dinamalar telegram
Advertisement

பழமையை தேடி நெடும் பயணம் - கரிசல் மண்ணில் ஒரு 'டிஜிட்டல் கிரியேட்டர்'

Share

மலைப்பயணத்தில் துவங்கி தற்போது தமிழர்களின் அரிய, சுவாரசியமான பாரம்பரிய விஷயங்களை உலகுக்கு வெளிக் காட்டி வருகிறார் விருதுநகரை சேர்ந்த ப.கருணாகரன். இவரது யூடியூப் சேனல் மூன்றரை லட்சம் சப்ஸ்கிரைபர்ஸை தாண்டி சாதனை படைத்து வருகிறது. இவர் மனம் திறந்ததாவது...

உங்களை பற்றி
சிறு வயதில் இருந்தே பயணம் என்றால் விருப்பம். நேரடியாக சென்று அங்குள்ள சூழலை அனுபவிப்பது பிடிக்கும். 2017ல் கல்லுாரி முடித்து மெடிக்கல் ரெப் ஆக பணி புரிந்தேன். ஒரு கட்டத்தில் பணி ஒத்து வராததால் அதில் இருந்து விலகி சுற்றுலா தொடர்பான வீடியோக்களை பதிவு செய்ய துவங்கினேன்.
தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் மலைகள் தெரிந்தன. நாம் ஏன் மலைப்பயணம் பற்றி வீடியோ பதிவு செய்ய கூடாது எனத் தோன்ற, ஒவ்வொரு மலைக்கும் ஏறினேன். ஒவ்வொரு மலை உச்சியிலும் கோயில் இருந்தது. அங்கு கல்வெட்டு, வரலாறு இருந்தது. வெள்ளியங்கிரி, பர்வதமலை, சதுரகிரி மலைப்பயணம் குறித்தான வீடியோக்களால் லட்சக்கணக்கான மக்களிடம் சென்றடைந்தேன்.

சித்தர்கள் பற்றி நிறைய வீடியோ வெளியிட்டு இருக்கிறீர்களே
ஈரோடு ஊதியூரில் உள்ள கொங்கண சித்தர் குறித்து முதல் வீடியோ வெளியிட்டேன். அந்த பதிவுக்கு பின் என் வாழ்வில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டது. இதன் பிறகு சித்தர்கள் குறித்து தெரிந்து கொள்ள ஆர்வம் ஏற்பட்டது.

வீடியோ பதிவால் ஏற்பட்ட மாற்றங்கள்
திருநெல்வேலி மலையடிக்குறிச்சியில் 700 ஆண்டுக்கு முன்பு பாண்டியர் கட்டிய கிணறு உள்ளது. அது இன்றும் ஊர் மக்களுக்கு நீராதாரமாக பயன்பட்டு வருகிறது. கரூர், மலைக்கோவிலுார் கோயில் மிகவும் சேதமடைந்து இருந்தது. நாங்கள் வீடியோ செய்தோம்.
அக்கோயில் தொடர்பாக தினமலர் நாளிதழிலும் செய்தி வெளியானது. தற்போது மறு கட்டமைப்பு செய்யப்பட்டு வருவது மகிழ்ச்சியானது.

வரலாற்றை தேட காரணங்கள்
உலகிற்கு புதிதாக ஒன்று சொல்ல வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. நம் ஊரின் அருமையை நாம் உணர வேண்டும். பழமையான விஷயங்களை காக்க, முன்னிலைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பழமையான இடங்களுக்கு சென்றால் கரித்துண்டை வைத்து பெயரை கிறுக்கி வைத்திருப்பர்.
பழமையான விஷயங்கள் மீதான ஆர்வத்தை சிதைப்பதற்கு இது போன்ற சிறு விஷயமே உதாரணம்.

மலை ஏறுபவர்களுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள்
முதலில் வனத்துறையில் அனுமதி பெற வேண்டும். அனுமதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்றாலும் பாதையில் தான் செல்ல வேண்டும். பாதை தவற கூடாது. பாதை தவறி சிரமப்பட்ட அனுபவம் உள்ளது. தேனி, வாசிமலை சென்ற போது வழி தவறிவிட்டோம். திரும்பி வந்து உள்ளூர் மக்களில் ஒருவருடன் பயணத்தை தொடர்ந்தோம். மலைப்பயணங்களில் பாதுகாப்பாக இருப்பது மிக முக்கியம்.
ஒரு அசம்பாவிதம் நடந்தாலும் தகவல் கூறுவதற்கோ, உதவுவதற்கோ யாருமே இருக்க மாட்டார்கள்.

நம் நாட்டின் பழம்பெருமையை உணர மக்கள் செய்ய வேண்டியது
விடுமுறையில் வீட்டில் 'டிவி' பார்ப்பதற்கு பதிலாக உள்ளூரில் உள்ள பழமையான கோயில்களுக்கு சென்று வரலாம். நீங்கள் ஒரு இடத்திற்கு சென்று வந்தால் உங்களுக்கு மட்டும் நன்மை இல்லை. பொருளாதாரமே மாறும். வரலாற்றை குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டும்.
முந்நுாறு ஆண்டுகளாக ஆங்கிலேயர்களால் நம் வரலாறு தடுக்கப்பட்டது. அதனால் நமக்கு நிறைய விஷயங்கள் தெரியவில்லை. ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன் வாள்வீச்சிலும், கல்வியிலும் சிறந்து விளங்கிய நாம் மட்டுப்படுத்தப்பட்டு விட்டோம். முன்னோர்கள் அவர்கள் தலைமுறைக்கு வரலாற்றை சொல்லவில்லை. அதனால் தான் நாம் ஆங்கிலம் பெரிதென்று சொல்லி கொண்டிருக்கிறோம்.

வீரமணிகண்டன்

Share
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement