dinamalar telegram
Advertisement

வருமானம் தரும் கோ 6 நிலக்கடலை

Share

மானாவாரி நிலங்களில் சாகுபடி செய்யப்படும் நிலக்கடலை குறைந்த மகசூலே கொடுக்கிறது. புதிய ரகங்களை பயிரிடாமை மற்றும் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மையை கையாளாமல் இருப்பதே இதற்கு காரணம்.

தேனி மாவட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள் பழைய நிலக்கடலை ரகங்களையே பயிரிடுகின்றனர். கோவை வேளாண்மை பல்கலைகழகம் வெளியிட்டுள்ள புதிய ரகமான கோ-6 நிலக்கடலை 125 - 130 நாட்களில் அறுவடையாகும். மானாவாரியில் 23 குவிண்டால் அளவு மகசூல் தரும். தேனி மாவட்டம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தின் மூலம் ஆண்டிபட்டி வட்டம் ஏத்தக்கோவில் கிராமத்தை சேர்ந்த விவசாய ஆர்வலர் குழுக்கள் மூலம் கோ 6 ரக செயல் விளக்க திடலில் ஒருங்கிணைந்த சாகுபடி தொழில்நுட்பம் புகுத்தப்பட்டது.
விதை நேர்த்தி மூலம் நோய் வராமல் ஆரம்பத்திலேயே தடுக்கலாம். எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஒரு கிலோ நிலக்கடலை விதைக்கு 4 கிராம் டிரைக்கோடெர்மா உயிர் பூஞ்சாண கொல்லியை கலந்து விதைக்க வேண்டும். ஆறிய வடிகஞ்சியில் ரைசோபியம் நுண்ணுயிர் 600 கிராம் கலந்து விதையை சேர்த்து நிழலில் உலர வைக்க வேண்டும். இதனால் பயிர் வளரும் போதே செழிப்பாக வளரும்.

செடியானது வரிசைக்கு வரிசை 30 செ.மீ செடிக்கு செடி 10 செ.மீ இடைவெளி இருக்குமாறு பயிரிடவேண்டும். மண் பரிசோதனை அடிப்படையில் உரங்களை இடவேண்டும்.
இல்லாவிட்டால் பொதுவான உர பரிந்துரையாக 17:34:54 கிலோ தழை, மணி, சாம்பல் சத்துகளை இட வேண்டும். தழைச்சத்து மற்றும் மணிசத்தை மூன்று பகுதிகளாக பிரித்து அடியுரமாக ஒரு பகுதியையும் அடுத்து 20வது, 45 நாளில் ஒரு பகுதி என இட வேண்டும். உர கிரகிப்பு அதிகமாகி மகசூல் பெருகும்.

விதைத்த 20 நாட்களில் முதல் களையும், 45 நாட்களில் இரண்டாவது களையும் எடுக்க வேண்டும். அந்த நேரம் ஏக்கருக்கு 200 கிலோ ஜிப்சம் இட்டு மண் அணைக்க வேண்டும். இதனால் காய்களின் எடையும் எண்ணிக்கையும் அதிகமாகும். பூக்கும் தருணத்தில் நிலக்கடலை ரிச் என்ற பயிர் வளர்ச்சி ஊக்கியை ஏக்கருக்கு 2 கிலோ வீதம் 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். மகசூல் 20 சதவீதம் வரை கூடும். சூரியகாந்தியை கவர்ச்சி பயிராக வரப்பு ஓரங்களில் ஊடுபயிராக பயிரிட்டு பூச்சிகளின் நடமாட்டத்தை கண்காணித்து கட்டுப்படுத்தலாம்.

மகேஸ்வரன்,
திட்ட ஒருங்கிணைப்பாளர் (பொறுப்பு)
அருண்ராஜ்
தொழில்நுட்ப வல்லுனர்
வேளாண் அறிவியல் மையம் தேனி
96776 61410

Share
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement