கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், கார்மல் உயர்நிலைப் பள்ளியில், 1972ல், 7ம் வகுப்பு படித்தபோது தமிழாசிரியராக இருந்தார் புலவர் கு.பச்சைமால்; மிகவும் கனிவானவர்; தமிழாலயம் போல் காட்சி தருவார்.
மாவட்ட வரலாறு, தமிழ் பண்பாடு பற்றி பல நுால்களை எழுதியவர். மனதில் பதியும்படி கலகலப்பாக பாடம் நடத்துவார். பொது அறிவை வளர்க்கும் நோக்கில் தகுதியான தகவல்களை தருவார்.
ஒருநாள் வகுப்பில், 'வெளியே செல்லும் போதும், பொது நிகழ்வுகளில் பங்கேற்கும் போதும் கூர்ந்து கவனிக்க வேண்டும்... காகிதம், பேனாவை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்... கேட்பதை, காண்பதை குறிப்பாக எழுதி, அன்றாடம் நாட்குறிப்பில் பதிய வேண்டும்...
'ஓர் இடத்துக்கு புறப்படும் நேரத்தையும், அடையும் நேரத்தையும் குறித்து வைத்தால் சிறப்பாக பயன்படும்... இந்த பழக்கத்தை கடைபிடிப்பதால், பிற்காலத்தில் எழுத்தாளராகவோ, பேச்சாளராகவோ எளிதாக உயரலாம்...' என அறிவுரைத்தார்.
அதை விளையாட்டாக கடைப்பிடிக்க துவங்கினேன்; அதுவே வழக்கமாகி என்னை எழுத்தாளராக்கியது; அந்த ஆசிரியர் கரங்களாலே விருது பெறவும் வழி வகுத்தது.
தற்போது என் வயது, 61; அரசு நிறுவனம் ஒன்றில் தலைமை மருத்துவ அலுவலராக பணிபுரிகிறேன். பணி நிமித்தம் அடிக்கடி நீதிமன்றம் சென்று வருவேன். அப்போதெல்லாம் நேரத்தை குறித்து கொள்வேன். அது, முக்கிய விசாரணைகளில் உதவி வருகிறது.
வாழ்வின் உயர்வுக்கு வழிகாட்டிய அந்த ஆசானை நன்றியுடன் நினைவில் கொண்டுள்ளேன்.
- கோ.ராஜேஷ் கோபால், ஊட்டி.
தொடர்புக்கு: 94431 87606
தமிழாலயம்!
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!