பண்ணைகளில் வளர்க்கப்படும் நாட்டுக்கோழிகள் ஒன்றை ஒன்று கொத்தாமல் இருக்கவும், தீவனம் கீழே சிந்தி விரயம் ஏற்படுவதை தவிர்க்கவும் அவற்றின் அலகுகளை வெட்டுவது அவசியம். கோழிகளின் தீவன மாற்றுத் திறனை அதிகரிக்கவும், முறையாக தீவனமெடுத்து சீராக வளர்ச்சியடையவும் அலகு வெட்டப்பட வேண்டும். சில நேரங்களில் கோழிக் குஞ்சுகளின் எச்சமிடும் பகுதி ஈரமடைந்து கூளம் ஒட்டி கொள்ளும். அதை மற்ற குஞ்சுகள் கொத்தி கிளறி புண்ணாக்கும் போது கோழிக்குஞ்சுகள் இறக்க நேரிடும்.
நாட்டுக்கோழி குஞ்சுகளின் மூன்றாவது வார வயதில் அலகு வெட்டப்படுகிறது. தேவையானால் 12 முதல் 14வது வார வயதில் மீண்டும் ஒரு முறை அலகு வெட்டலாம். குறைந்த மின்சாரத்தில் சூடாக்கப்படும் தகடு பொருத்திய அலகு வெட்டும் கருவி பயன்படுகிறது.
மேல் அலகில் மூன்றில் இரு பங்கும் கீழ் அலகில் மூன்றில் ஒரு பங்கும் வெட்ட வேண்டும். அலகு வெட்டும் பொழுது வெப்பமாக இருப்பதால் லேசாக ரத்தம் வழிந்தாலும் உடனே உறைந்து விடுவதால் ரத்தக்கசிவு இருக்காது.
ரத்தக்கசிவு இருந்தால் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். ஒரே நேரத்தில் எல்லா குஞ்சுகளுக்கும் அலகு வெட்டினால் ஒன்றையொன்று கொத்தி புண்ணாக்காது. குளிர்ச்சியான அல்லது விடியற்காலையில் அதிக தொந்தரவு இன்றி மென்மையாக வெட்டவேண்டும். நோய் பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் தடுப்பூசி போட்டிருந்தாலும் ஒரு வாரம் வரை அலகு வெட்டுவது தவிர்க்க வேண்டும்.
அலகை வெட்டும் பொழுது ஒரு விரலால் நாக்கை உள்ளே தள்ளிவிட வேண்டும். அலகு வெட்டியவுடன் குளிர்ந்த நீர் குடிக்க தரவேண்டும். அதன் பின் பி காம்ப்ளக்ஸ் மருந்தை ஒரு லிட்டர் குடிநீரில் 5 மில்லி என்ற அளவில் தினமும் மூன்று நாட்களுக்கு தர வேண்டும். அலகு வெட்டிய ஒரு வாரம் வரை அலகின் நுனிப்பாகம் வலிக்கலாம். எனவே தீவனத் தொட்டி காலியாகவோ பற்றாக்குறையாகவோ இல்லாமல் கொத்தி தின்பதற்கு ஏற்ற அளவில் இருக்க வேண்டும்.
அலகு வெட்டும் பொழுது காயம் ஏற்படாமல் இருக்க முறையான பயிற்சி பெற்றவர்களை அணுக வேண்டும். அலகு வெட்டிய நாட்டுக்கோழிகள் தரம் குறைந்தவை என்று குறைந்த விலைக்கு வாங்கும் வியாபாரிகள் வெளியில் அதிக விலைக்கு விற்கின்றனர். இறைச்சி உண்பவர்களும் நாட்டுக்கோழிகளில் அலகு வெட்டுதலின் நோக்கம் பற்றி தெரிந்து கொண்டால் விழிப்புணர்வு பெறலாம்.
உமாராணி, பேராசிரியர் கால்நடை சிகிச்சை வளாகம் கால்நடை மருத்துவ
கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தேனி
kamleshharini@yahoo.com
நாட்டுக்கோழிகளுக்கு அலகு வெட்டுதல் அவசியம்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!