அன்பு பிளாரன்ஸ் அம்மாவுக்கு...
நான், 14 வயது மாணவி; 9ம் வகுப்பு படிக்கிறேன். என் பிரச்னை என்ன என்றால், பட்டாசு சத்தம் கேட்டால் மிகவும் பயப்படுவேன்; பலுான் வெடிக்கும் சத்தத்திற்கும் அஞ்சுவேன். பிறந்த நாள் விழாவிற்கு சென்றால், பயத்துடன் அமர்ந்திருப்பேன்; தீபாவளி வந்தாலே பிடிக்காது.
பட்டாசு வெடிக்க ஆசையாக இருக்கும். ஆனால், அந்த பயங்கர சத்தத்தை கேட்டவுடனே, கண்ணீர் வந்துவிடும்; இதனால், தீபாவளியை கொண்டாட முடியவில்லை.
எவ்வளவோ முயற்சித்து பார்த்தேன்; பட்டாசு மீதான பயம் மட்டும், போக மாட்டேன் என்கிறது; இந்த பிரச்னையிலிருந்து மீள வழி சொல்லுங்கள்.
அன்பு மகளுக்கு...
பவுதீகத்தில், ஒலியை, 'டெசிபல்' என்ற அளவையால் அளப்பர்.
சில ஒலி அளவுகள், கீழ்கண்டவாறு அமையும்...
* சுவாசம் விடும் சத்தம், 10 டெசிபல்
* ரகசியமாக முணுமுணுப்பது, 30 டெசிபல்
* சாதாரணமாக பேசுவது, 60 டெசிபல்
* மோட்டார் சைக்கிள் ஓட்டும் போது, 95 டெசிபல்
* ஜெட் விமானம் பறக்கும் போது, 140 டெசிபல்
* பட்டாசு சத்தம், 125 டெசிபல்.
தொடர்ந்து, 70 டெசிபல் சத்தத்தை நீண்ட நேரம் கேட்டால், செவித்திறன் பாதிக்கப்படும்; 150 டெசிபல் சத்தம் கேட்டால், காது ஜவ்வு கிழிந்துவிடும். 185 முதல் 200 டெசிபல் வரை சத்தம் கேட்டால், உடல் உள்ளுறுப்புகள் பாதித்து மரணம் நிச்சயம்.
கடலில் திமிங்கலம், 230 டெசிபல் சத்தம் எழுப்பி எதிராளியை கொன்றுவிடும்.
சிலருக்கு, கணினியில் எதிரொலிக்கும் ஸ்பீக்கர் சத்தம், தீப்பிடித்ததை அறிவிக்கும் அபாய சங்கு, ஹோம் தியேட்டர் சத்தங்கள் ஆகாது.
உனக்கு, லிகைரோ போபியா, ஸோனோ போபியா அல்லது அகஸ்டிகோ போபியா என்ற பாதிப்பு இருக்கும். ஆங்கிலத்தில், பெரிய பெயர்களை பார்த்ததும் பயந்துவிடாதே...
மனம் சார்ந்த பிரச்னை இல்லாத மனிதனே இவ்வுலகில் கிடையாது.
வழக்கத்துக்கு மாறாக, அதிக சத்தத்தை கேட்டால், அதிகப்படியாக வியர்த்தல், ஒழுங்கீனமான இதயதுடிப்பு, குமட்டல், கிறுகிறுப்பு, மயக்கம் போன்ற உபாதைகள் ஏற்படும்.
இந்த பிரச்னை வர, கீழ்க்கண்ட காரணங்கள் இருக்கலாம்.
* ஒற்றைத் தலைவலி எனப்படும் மைக்ரைன்
* தீபாவளி சம்பந்தபட்டு ஏதாவது, துக்க சம்பவம் சிறு வயதில் நடந்திருக்கலாம்
* பட்டாசு விபத்தில், உன் நண்பர் அல்லது உறவினர் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும்
* மூதாதையருக்கு இப்பிரச்னை இருந்திருக்கலாம்.
தொடர்ந்து பட்டாசு சத்தம் கேட்டால், முகவாதம், காது கேளாமை, இயக்கு தசை சோர்வு நோய், பேச்சில் திக்கித் திணறல் போன்ற குறைபாடுகள் ஏற்படலாம்.
இந்த பிரச்னை எந்த வயதினருக்கும் வரக்கூடியதே...
நீ என்ன செய்ய வேண்டும் தெரியுமா...
பெற்றோரை வற்புறுத்தி, ஒரு நல்ல மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெறவும். அவர் இரு வகை சிகிச்சைகள் தருவார்.
* எக்ஸ்போஷர் தெரபி - வெளிப்பாடு சிகிச்சை
* சி.பி.டி., எனப்படும், காக்னிடிவ் பிஹேபியரல் தெரபி. அதாவது, புலனுணர்வு சார்ந்த நடத்தை சிகிச்சை.
மனதை சமன்படுத்தும் சில மாத்திரைகளும், மருத்துவர் தருவார். சிகிச்சை முடிவில் பட்டாசு சத்தங்களை இயல்பாய் எதிர்கொள்ளலாம். துணிந்து பட்டாசுகளை வெடித்து மகிழலாம். மகிழ்ச்சிக்குரிய பண்டிகை ஆகிவிடும் தீபாவளி.
பலுான்களை ஊதி, வானில் பறக்க விடுவதும், ஊதும்போது, வெடித்தால் கும்மாளம் போடுவதும் வாடிக்கையாகிவிடும்.
- அன்புடன், பிளாரன்ஸ்.
இளஸ் மனஸ்! (128)
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!