புதுச்சேரியை சேர்ந்தவர் 90 வயது சித்தர் இலக்கிய ஆய்வாளர் பா.கமலக்கண்ணன். தமிழ் இலக்கியத்தில் சித்தர்கள் குறித்து இவரைப்போல் ஆய்வு செய்தவர் யாரும் இல்லை.
நுாறுக்கும் மேற்பட்ட சித்தர்கள் அருளிய 500 நுால்களை ஆய்வு செய்து பல நுால்களை எழுதியுள்ளார். 'அறுபது சித்தர்கள் அருளிய ஞானக்கோவை' என்ற இவரது நுால் தமிழ் இலக்கியத்தின் இணையில்லா மைல்கல்.
திருவள்ளுவரின் சுயசரிதையை வெளிப்படுத்தி 'திருவள்ளுவர் உண்மை வரலாறு' என்று அண்மையில் இவர் வெளியிட்ட நுால் பெரிதும் கவனம் ஈர்த்துள்ளது. அகத்தியருடைய சீடர் திருவள்ளுவர், அவர் இயற்பெயர் சாம்புவமூர்த்தி என ஆய்வில் நிறுவியுள்ளார். திருவள்ளுவர் பற்றி மட்டும் நான்கு ஆய்வு நுால்கள் எழுதியுள்ளார். இதற்காக தமிழக அரசின் 'குறள் நெறிச் செம்மல்' விருது பெற்றுள்ளார்.
காவியாடை அணிந்த வள்ளுவர்
'அகத்திய முனிவரின் உபதேசத்தால், திருவள்ளுவர் 40 வயது வரை கடுந்தவம் புரிந்தார். பின்னர் 25 ஆண்டுகள் திருக்குறள் உட்பட பல நுால்கள் எழுதியுள்ளார். அறிவில் சிறியோர்களும் புரிந்து கொள்ளும் விதத்தில் வழக்கு தமிழில் 'ஞான வெட்டியான்' என்ற நுாலை எழுதியதும் திருவள்ளுவரே.
65 வயதிற்குமேல் காவியாடை தரித்து துறவியாக பிறந்த ஊரான கரூரில் இருந்து வெளியேறி தனுஷ்கோடி சென்று தவம் செய்தார்; பத்தாண்டுகள் கழித்து மயிலாப்பூரில்(சென்னை) தங்கி சிவசிம்மாசனத்தில் அமர்ந்து வேதவிளக்கம் செய்தார்'என்கிறார் கமலக்கண்ணன்.
கமலக்கண்ணனின் முதல் கவிதை நுால் 1985 ல் 'ஞானவிளக்கம்'என்ற பெயரில் வெளிவந்தது. 'ஞானக்கனல்' என்ற முதல் உரைநடை நுால் 1989ல் வெளியானது. இந்த இரண்டு நுால்களையும் படித்து காஞ்சி மஹா பெரியவர் இவரை பாராட்டியது தனிச்சிறப்பு. தனது பால்ய காலம் பற்றி கமலக்கண்ணனே கூறுகிறார்...
'தமிழகத்தில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் கிராமத்தை சேர்ந்த பாஷியம் பிள்ளைக்கும், புதுச்சேரியை சேர்ந்த சுந்தராம்பாளுக்கும் மகனாக மியான்மர் (பழைய பர்மா) நாட்டில் யங்கோனுக்கு அருகில் ஒரு கிராமத்தில் 1932ல் பிறந்தேன். பத்து வயது சிறுவனாக, 1942ல் உலகப்போரின் போது இந்தியாவிற்கு அகதியாக வந்தேன். புதுச்சேரியில் தாய்வழி பாட்டி வீட்டில் படித்தேன். புதுச்சேரி சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டேன். சுதந்திர போராட்ட தியாகி என்ற பட்டமும் பெற்றேன்.
அந்த காலத்து 'மெட்ரிக்குலேஷன்' படித்து தமிழக அரசுப்பணியில் இளநிலை உதவியாளராக சேர்ந்து, 1990ல் துணை கலெக்டராக ஓய்வு பெற்றேன்' என்கிறார்.
ஓய்வுக்கு பின் ஓய்வில்லை
ஓய்வு பெற்ற பிறகு இன்றுவரை 53 நுால்கள் எழுதியுள்ளார் என்பது கமலக்கண்ணனின் தனிப்பெரும் சாதனை. அவற்றில் நான்கு ஆங்கில நுால்களும் உண்டு.
இராமலிங்க வள்ளலாரின் 'மரணமில்லாப் பெருவாழ்வு' என்ற தலைப்பில் உள்ள 28 பாடல்களை 'Deathless great life' என்ற தலைப்பில் 'Foot steps of great Ramalingam' என்ற ஆங்கில நுாலில் எழுதியுள்ளார். இது ஸ்பானிஷ், பல்கேரியன், மலாய், சீன மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
'சிவஞானபோதம்'என்ற சைவ சிந்தாந்தத்திற்கு முதன்முதலாக ஞான விளக்கம் எழுதிய இவர், திருஅருட்பா 6733 பாடல்களுக்கும் ஞானவிளக்கம் எழுதியுள்ளார்.
சித்தர் வழி வாழ்வு
சித்தர்களை படித்து, ஆய்வு செய்து, 'இது சித்தர்கள் சூழ் உலகு; இப்போதும் சித்தர்கள் வாழ்கிறார்கள்' என்று கூறி சித்தர்கள் வழி வாழும் கமலக்கண்ணனும் ஒரு சித்தர் என்பதை நம்மால் உணர முடிகிறது.
'இராமலிங்க வள்ளலாரின் வழிவந்த புதுக்கோட்டை ஆறுமுகம் பிள்ளை என்ற ஞானியிடம் 1965ல் தீட்சை பெற்று, 50 ஆண்டுகளுக்கு மேலாக தவம் பயின்று வருகிறேன்' என்கிறார் கமலக்கண்ணன்.
இவர் புதுச்சேரி அருகே மொரட்டாண்டி என்ற இடத்தில் குருநாதர் ஆறுமுகம் பிள்ளைக்கு சமாதி அமைத்துள்ளார். அருகில் சித்தர் பீடம் அமைத்து வழிபாட்டு வளாகம் கட்டியுள்ளார். அதில் அகத்தியர், கோரக்கர், திருவள்ளுவர், வள்ளலார், விநாயகர், குருபகவான், அம்மன், முருகனுக்கு கோயில் கட்டி தானே பூஜையும் செய்கிறார்.
90 வயதிலும் ஞாயிறு தோறும் இந்த கோயிலுக்கு சென்று இரண்டு மணி நேரம் பொறுமையாக பூஜை செய்கிறார், பிரசாதம் அளிக்கிறார். பூஜையில் பங்கேற்க ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். அவர்களுக்காக இவர் கடவுளிடம் பிரார்த்தனை செய்வது நெகிழ்வானது.
இவர் வணிக நோக்கில் அமைப்புகள் நிறுவியோ, ஆன்மிக உபதேசம் அளிக்கிறேன் என்று கூறியோ யாரையும் அழைப்பதில்லை. இவரது நுால்களை படித்தறிந்து, இவரது ஆன்மிக ஞானம் அறிந்து ஞானோபதேசம் பெற்ற சீடர்கள் பலர் தமிழகத்திலும், புதுச்சேரியிலும் உள்ளனர்.
இவர்கள் இவரது வீட்டிற்கும் கோயிலுக்கும் வந்து ஆசியும் அறிவும் பெற்றுச்செல்கின்றனர். இருதரப்பிற்கும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்த ஞான உறவு தொடர்வது அதிசயம்.
வயது 90ஐ தொட்ட போதும் இவரது ஆய்வுக்கும், ஞானமார்க்க தேடலுக்கும் ஓய்வு இல்லை.
'திருவள்ளுவருக்கு பிறகு இராமலிங்க அடிகளை இன்னும் விரிவாக ஆய்வு செய்ய போகிறேன்' என்று சொல்லும் கமலக்கண்ணனின் கண்களில் ஒரு ஞானஒளியை நம்மால் காண முடிகிறது.
எழுத்தும் படிப்பும்
ஓய்வுக்கு பிறகு ஒரு உலகத்தை உருவாக்கி இத்தனை சுறுசுறுப்பான கமலக்கண்ணனிடம் கேட்டோம்...
இந்த வயதிலும் இளமையாக இருப்பதன் ரகசியம்...
(சத்தமாக சிரித்துக்கொண்டே)இளமை எல்லாம் இல்லை. எழுந்து நின்றால் ஆட்டம் காண்பேன் என்றாலும் நடக்கிறேன். குரல் தான் இளமையாக உள்ளது. 30 ஆண்டுகளாக சைவ சாப்பாடு. டீ, காபி இல்லை. காலையில் 4 இட்லி.மதியம் சாம்பார், தயிர் சாதம், மாலையில் கடுகாய் குடிநீர், இரவில் இட்லி சாப்பிடுவேன். இரவு 9:00 மணிக்கு துாங்க சென்று அதிகாலை 3:00 மணிக்கு எழுந்து விடுவேன். 15 நிமிடம் தியானம்.
பொழுதுபோக்கு...
மனைவி இறந்து விட்டார். தினமும் சந்திக்கும் சிஷ்யர்கள், மகன், மகள்கள், பேரக்குழந்தைகள், சித்தர் பீட பூஜை என்று என் உலகம் இயங்குகிறது. சினிமா, 'டிவி'பார்ப்பது, ரேடியோ கேட்பது இல்லை. தினமலர் நாளிதழை மட்டும் தினமும் படித்து உலக நடப்பை தெரிந்து கொள்வேன்.
மீதி நேரம் நுால்கள் எழுதுவது, படிப்பது.
திருவள்ளுவர் கிறிஸ்தவரா
திருவள்ளுவரை கிறிஸ்தவர் என சிலர் கூறுகிறார்களே... அவரின் வரலாறு எழுதிய உங்கள் கருத்து?
இது நம்ப முடியாத கற்பனை. கிறிஸ்தவ மதம் இந்தியாவிற்கு வருவதற்கு சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பே திருக்குறள் தோன்றி விட்டது. கிறிஸ்தவத்திற்கும், திருக்குறள் கருத்துகளுக்கும் நிறைய வேறுபாடு உண்டு.
அவற்றில் ஒரே ஒரு குறள்...
'தன்னுான் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்'
(ஒருவன் தன்னுடைய உடலை பெருக்குவதற்கு வேறொரு உயிரை கொன்று தின்பானேல் அவனுக்கு இறையருள் எவ்வாறு கிட்டும்)
வேறொரு உயிரை கொன்று உண்பதை வள்ளுவர் ஆதரிக்கவில்லை. இது கிறிஸ்துவத்திற்கு முரண்பாடாக உள்ளதே.
'திருவள்ளுவர் உருவத்தோற்றம் பிராமணர் போல் இருக்கும். ஐந்து வயதில் வேதியர் பள்ளியில் குருகுலக்கல்விக்காக சேர்ந்தவர், 16 வயதினுள் வேதம் முழுக்க கற்றார்' என ஆய்வு செய்து என் நுாலில் எழுதியுள்ளேன்.
kamalakkannan1932@gmail.com
ஜி.வி.ரமேஷ் குமார்
ஆர்.அருண்முருகன்
வாழும் சித்தர் கமலக்கண்ணனின் ஞானக்கண்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!