dinamalar telegram
Advertisement

காலிபிளவரில் வெற்றி தந்த விதைப்பரிசோதனை

Share

விதைக்கும் முன் விதையின் முளைப்புத்திறனை பரிசோதனை செய்வதன் மூலம் ஆண்டுக்கு 40 லட்சம் காலிபிளவர் நாற்றுகளை சரியான அளவில் உற்பத்தி செய்கிறேன் என்கிறார் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் எஸ்.அத்திக்கோம்பை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி லோகநாதன்.

விதைகளும் நாற்றுகளும் தேடி தந்த லாபம் குறித்து அவர் கூறியதாவது: 2 ஏக்கர் நிலம் உள்ளது. குத்தகைக்கு எடுத்து வெங்காயம், காலிபிளவர் சாகுபடி செய்கிறேன். 1992 முதல் சமவெளிப்பகுதியில் காலிபிளவர் சாகுபடி செய்ததால் 1996ல் நாற்று உற்பத்தியில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். உத்தரபிரதேசம், பீகாரிலிருந்து ஒட்டுரக விதைகளை வாங்கி நாற்றாக வளர்த்து 20 - 25 நாட்கள் வளர்த்து விற்கிறேன். ஏக்கருக்கு 1000 விதைகள் என கணக்கிட்டு விதைத்ததில் 74 சதவீதம் மட்டுமே முளைத்தது. இதனால் நஷ்டம் ஏற்பட்டது.

காலிபிளவர் சாகுபடியில் பூச்சிக்கட்டுப்பாடு, சத்துப்பற்றாக்குறை, நோய் தொல்லை என பிரச்னைகள் உண்டு. ஆரம்ப கட்டத்தில் சரியான விதையை தேர்ந்தெடுத்தால் பெரும்பாலான பிரச்னைகளை சரிசெய்யலாம். அரசு அனுமதி பெற்று காலிபிளவர் நாற்றுகளை உற்பத்தி செய்கிறேன். ஆரம்பத்தில் சாகுபடி செய்தபின் காலிபிளவரில் ஏற்பட்ட நஷ்டத்தை ஆராய்ந்தேன். விதையை கவனிக்காமல் விட்டது புரிந்தது. நாட்டு ரகமோ, ஒட்டுரகமோ விதையில் இருக்கிறதா என கண்டறிய திண்டுக்கல் விதைப் பரிசோதனை நிலையத்தை அணுகினேன். வேளாண்மை அலுவலர் கண்ணனிடம் பிரச்னையை தெரிவித்த போது பரிசோதிக்க ஏற்பாடு செய்தார். விதைகளின் முளைப்புத்திறன் பரிசோதனையைப் பொறுத்து ஒவ்வொரு காய்கறிக்கும் சதவீத எண்ணிக்கை மாறுபடும் என தெரிவித்தார். விதையை பரிசோதிக்க ரூ.30 கட்டணம் தான். பரிசோதனையில் 100ல் 74 விதைகளே முளைத்திருந்தன.

எனவே ஒரு ஏக்கருக்கு விதைக்கும் போது கூடுதலாக 25 சதவீதம் விதைக்க வேண்டுமென அறிந்து கொண்டேன். நாட்டு ரக நாற்று 40 காசுக்கும், ஒட்டுரகத்தை 90 காசுக்கும் விற்றதில் லாபம் கிடைக்கிறது. மலைப்பகுதியில் ஆண்டு முழுவதும் காலிபிளவர் விளையும். சமவெளிப்பகுதியில் மழைக்காலம், பனிக்காலத்தில் சாகுபடி செய்யலாம். இரவில் 18 டிகிரி, பகலில் 32 டிகிரி வரை வெப்பநிலை இருந்தால் பராமரிப்பது எளிது. பகல்நேர வெப்பநிலை அதிகமானால் பூச்சி, நோய் தாக்குதல் அதிகரிக்கும். வேப்பஎண்ணெய் தெளித்தும் உயிரியல் பூச்சிக்கொல்லியான பேசில்லஸ் துரியன்ஜிஸ் மூலமும் கட்டுப்படுத்தலாம். ஒரு ஏக்கருக்கு 200 கிராம் விதைகள் போதும். விதையாக, நாற்றுகளாக உற்பத்தி செய்வதோடு பூவாகவும் சாகுபடி செய்து லாபமீட்டுகிறேன் என்றார்.

தொடர்புக்கு: 98421 24002

- எம்.எம்.ஜெயலெட்சுமி, மதுரை

Share
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement