dinamalar telegram
Advertisement

மகசூல் ஆதாரத்திற்கு மண்வளம் முக்கியம்

Share

கரிம எரு என்பது தாவரம் மற்றும் விலங்குகளின் கழிவிலிருந்து கிடைக்கக்கூடிய மட்கிய பொருள். எருவானது பயிர்களின் வளர்ச்சிக்கு குறைந்தளவே ஊட்டம் தருகிறது. பசுந்தாள் பயிர்களை மடக்கி உழுதல், பசுந்தழைகளை இட்டு உழுதல், பயிர் சுழற்சியில் பயறு வகை பயிரிடுதல், பயிர் கழிவுகளை மட்கவிடுதல், மட்கிய எரு, ஆலைக்கழிவுகளை சேர்த்தல் முறைகளால் விளைநிலங்களில் கரிம பொருட்களின் அளவு அதிகரிக்கும். நெல் வயலுக்கு மணிலா, அகத்தி, சணப்பை, கொழிஞ்சி பசுந்தாள் பயிர்களும் தோட்டக்கால் பயிர்களுக்கு சணப்பை, கொழிஞ்சி, கூபாபுல் பயிர்களை மடக்கி உழவேண்டும். கிளைரிசிடியா மரங்களின் இலைகளை பறித்து நிலத்தில் இடுவதும் உண்டு. இதனால் தழைச்சத்து அதிகளவில் கிடைக்கிறது.

அவை மட்கும் போது உற்பத்தியாகும் கரிம அமிலங்களின் வேதி வினையால் மண்ணில் பயிருக்கு கிடைக்கும் துத்தநாகச்சத்து அதிகரிக்கிறது. குறிப்பாக களர் நிலங்களுக்கு மிகவும் நல்லது. துத்தநாக குறைபாடு உள்ள நிலத்தில் துத்தநாகம் ஊட்டமேற்றிய தொழு உரத்தை ஒரு டன் பயன்படுத்தும் போது துத்தநாக சல்பேட் நுண்ணுாட்ட உரத்தை எக்டேருக்கு 12.5 கிலோ பயன்படுத்தினால் போதும். தொழு உரம், பண்ணை எரு கிடைக்காத போது உவரியாக கிடைக்கும் தாவர கழிவு, களைச்செடிகள், தழை செடி கொடி கிளைகளை மட்க வைத்து பயன்படுத்தலாம். பிளிரோட்டஸ் காளான், பேஸில்லஸ், டிரைகோடெர்மா நுண்ணுயிர் விதை கலவையை பரிந்துரைக்கேற்றவாறு தாவர குவியலில் கலந்து விரைவாக மட்க செய்யலாம். இதனால் மண்ணின் கரிமவளம் அதிகரிக்கும். நிலத்தின் வளம் குறையாமல் விளைச்சல் அதிகரிக்க சமச்சீர் உரமிடுதல் அவசியம்.

- கிருஷ்ணகுமார், தொழில்நுட்ப வல்லுனர்
ராமசுப்ரமணியன், ஒருங்கிணைப்பாளர் வேளாண்மை அறிவியல் நிலையம்
மதுரை, 98652 87851

Share
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement