dinamalar telegram
Advertisement

பண்ணையில் குட்டையால் பலன் அதிகம்

Share

மானாவாரி பகுதிகளில் மழை பெய்யும் போது நீரை நிலத்தில் உறிஞ்ச செய்வதற்கு கோடை உழவு, சரிவுக்கு குறுக்கே உழவு, மரப்பயிர் உள்ள இடங்களில் பெரிய வட்டபாத்தி அமைப்பது நல்லது. அதிகமான மழை பெய்தால் நிலத்தைவிட்டு நீர் ஓடாது தவழ்ந்து செல்லும் ஏற்பாடுதான் ஆழச்சால் அகலப்பாத்தி உத்தி. கல்துாண்கள் வைத்து பாய்ந்து ஓடும் மழைநீரை மெதுவாக ஓடச் செய்யலாம். நீர் ஓடையில் செல்லும்போது தடுப்பணை இருப்பின் நீண்ட நேரம் நிலத்துள் நீர் உட்புக வாய்ப்பு உள்ளது.

ஒவ்வொரு விவசாயிக்கும் உதவும் உத்தி தான் பண்ணைக்குட்டை அமைத்தல். குறிப்பாக மானாவாரிப் பகுதிகளில் பண்ணைக்குட்டைகள் நிலத்தடி நீர் அதிகரித்திட கிணற்றிலும் போர்வெல் எனும் ஆழ்குழாய் கிணறுகளில் நீர் மேலே வர உதவும். ஐந்து ஏக்கர் பரப்புக்கு குறைந்தது அரை ஏக்கர் பரப்பிலாவது தோட்டத்தின் பள்ளமான பகுதிகளில் இடம் தேர்வு செய்யலாம்.

பல இடங்களில் செம்மண் இருப்பின் நீர் சேமிப்பு காலம் குறைவாக வாய்ப்புள்ளதால் 'சில்பாலின்' எனும் நிலப் போர்வையாக நீரை நிலத்திற்குள் உறிஞ்சாத வகையில் பாலித்தீன் கவர்களை விரித்து பண்ணை குட்டை போல பயன்படுத்தலாம். இதில் இணை தொழிலாக மீன் வளர்க்கலாம். எந்த இடத்திலும் குறைந்தது எட்டடி நீர் சேமித்தால் எட்டு மாதம் மீன் வளர்ப்பது எளிது. நவீன ஆராய்ச்சியின் பலனாக மீன் வளத்துறை மூலம் குறுகிய காலம் நீர் இருந்தாலும் அதில் மீன்கள் வளர்க்கலாம்.

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு ஸ்பெஷல் சிந்தட்டிக் பேப்ரிக் மூலம் நிலத்தில் பரப்பி செயற்கை பண்ணை குட்டை அமைக்கலாம். சூரிய ஒளியில் சேதமாகாமல் 4 ஆண்டுகள் வரை பாதுகாக்கலாம். சிறிய அளவு அல்லது பெரிய அளவு பண்ணைக்குட்டைகள் அமைத்திட பல்வேறு அரசுத் துறைகள் உதவுகின்றன.

நீர் ஆதாரம் நல்ல நிலையில் இருப்பின் பயிர்களுக்கு தேவையான தண்ணீரை பண்ணை குட்டையிலிருந்து மோட்டார் வைத்தும் நீர்பாய்ச்சலாம். மானாவாரியில் பழ மரங்கள் பேணவும் பண்ணைக் குட்டைகள் வெகுவாக உதவுகின்றன. நிச்சயமாக மண் சரியாது. தண்ணீர் இல்லாத போது கரைகளை செப்பனிட்டு வரப்புகளில் வெட்டிவேர் கிளரிசிடியா, பூவரசு போன்ற தாவரங்களை நட்டால் மண்சரியாது.

இளங்கோவன்
துணை இயக்குனர்
பாசன நீர் மேலாண்மை பயிற்சி நிலையம் துவாக்குடி, திருச்சி
98420 07125

Share
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement