dinamalar telegram
Advertisement

அம்பிகா - அர்ச்சனா - ஆராதனா! (17)

ADVERTISEMENT
Share

முன்கதை சுருக்கம்: விக்ரமுக்கு போன் செய்த ஆராதனா, அவனை பண்ணை வீட்டுக்கு வரும்படி கூறினாள்-

பொள்ளாச்சி ஜெயராமன் குறித்து அர்ச்சனா கேட்க, ஒரு நிமிடம் எதுவும் பேசாமல் இருந்து, பிறகு நடந்தபடியே பேச ஆரம்பித்தான், விக்ரம்.
''காரணம் இல்லாமல் எந்த காரியமும் இல்லை. நான் செய்த காரியத்துக்கு ஒரு காரணம் உண்டு. ஒரு குடும்பத்தையே நிர்மூலமாக்கின காரணம்...
''நேரடியா விஷயத்துக்கு வரேன். பொள்ளாச்சி முத்துராமன், என் அப்பா. அவருடைய தங்கச்சி, என் அத்தை சுகந்தி. அம்மா இல்லாத எனக்கு எல்லாமே அத்தை தான். ஒவ்வொரு நிமிடமும் என்னை பார்த்து பார்த்து வளர்த்தாங்க.
''பொள்ளாச்சிக்கு ரியல் எஸ்டேட் வேலையா உங்க அப்பா ராமலிங்கம் வந்திருக்கார். அத்தை நடத்திகிட்டிருந்த, 'மெஸ்'சுக்கு அடிக்கடி வந்ததுல ரெண்டு பேருக்கும் பழக்கம் ஆயிடுச்சு,'' என்று, பழங்கதையை நினைத்தான்.
முருகன் கோவில் படிக்கட்டில் உட்கார்ந்து ராமலிங்கமும், சுகந்தியும் பேசிக் கொண்டிருந்தனர். அவ்வளவாக கூட்டம் இல்லாதது, சவுகரியமாக இருந்தது.
'இப்ப எல்லாம் நான், 'மெஸ்'சுக்கு போற நேரம் குறைஞ்சு போச்சு. 'மெஸ்'சை பையன பார்த்துக்க சொல்லி, உன் கூட ஊர் சுத்த கிளம்பிடறேன்...'
'என்னை கூட, அங்க போரடிச்சா ஒரு மாசம் சென்னைக்கு வந்து இருந்துக்கன்னு சொன்னார், முதலாளி. உனக்காக, மாட்டேன்னு சொல்லிட்டேன். என் வாழ்க்கையில் காதல் வரும்ன்னு நான் நினைத்து பார்த்தது இல்லை. வேற எந்த நினைவும் வரமாட்டேங்குது. எப்ப பாரு உன் ஞாபகமாவே இருக்கு...'
'அண்ணன் பையன்கிட்ட கூட கொஞ்ச நேரம் தான் இருக்கற மாதிரி ஆயிருச்சு...'
'என் உயிரே போனாலும் உன் மேல இருக்குற காதல் மட்டும் போகாது. இது முருகன் மேல சத்தியம்...' ஆறுதலாக அவள் கைகளை பிடித்தான்.
ஆற்றங்கரை, வயல் வரப்பு, சந்தை, அம்மன் கோவில் என, பல இடங்களில் நேரம் காலம் தெரியாமல், பல நாட்கள் சந்தித்துக் கொண்டனர். ராமலிங்கத்தை தவிர, உலகத்தில் வேறு ஏதும் சுகந்தி கண்களுக்கு தெரியவில்லை.
ஒருநாள் இரவு வீட்டில் விக்ரமுக்கு சாப்பாடு போட்டு துாங்க வைத்து, அவளும், முத்துராமனும் சாப்பிட உட்கார்ந்தனர். முத்துராமன் எதுவும் பேசாமல் சாப்பிட்டது சுகந்திக்கு ஆச்சரியமாக இருந்தது.
'ஏண்ணே... ஒரு மாதிரி இருக்க, உடம்பு சரியில்லையா?'
'இல்லம்மா, தேங்காய் கடை ஷண்முகம் கூட சண்டை... அறைஞ்சிட்டேன்...'
'ஐயையோ ஏண்ணே?'
'பின்ன என்னம்மா, உன் தங்கச்சியை யாரோ ஒரு பையனோட அங்கங்கே பார்த்தேன்; விசாரின்னு என்கிட்டே வந்து சொன்னா, என்னால தாங்க முடியுமா?'
சுகந்திக்கு, 'திக்' என்றிருந்தது.
சுகந்தி பார்க்காத போது, அவளை பார்த்துக் கொண்டான், முத்துராமன்.
'உன்னை பத்தி எனக்கு தெரியும். என்கிட்ட அவன் வந்து அப்படி பேசலாமா அதான் அடிச்சேன்...'
எதுவும் பேசாமல் சாப்பிட்டாள், சுகந்தி. சாப்பாடு இறங்கவில்லை. அதை கவனிக்க தவறவில்லை, முத்துராமன்.
வாஷ்பேஷனில் தட்டை கழுவியபடியே, 'நேத்து மதியம் கடைக்கு போன் பண்ணினேன். பையன்தான் எடுத்தான்...'
'காய் வெட்டற கத்தி எல்லாம் சாணை பிடிக்க போய் இருந்தேன். அப்ப போன் பண்ணி இருப்ப...' சமாளித்து விட்டதாக நினைத்தாள்.
'ஓஹோ... சரிம்மா, 10ம் தேதி வெள்ளிக்கிழமை ஒருநாள் 'மெஸ்'சுக்கு லீவு விட்டுடு...'
'எதுக்குண்ணே?'
'அன்னைக்கு உன்ன பொண்ணு பார்க்க மாப்பிள்ளை வீட்டுக்காரங்களை வரச் சொல்லி இருக்கேன். சரிதானேம்மா?' ஓரக்கண்ணால் பார்த்து கேட்டான்.
அவளுக்கு குரல் வரவில்லை.

இயந்திரம் மாதிரி, 'மெஸ்'சுக்கு போவதும், விக்ரமுடன் விளையாடுவதும், துாங்குவதுமாக இருந்தாளே தவிர, சுகந்தியின் மனம் முழுவதும் எதிலும் ஈடுபடவில்லை.
'அண்ணனிடம் எப்படி சொல்வது, எனக்கு தைரியம் இல்லையே, ராமலிங்கம் வந்து சொல்வாரா... சொன்னால், அண்ணன் சம்மதிப்பாரா...' அவளுக்குள் பல குழப்பங்கள். வெள்ளிக்கிழமை என்ன செய்வது?
அன்று, 'மெஸ்'சுக்கு சாப்பிட வந்த ராமலிங்கத்தை, சமையல்கட்டு பக்கம் கூட்டி போனாள். பெண் பார்க்க அண்ணன் ஏற்பாடு செய்திருப்பதை பற்றி சொன்னாள்.
'அடக்கடவுளே... சுகந்தி, ஊர்ல அம்மாவுக்கு உடம்பு சரியில்லை உடனே வரச் சொல்லி தந்தி வந்தது. இன்னைக்கே புறப்படணும்...'
'அப்ப வெள்ளிக்கிழமை?'
'வர பையனை உனக்கு பிடிக்கலைன்னு ஏதாவது காரணத்தைச் சொல்லி தட்டிக் கழிச்சிடு. ரெண்டு நாள் அம்மா கூட இருந்துட்டு வந்திடறேன்...'
'அப்பறம் போக முடியாதா?' குரல் தழுதழுக்க கேட்டாள்.
'சுகந்தி... சாதாரண விஷயத்துக்கெல்லாம் ஆஸ்பத்திரிக்கு போகணும்பாங்க, அம்மா. கடைசியில ஒண்ணுமே இருக்காது. நீ எப்படியாவது சமாளிச்சிடு. நான் வந்துடறேன். அப்புறம் அண்ணன்கிட்ட பேசி முடிச்சிடலாம் என்ன?'
'ஊருக்கு போறதுக்கு முன்னாடி அண்ணன்கிட்ட பேசினா, பொண்ணு பார்க்கிற விஷயத்தை நிறுத்திடலாமே?'
'இப்ப நான் இருக்கிற மனநிலையில், உங்க அண்ணன்கிட்ட நம் காதலை பத்தி பேசுனா, அது ஒருவேளை தப்பா போயிடும். அவசரமா பேசுற விஷயமில்லை இது, புரியுதா? வெள்ளிக்கிழமை சமாளிச்சிடு பார்த்துக்கலாம்...'

எதுவும் பேசாமல் விக்ரமையே பார்த்துக் கொண்டிருந்தாள், ஆராதனா. கடல் அலைகள் கூட சத்தம் போடாமல் அமைதியாக இருந்தது.
''தன் காதலுக்காக, எங்க அப்பா ஏற்பாடு பண்ணின பையன, ஏதோ காரணம் சொல்லி வேணாம்ன்னு திருப்பி அனுப்பிட்டாங்க, அத்தை. அதனால, அப்பாவுக்கும் அத்தைக்கும் சரியான சண்டை.
''சண்டைக்கு நடுவில், ராமலிங்கம்ன்னு ஒருத்தரோட ஆழமான காதல் இருக்கிறதை போட்டு உடைச்சாங்க, சுகந்தி அத்தை. 'அடிப்பாவி, இந்த விஷயத்தை முதலிலேயே சொல்லி இருந்தா, இந்த பொண்ணு பார்க்குறதுக்கு ஏற்பாடு பண்ணியிருக்க மாட்டேனே...' அப்பா கத்தினார்...'' என்றான், விக்ரம்.

சண்டை முடிந்து இரண்டாவது நாள், 'மெஸ்'சுக்கு போகாமல், எதிலேயும் பிடிப்பில்லாமல், சுகந்தி இருப்பதை பார்க்க பார்க்க, முத்துராமனுக்கு சங்கடமாயிருந்தது.
'ஒரே தங்கை. ராமலிங்கத்தின் மேல் உயிராய் இருக்கேன்னு சொல்றா. இது ஒண்ணு தான் அவ பிடிவாதம் புடிச்சு கேட்கிறா. பாவம் வாழ போறது அவ. சேர்த்து வைப்போம்...' என நினைத்த முத்துராமன், 'சுகந்தி, யோசித்து பார்த்தேன். உன் சந்தோஷம் தான் எனக்கு முக்கியம். அந்த மாடியில் குடி வச்ச அவன் தானே ராமலிங்கம்?'
'ஆமாங்ண்ணா...'
'எப்ப பாக்கலாம்ன்னு கேளும்மா பேசிடறேன்...' என்றான்.
சந்தோஷத்தில் சுகந்திக்கு கண்ணீர் பொங்கியது. இரண்டு நாளில் வருவதாக கூறினான்; வந்திருக்க வேண்டும். ஓட்டமும் நடையுமாக அவன் தங்கியிருக்கும் மாடிக்கு ஓடினாள். பூட்டி இருந்தது. அவனுடைய நிலத்துக்கு ஓடினாள். வேலியை ஒட்டி போடப்பட்ட தகரக் கதவு பூட்டியிருந்தது.
'இன்னும் வரலியா?'
ராமலிங்கத்தின் வீட்டு டெலிபோன் நம்பரை வாங்கி கொள்ளாதது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என தோன்றியது. தினமும் முத்துராமன் விசாரிப்பதும், 'இன்னும் வரல' என்று இவள் சொல்வதும் வாடிக்கையாகவே போய்க் கொண்டிருந்தது.
'ஏமாத்திட்டானோ... சீச்சி, இருக்காது. இது நிஜமான காதல்; தோத்து போகாது. ஒருவேளை அவங்க அம்மாவுக்கு உடம்பு மோசமா இருக்கோ, என்னவோ?' தனக்குத்தானே குழம்பி சமாதானம் சொல்லி, காத்திருந்தாள்.
ஒரு மாதம் ஓடியது.
ஒருநாள், 'அக்கா... நம் கடைக்கு அடிக்கடி சாப்பிட வருவாரே, அவரை பார்த்தேன்...' என, கடைப்பையன் கூறியதும், ஆச்சரியமாக, 'எங்கேடா?' என்றாள்.
'அவரோட இடத்தில் துணி காய போட்டுட்டு இருந்தார்...'
அதற்குமேல் அவளால் அங்கு நிற்க முடியவில்லை. ஓட்டமாக ராமலிங்கத்தின் இடத்துக்கு சென்றாள். அவனது குடிசைக்கு பக்கத்தில் உள்ள கொடியில் வேட்டி, சட்டை காயப்போட்டிருந்தது.
அழுகையும், சந்தோஷமும் கலந்து கண்ணீர் முட்ட, தகர கதவைத் திறந்து, உள்ளே ஓடினாள், சுகந்தி. குடிசையில் இருந்து குப்பையை கொட்ட வெளியே வந்தான், ராமலிங்கம். அவனை பார்த்ததில் அவளுக்கு பேச்சே வரவில்லை, கட்டிக்கொண்டாள்.
அவன் விலக்கி விட்டான்.
'எப்ப வந்தே?'
'ஒரு வாரம் ஆச்சு...'
'அடப்பாவி, ஏன் வந்து என்னை பார்க்கல?'
'அந்த மாதிரி சூழ்நிலை. அதான்...'
'என்ன சூழ்நிலையாக இருந்தாலும் என்னை வந்து பார்த்திருக்க வேண்டாமா... நான் எப்படி தவிச்சுகிட்டு இருந்தேன் தெரியுமா? உன்னை பார்க்காத ஒவ்வொரு நிமிஷத்தையும், ஒவ்வொரு வருஷமா தள்ளிகிட்டு இருந்தேன். ரெண்டு நாள்ல வரேன்னு போன மனுஷன், ஒரு மாசம் ஆகியும் வரல. அட, வந்து ஒரு வாரம் ஆச்சு. பார்க்கவும் வரலைன்னா?'
அவன் எதுவும் பேசவில்லை.
'அம்மாகிட்ட நம் விஷயத்தை சொன்னியா... மாட்டேன்னு சொல்லிட்டாங்களா?'
'அதெல்லாம் ஒண்ணும் இல்லை...'
சந்தோஷமானாள்.
'சரி, அதெல்லாம் போகட்டும். அண்ணன்கிட்ட எல்லா விஷயமும் சொல்லிட்டேன். எப்போ வரட்டும்ன்னு கேட்டார்?'
தாடையைத் தடவியபடி, 'நாளைக்கு வர சொல்லு...' என்றான்.
-தொடரும்
கோபு பாபு

Share
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement