Load Image
dinamalar telegram
Advertisement

முன்னால சீறுது மயிலக்காளை பின்னால பாயுது மச்சக்காளை! - ஜில்... ஜில்... ஜல்லிக்கட்டு!

குறுகிய வாடிவாசலில் சீறிக் கொண்டு வரும் காளைகளும் பரந்த தென்னைநார் ஆடுகளத்தில் நின்றும், சிதறி ஓடும் வீரர்களும் பார்வையாளர்களின் பதட்டமான சவுக்கு மேடையும் ஜல்லிகட்டில் பார்க்க பார்க்க திகட்டாதவை.

ஜல்லிக்கட்டிற்கு காளைகளும் வீரர்களும் எப்படி தயாராகிறார்கள்?
ஜல்லிகட்டு காளைகளுக்கும் சில லட்சணங்கள் உள்ளன என்கிறார் மதுரை மேலுாரைச் சேர்ந்த அருணாச்சலம்.
'ரெண்டு மாடு இருக்கு. பெயர் வைக்கலை. அம்மா ராணி பார்த்துக்குறாங்க. தனியாக பயிற்சி கொடுக்கறது இல்லை. ஆறு மாத கன்றாக இருக்கும் போது கால் குளம்பு அகலமாக, வலுவாக இருக்கணும். நேர் கொண்ட பார்வையோடு பக்கவாட்டில் இருந்து யார் வந்தாலும் குத்தி சாய்க்குற மாதிரி 180 டிகிரிக்கு பார்வை தரமாக இருக்கணும்.

கன்றில் இருந்தே நீந்த விட்டால் எத்தனை பேர் பாய்ஞ்சு வந்தாலும் நின்னு தாக்குபிடிக்கும். தரையில் எலுமிச்சை பழங்களை உருட்டி விட்டு நல்லா குனிஞ்சு கொம்பால் குத்தி எடுக்க விட்டால் வீரர்கள் படுத்து பம்மும் போது கொம்புல துாக்கி துார எறியும். கூட்டமான இடத்தில் காளையை வளர்க்கக்கூடாது. பெண்கள் வளர்த்தால் கூட்டத்தில் ஆண்களை பார்த்தவுடனே வெறி பிடிச்சு பாயும். லேசுல சிக்காது.
சொந்தமாக தீவனம் அரைச்சு கொடுக்கிறேன். போட்டிக்கு ஒரு மாசம் இருக்கறப்போ ஒரு கிலோ பச்சை நெல், ஒன்றரை கிலோ பருத்தி கொட்டையை ஒருநாள் ஊறவச்சு மறுநாள் இரவில் தீவனமாக தருவோம். காலை வரை தண்ணீர் கூட கொடுக்கக்கூடாது. பூங்கார் ரகம் எலும்புகளை வலுவாக்கும். மாப்பிள்ளை சம்பா நெல் முறுக்கை ஏற்படுத்தும். காட்டுயானம் கால் பிரச்னைகளை சரிசெய்யும்.
ஆரம்பத்தில் என் மாடு பிடிபட்டுச்சு. இப்போ பிடிபடலை. ஜல்லிகட்டு மாடு வளர்ப்பது கவுரவத்திற்காக தான். மாடு ஜெயித்தால் அண்டா, கட்டில், சைக்கிள், பீரோனு சின்னதா பரிசு கிடைக்கும். ஆனால் நாங்கள் ஆயிரக்கணக்கில் செலவு செய்வோம்,' என்கிறார்.

வாழ்நாளையே அர்ப்பணிக்கிறோம்
அலங்காநல்லுார் லோகநாதன் கூறியது: நாலு காளை மாடுகள் வளர்க்கிறேன். மண்ணு குத்துற பயிற்சியோட திமில் மேல கனமான துணியை ரெண்டு பக்கமும் கட்டி போடுவோம். அந்த துணியை துாக்கி வீசுறதுக்காக முன்னாடியும் பின்னாடியுமா தலையை அசைச்சு கொம்பால துாக்கி எறியும். இந்த பயிற்சிக்கு வாடிவாசல்ல நல்லா பலன் கிடைச்சது. வீரர்கள் நேர்ல, பக்கவாட்டில வந்தா எப்படி அட்டாக் பண்ணணும்னு பொம்மை செஞ்சு பயிற்சி கொடுப்போம். காளைகளுக்கு மட்டுமில்லாமல், வீரர்களுக்கும் பயிற்சி கொடுக்கிறோம். அரசாங்கத்துல பதிவு பண்ணி ஜல்லிகட்டு பயிற்சி மையம் நடத்துறோம். அலங்காநல்லுார்ல மட்டும் இந்த முறை 42 பேர் பயிற்சி எடுத்துக்கிட்டாங்க. குத்தவரும் காளையை தைரியமாக எதிர்கொள்வது பெரிய சவால்.
பல்நடுங்க வைக்கும் குளிரில் காளையுடன் வாடிவாசலில் முதல்நாள் இரவிலிருந்தே வரிசையில் நிற்க வேண்டும். வரிசையை கண்டு மிரளும் காளைகளை ஆசுவாசப்படுத்துவது கஷ்டம். வாடிவாசல்ல காளை அதிகபட்சம் மூணு நிமிஷம் நின்னு விளையாடும். அந்த சந்தோஷத்துக்கு எங்கள் வாழ்நாளையே அர்ப்பணிக்கிறோம் என்றார்.
கிரிக்கெட்டை விட செம கிக்காய் இருக்கும் காளைகளின் கிக் தான் ஜல்லிக்கட்டில் பேசப்படும். வாடிவாசலுக்குள் காளையை அனுப்பிய பின் அவற்றை வீடு சேர்ப்பது தான் உரிமையாளர்களுக்கு சவாலான விஷயம். பயத்தில் ஓடும் சில காளைகள் இடம்பெயர்ந்தே சென்று விடும். மொத்தத்தில் காளையும் உரிமையாளர்களும் வீரர்களும் பார்வையாளர்களும் ஒற்றை நிகழ்வில் சிலிர்த்து போவது ஜல்லிகட்டில் மட்டுமே சாத்தியம்.

காளைகள் கபடி விளையாடும்
பாலமேட்டை சேர்ந்த சேதுராமன் கூறியது: ஐந்து காளைகள் வளர்க்கிறேன். நிலக்கடலை செடி, சோளத்தட்டை, புல்லு கொடுத்து வளர்க்கிறேன். பேரீச்சை, பருத்தி கொட்டை, பச்சரிசி, உளுந்து துாசி கலந்து புட்டு போல இரவு 8 மணிக்கு ஒவ்வொரு மாட்டுக்கும் 2 கிலோ தருவோம். நாங்க பசியோட இருந்தாலும் காளைகளை பட்டினி போட மாட்டோம். இங்க இருந்து சாத்தையாறு அணை 5 கி.மீ. துாரத்திற்கு நடக்கவிட்டு அங்க போய் நீந்த விடுவோம்.
மண்ணை குத்தவிட்டே கொம்புகளை கூர்மையாக்குவோம். கத்தியால் கீற மாட்டோம். பயிற்சியே கொடுக்காமல் என் காளைகள் ஜெயிச்சுருக்கு. காளையின் பேரை சொல்லி வீரர் முன்னும் பின்னும் செல்லும் போது காளையும் சளைக்காமல் தலையை உலுக்கியும் பின்னங்கால்களால் உதைத்தும் தன்னை தொடவிடாமல் ஆட்டம் காட்டும். எல்லா மாவட்டத்துக்கும் ஜல்லிகட்டுக்கு போவோம். அஞ்சு காளைகளை கொண்டு போக வண்டி, பிரெண்ட்ஸ் பட்டாளம்னு பல ஆயிரம் செலவாகும். அவனுங்க ஜெயிச்சு கொடுக்கறது கொஞ்சம் தான். இதெல்லாம் தாண்டி காளைகள் வளர்க்குறது பாரம்பரிய மாடுகள் அழியக்கூடாதுனு தான்.

எம்.எம்.ஜெயலெட்சுமி
ஆர்.அருண்முருகன்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement