாயான அஞ்சனா தேவி. இக்கட்டான சூழலில் தவித்த மன்னன் ஒருவனை காப்பாற்றினாள். இவளை, தங்கள் குலதெய்வமாக கொண்டுள்ளனர், இமாச்சல பிரதேச மக்கள்.
ஒருமுறை ராமனைத் தரிசிக்க அயோத்தி புறப்பட்டார், காசிராஜன். வழியில் சந்தித்த நாரதர், 'நீ அயோத்தி சென்று, அவையிலுள்ள எல்லாரையும் வணங்கு. விஸ்வாமித்திரரை மட்டும் வணங்காதே...' என்றார்.

மன்னன் காரணம் கேட்க, 'சொன்னதை செய், இல்லாவிட்டால், ஞானியான என் சொல்லை மீறிய பாவத்துக்கு ஆளாவாய்...' என, எச்சரித்தார்.
காசிராஜனும் அவ்வாறே செய்ய, ராமனிடம் புகார் செய்தார், விஸ்வாமித்திரர். கோபமடைந்த ராமன், 'இன்று மாலை மூன்று அம்புகளை எய்வேன். அதில் ஒன்று, காசிராஜனைக் கொன்று விடும்...' என, வாக்களித்தார்.
நாரதரிடம் ஓடிய மன்னன், 'உங்களால் சிக்கலில் மாட்டிக் கொண்டேனே...' என, கதறினான்.
'கவலைப்படாதே... நீ அனுமனின் தாய் அஞ்சனா தேவியிடம் செல். அவள் காலைப் பிடித்து, 'ஒரு சிக்கலில் இருக்கிறேன், காப்பாற்றுங்கள்...' என்று மட்டும், மூன்று முறை சொல். அவளும், மூன்று முறை, 'காப்பாற்றுகிறேன்...' என சொல்லும் வரை காலை விடாதே...' என்றார். மன்னனும் அவ்வாறே செய்ய, அஞ்சனாவும் காப்பாற்றுவதாக உறுதியளித்தாள்.
பின்பு தான், ராமபாணம் பற்றிய தகவலை மன்னன் சொல்ல, அவள் அதிர்ந்தாள். ராமபாணத்தை தடுக்கும் சக்தி யாருக்கும் கிடையாது. தன் மகன் அனுமனிடம், இந்த விஷயத்தை சொல்ல, அவர், ராமனிடம் சென்றார்.
'ராமா... உன்னிடம் நான் எதையும் கேட்டதில்லை. இன்று கேட்கிறேன், தருவாயா?' என்றவர், 'உன் திருநாமம் சொல்பவரை, எந்த ஆபத்தும் அணுகக் கூடாது. இதுவே நான் கேட்கும் வரம்...' என்றார்; ராமனும் வரம் தந்து விட்டார்.
பின், அம்மாவிடம் சென்ற அனுமன், அங்கிருந்த காசிராஜனிடம், 'கவலைப்படாதே... சரயு நதியில், கழுத்தளவு நீரில் நின்று ராம நாமம் சொல். அவரது பாணம் ஒன்றும் செய்யாது...' என்றார்.
காசிராஜனும் ராம நாமம் ஜெபிக்க, முதல் பாணம் அவனை சுற்றி வந்து ராமனிடமே சரணடைந்தது. ஆச்சரியப்பட்ட ராமன், அடுத்த பாணத்தை எய்ய, 'சீதா ராமா...' என, மந்திரம் சொல்லும்படி சொன்னார், அனுமன்.
இதைக் கேட்ட பாணம், என் அன்னை சீதா, தந்தை ராமனின் பெயர் கேட்டபின், என்னால் எதுவும் செய்ய முடியவில்லை என, திரும்பியது.
கடைசி பாணத்தை ராமன் எய்ததும், அதுவும் ஏதும் செய்யவில்லை.
ராமனும் வேறு வழியின்றி விஸ்வாமித்திரரிடம் சொல்ல, அவர் நிலைமையைப் புரிந்து கொண்டார்.
அப்போது அங்கு வந்த நாரதர், ராமனிடம், 'உன் திருநாம மகிமையை உலகறிய செய்யவும், அஞ்சனை தாயின் புகழை வெளிப்படுத்தவுமே இப்படி செய்தேன்...' என்றார்.
தீராத பிரச்னை உள்ளவர்கள், அஞ்சனையை வணங்கி, சிக்கல் தீரப் பெறலாம். ராஜஸ்தான் மாநிலம், கரவ்ளி என்ற ஊரிலுள்ள கைலாதேவி கோவிலில், குழந்தை அனுமனுக்கு, அஞ்சனை உணவூட்டும் அபூர்வ சிலை உள்ளது. இந்தியாவில் இங்கு மட்டுமே இந்த சிறப்பு.
ஜெய்ப்பூரில் இருந்து, 164 கி.மீ., இவ்வூர் செல்ல ராஜஸ்தான் சுற்றுலாத்துறை, பஸ் ஏற்பாடு செய்துள்ளது. அருகிலுள்ள விமான நிலையம் ஆக்ரா.

தி. செல்லப்பா

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement