சோமுவும் ராமுவும், அண்ணன் தம்பியர். விபத்தில் தந்தை இறந்துவிட்டதால், தாயின் அரவணைப்பில் வளர்ந்தனர். முறையான பணி கிடைக்காததால் போதிய வருமானம் இன்றி வறுமையில் வாடியது குடும்பம்.
ஒருநாள் அந்த ஊருக்கு வந்தார் ஒரு முனிவர். அரச மரத்தடியில் அமர்ந்திருந்தார். வணங்கியோருக்கு நல் ஆசி வழங்கினார்.
அவரிடம் ஆசி பெற்றால் வறுமை நீங்கும் என நம்பினான் ராமு. இதை அம்மாவிடம் சொன்னான்.
முதலில் சோமுவை அனுப்பினாள் அம்மா.
சென்ற வேகத்தில் திரும்பியவன் கையில், ஒரு மரக்கன்று இருந்தது.
அதை எரிச்சலோடு மூலையில் வீசியபடி, 'முனிவரை வணங்கினால் வறுமை போகும் என கூறுவோர் முட்டாள்; அவர் தந்த மரக்கன்று எப்படி வறுமையைப் போக்கும்...' என சிடு சிடுத்தான்.
அவன் அறியாமையை எண்ணி வருந்தினாள் தாய்.
தொடர்ந்து இளைய மகன் ராமுவை அனுப்பி வைத்தாள்.
மரக்கன்றோடு திரும்பினான் ராமு. வந்த வேகத்தில் வீட்டின் பின்புறமிருந்த பகுதிக்கு சென்றான்; மரக்கன்றை நடும் இடத்தை தேர்வு செய்தான்.
நடவுக்கு ஏற்ற வகையில் உரிய அளவில் குழி தோண்டினான். அதில் வித்தியாசமாக ஏதோ ஒன்று தட்டுப்பட்டது. உன்னிப்பாக கவனித்தான். பழம்பானை போல் தெரிந்தது. அதை பத்திரமாக வெளியே எடுத்தான்.
அந்த பானையை வீட்டிற்குள் எடுத்து வந்தான்; அதற்குள் தங்க நாணயங்கள் குவியலாக இருந்தன. சற்றும் தாமதிக்காமல், அதை அரசு கருவூலத்தில் ஒப்படைத்தான்.
அந்த நாணயங்களை ஆராய்ந்த அறிஞர்கள், அந்த பகுதியின் பழங்கால வரலாற்றுக்கு உரிய ஆதாரம் என துலக்கினர்.
கிடைத்த தங்க புதையலை, மறைக்காமல் கருவூலத்தில் ஒப்படைத்ததற்காக, ராமுவை பாராட்டியது அரசு. அவன் படிப்புக்கு ஏற்ற வேலை ஒன்றை வழங்கி கவுரவித்தது. அந்த பணியில் கிடைத்த சம்பளம், குடும்ப வறுமையை நீக்கியது.
முனிவருக்கு நன்றி கூறி மகிழ்ந்தான் ராமு.
செல்லங்களே... எந்த செயலையும் அலட்சியப்படுத்தாமல் முறைப்படி செய்தால் தக்க பலன் உரிய நேரத்தில் கிடைக்கும்!
தி.சிவசங்கரி
பரிசு!
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!