dinamalar telegram
Advertisement

மதிப்பு கூட்டலுக்கு உதவும் சோலார் டிரையர்

Share

சோலார் டிரையரில் வாழைக்காய், கொய்யா காய், உலர்திரட்சை, வெற்றிலை, மாங்காய், ஏலக்காய், இஞ்சி, தக்காளி, நெல்லிசூரணம் ஆகியவற்றை உலரவைத்து பொடி வகைகள் தயாரிக்கலாம்.

குளிர்பதன முறை, வெயிலில் பதப்படுத்தும் முறைகளில் விளைபொருட்களை பாதுகாக்கலாம். வெயிலில் பதப்படுத்தும் போது உணவு மற்றும் விவசாய பொருட்கள் நீண்டநாட்கள் கெடாமல் பாதுகாக்க முடியும். மாங்காய், கத்தரிக்காய் வற்றல், சுண்டக்காய் வற்றல், மிளகாய் வற்றல், ஊறுகாய் வகைகள், கருவாடு போன்றவற்றை வெயிலில் பதப்படுத்தி பாதுகாக்கலாம்.

வெட்ட வெளியில் வெயிலில் காய வைக்கும் போது காற்றிலிருந்து வரும் மாசு, தூசி உணவுப்பொருட்களின் மீது படியும். திடீர் மழை, காற்றின் ஈரப்பதத்தால் பூஞ்சைகள் உருவாகலாம். பறவை, பூச்சிகளால் தொல்லையும் அதிகமான இழப்பும் ஏற்படும். வெயிலின் வெப்பத்தின் அளவு அடிக்கடி மாறுபடுவதால் உணவுப்பொருட்களின் தரமும் சுவையும் குறையலாம். ,

வேளாண் விளைபொருட்களை அறுவடைக்கு பிறகு சூரிய வெப்பத்தை பயன்படுத்தி அவற்றை பாதுகாப்பான கூடாரங்களில் உலர வைத்து சந்தையில் மதிப்பு கூட்டிய பொருட்களாக விற்கலாம். சோலார் டிரையரில் உலர வைப்பதன் மூலம் காலஅளவு, கூலியாட்கள் செலவு குறைவதோடு அறுவடைக்கு பின் ஏற்படும் இழப்பும் குறைகிறது. சுகாதாரமான முறையில் இயற்கை தன்மை மாறாமல் பாதுகாக்கலாம்.

டிரையர் வைக்கப்பட்டுள்ள இடத்தின் தரையின் நிறம் கருப்பு நிறத்தில் இருக்கவேண்டும். சீரான வெப்பநிலை பாரமரிக்கப்படுவதால் பதப்படுத்தும் பொருட்களின் சுவையும், தரமும் அதிகரித்து நிறம் ஒரே மாதிரி காணப்படும். கூடாரத்தின் உள்வெப்பம் அதிகமாக இருப்பதால் கூடாரத்தில் நின்று பொருட்களை வைப்பது சிரமம் என்பதால் பல டிரேக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

தேனி சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் மூலம் தொழில்முனைவோருக்கான அறுவடை பின்சார் தொழில்நுட்பங்கள் மற்றும் மதிப்புகூட்டும் பொருட்கள் தயாரித்தல் பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது.

ரம்யா சிவசெல்வி மனையியல் தொழில்நுட்ப வல்லுனர்
சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையம்
தேனி, 95788 84432

Share
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement