dinamalar telegram
Advertisement

அதிமேதாவி அங்குராசு!

Share

சிறுத்தை செல்லம்!
அழிவின் விளிம்பில் உள்ளது சிறுத்தை இனம். அதைக் காக்க வேண்டியது மிகவும் அவசியம்.
பூனைப் பேரினத்தை சேர்ந்த விலங்கு, சிறுத்தை. பெரிய பூனைக் குடும்பத்தில் மிகவும் சிறிய இனம். இதே இனத்தில் சிங்கம், புலி, ஜாகுவார் என்ற விலங்குகளும் அடங்கும்.
ஆசியா மற்றும் ஐரோப்பாவின் வடபகுதியான சைபீரியா முதல் தென்னாபிரிக்கா வரையும், கிழக்கு மற்றும் தெற்கு ஆசிய பகுதிகளிலும் இருந்தது சிறுத்தை இனம். வேட்டை, காடு அழிப்பு போன்ற காரணங்களால் அதன் வாழும் பரப்பு குறைந்து வருகிறது.
தற்போது, ஆப்பிரிக்க கண்டப் பகுதியில் அதிகம் காணப்படுகிறது. ஆசிய நாடுகளான இந்தோனேஷியா, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, மலேஷியா மற்றும் சீனாவில் உள்ள காடுகளில் சிறிய அளவில் உள்ளது. எண்ணிக்கை குறைந்து வருவதால், 'அச்சுறுத்தல் நிலையை அண்மித்த உயிரினம்' என வகைப்படுத்தியுள்ளது, பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்.
இந்தியாவிலும், சிறுத்தை எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இதனால், புலி இனம் போல இதையும் பாதுகாக்கும் திட்டத்தை, பெங்களூரு வன உயிரின கல்வி மையம், டேராடூன், இந்திய வன உயிரின கல்வி நிறுவனம் ஆகியவை உருவாக்கியுள்ளன.
பொதுவாக, எந்த சூழ்நிலையிலும் பொருந்தி வாழக்கூடியது சிறுத்தை. அதனால்தான், பசுமை மாறாக் காடுகளிலும், தக்காண பீடபூமியிலும், குளிர் நிறைந்த இமயமலை காடுகளிலும் காணப்படுகின்றன.
அதன் உடல்வாகு மரத்தில் ஏற ஏற்ற வகையில் உள்ளது. பதுங்கி வேட்டையாடும் பண்பு கொண்டது. புலியைக் கண்டு அஞ்சும். காடு சுருங்கி வருவதால் தற்காப்புக்காக, எப்போதும் மரத்திலேயே அமர்ந்திருக்கும். இரையை, தரையில் உண்டால், புலியிடம் பறிகொடுக்கும் அபாயம் உண்டு. இதனால், மரத்துக்கு எடுத்து சென்றே உண்ணும்.
இந்தியாவில் புலிகள் காப்பக பகுதிகளில் தான் அதிகம் வசிக்கிறது சிறுத்தை. இந்த பகுதிகளை பாதுகாக்க, சிறப்பு அதிகாரம் பெற்ற காவலர்களை நியமித்துள்ளது வனத்துறை.
இவர்கள், குறிப்பிட்ட கால இடைவெளியில் வனவிலங்குகள் உலாவும் பகுதிகளை கண்காணிக்கின்றனர். அங்கு, மனிதன் நடமாடுவதை கண்டால் உடனடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனால், வனங்களில் விலங்கு வேட்டை வெகுவாக குறைந்து வருகிறது.
எல்லா உயிரினங்களையும் காக்கும் வகையில் வாழ வேண்டும் மனிதன்.

பைசா கோபுரம்!
உலக அபூர்வங்களில் ஒன்று, பைசா கோபுரம். ஐரோப்பிய நாடான இத்தாலி பைசா நகரில் உள்ளது. இது மணிக்கூண்டாக அமைக்கப்பட்டது. இதற்கான கட்டுமானம், கி.பி., 1173ல் துவங்கப்பட்டது. கட்டியபோதே லேசாக சாயத் துவங்கியது.
கோபுரத்தின் உச்சிக்கு செல்ல, 287 படிக்கட்டுகள் உள்ளன. பாதுகாப்புக் கருதி இதில் ஏற, 1990ல் தடை விதிக்கப்பட்டது. சாய்மானத்தை செப்பனிடும் பணி நடந்தது. கோபுரத்தின் சாய்மானம், 5.5 டிகிரி கோணத்திலிருந்து, 3.97 டிகிரியாக குறைக்கப்பட்டது. மீண்டும் மக்கள் பார்வைக்கு திறந்து விடப்பட்டது.
இதற்கு மேல் கோபுரம் சாயாது என, மே 2008ல் அறிவித்தனர் அறிஞர்கள். கோபுரம் கட்டப்பட்ட பின், அந்த பகுதியில், நான்கு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அவற்றால், கோபுரத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
மண்ணின் மிருது தன்மையால் அந்ந கோபுரம் சாய்ந்திருந்ததாக கண்டறிந்தனர் வல்லுனர்கள். அதே மண்ணை, தொழில் நுட்பத்தால் மேம்படுத்தி கோபுரம் நிமிர்த்தப் பட்டுள்ளது. மண்ணின் மகிமையால் வலுவாக நிற்கிறது பைசா கோபுரம்!
- என்றென்றும் அன்புடன், அங்குராசு.

Share
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement