அன்புள்ள பிளாரன்ஸ் ஆன்டி...நான், 14 வயது சிறுமி; பள்ளியில், 9ம் வகுப்பு படிக்கிறேன்; மனதில் எப்போதும் ஓர் எண்ணம் ஓடிக்கொண்டே இருக்கிறது. கடவுள் இருக்கிறாரா... இல்லையா... என்பது தான் அது. இது பற்றி பலரிடம் கேட்டேன்; சிலர் குழப்பினர். இப்போது தெரிந்து கொள்ள அவசிமில்லை என்கின்றனர் சிலர். விளக்கம் அறியும் ஆர்வத்தில் தவித்து வருகிறேன். விளக்கி தெளிவுபடுத்துங்கள் ஆன்டி.என் வாலிப வயதில், கடவுள் தொடர்பான விஷயத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும். தகுந்த ஆலோசனை வழங்குவீர்கள் என நம்புகிறேன்.
அன்பு மகளே...உலகம் முழுதும் கோடிக்கணக்கானோர் நாத்திக கொள்கையை கடைப் பிடிப்பதாக, ஒரு சர்வே கூறுகிறது; நாத்திகர்கள் என்றால் கடவுளை மறுப்பவர்கள். சீனாவில் மட்டும், 20 கோடி பேர் நாத்திகர்களாக இருக்கின்றனர்; உலகம் முழுக்க நாத்திக கொள்கையை கடைபிடிப்பவர்கள் ஏராளம்.உலகம் தோன்றியது பற்றி, பல கோட்பாடுகள் முன் வைக்கப்பட்டுள்ளன. அறிவியலில், 'பெருவெடிப்பு கோட்பாடு' என்ன சொல்கிறது என முதலில் பார்ப்போம்...அண்டம், 12 முதல், 14 பில்லியன் ஆண்டுகளுக்கு முன், அதிக அடர்த்தியுள்ள தீப்பிழம்பாக இருந்தது; காலப்போக்கில் விரிவடைந்து இந்த நிலையை அடைந்துள்ளது. 1 பில்லியன் என்பது, 100 கோடிக்கு சமம்.ஒற்றை செல் உயிரினத்திலிருந்து வளர்ந்து, தற்செயலாக, 10 லட்சம் ஆண்டுகளுக்கு முன், தோன்றினான் மனிதன். இங்கு எல்லாமே தற்செயல் தான்; திட்டமிடல் எதும் இல்லை என்கிறது விஞ்ஞானம். குரங்கிலிருந்து மனித பரிணாமம் வளர்ச்சி பெற்றது என்ற தத்துவத்தை முன் வைத்தார் டார்வின்.மண்ணிலிருந்து ஆதாமையும், அவன் விலா எலும்பிலிருந்து, பெண் ஏவாளையும் இறைவன் உருவாக்கியதாக சொல்கிறது கிறிஸ்துவம். ஆத்திகத்தின் உச்சகட்டம் விஞ்ஞானம்; விஞ்ஞானத்தின் உச்சகட்டம் ஆத்திகம்.மனித உடலை எடுத்துக்கொள்... ஒரு உடலுக்குள் கோடிக்கணக்கான நுட்பங்களும், திட்டமிடல்களும் உள்ளன. உலகில், பல கோடி வகை ஜீவராசிகள் இருக்கின்றன; அவற்றின் தோற்றம், வளர்ச்சி, இனப்பெருக்கம், குணாதிசயம் பொதிந்த உயிரியல் கடிகாரம் தனித்தனியே உள்ளது.உயிரினங்களுக்கு நீர், நிலம் மற்றும் காற்றில் வாழும் முறைகள் உள்ளன. உயிரற்ற ஜடப்பொருட்களான பூமி, சூரியன், நிலா எல்லாமே, ஒரு அட்டவணைப்படி நடந்து கொள்கின்றன. மாறாத வேகத்தில் சுற்றுகின்றன.பூமி தன்னைத் தானே சுற்றி, சூரியனையும் சுற்றி வருகிறது; அப்படி சுற்றுவதில் ஒரு மைக்ரோ நொடி தவறு நடந்தாலும், ஒட்டு மொத்தமும் வெடித்து சிதறி விடும்; அப்படி நடக்காமல் காப்பது எது...பிரபஞ்சம் என்பது ஒரு யானை; ஒவ்வொருவரும் அதை தடவி பார்த்து, ஆச்சர்யத்தால் யூகங்களை கூறுகின்றனர். கற்பனையை பொழிகின்றனர். ஆத்திகத்தில் ஒரு கால், நாத்திகத்தில் ஒரு கால் வைத்து, இரண்டும் கெட்டானாக வாழ்கிறான் மனிதன்.வாழ்வில் மிகச்சிறந்த வழிகாட்டி மனசாட்சி தான்; அது சொன்னபடி நடந்தால், முழுபலனையும் அடையலாம்!
இறைவனை உனக்குள் தேடு... சக மனிதர் மீது செலுத்தும் அன்பால், கடமையை சரி வர செய்வதால், பெற்றோரை மதிப்பதால், நேர்மையுடன் நடப்பதால், கூடியவரை உண்மையை பேசுவதால், தீய பழக்கவழக்கங்களை கடைபிடிக்காமல் இருப்பதால், தீமை செய்தோரை பழிவாங்காமல் மன்னிக்கும் பண்பால், கற்று கொடுத்த ஆசிரியரை மதிப்பதால், ஏழைகளுக்கு இயன்ற உதவி செய்வதால் இந்த பிறவி அமைதியாக முழுமையடையும்; நேயமிக்க மனிதன் ஆவோம்!- அன்புடன், பிளாரன்ஸ்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!