dinamalar telegram
Advertisement

ஐந்து நாள் விவசாயி ரெண்டு நாள் வியாபாரி

Share

வாரத்தில் ஐந்து நாட்கள் நெல், காய்கறி பயிர்களை கவனித்து கொள்வேன். அறுவடை செய்த காய்கறிகளை வாரத்தில் இரண்டு நாட்கள் பீபி குளம் உழவர்சந்தையில் கொண்டு வந்து நேரடியாக விற்பனை செய்வதால் கைக்கு நஷ்டமில்லாமல் போட்ட முதலீட்டை எடுக்க முடிகிறது என்கிறார் மதுரை மாவட்டம் மேலுார் ஏ.வல்லாளபட்டி விவசாயி பூசாரி.
விவசாயி, வியாபாரி அனுபவம் குறித்து அவர் கூறியதாவது:

5 ஏக்கரில் அட்சயா நெல் ரகம் சாகுபடி செய்துள்ளேன். இந்த ரகத்திற்கு மார்க்கெட்டில் நல்ல விலை கிடைக்கிறது. குப்பை உரம், எரு என இயற்கை உரம் கொடுத்தாலும் அவ்வப்போது யூரியா, டி.ஏ.பி. வயலில் இட்டால் தான் போதுமான விளைச்சல் கிடைக்கும். ஒரு ஏக்கரில் நாட்டு புடலங்காயும் 40 சென்டில் பீர்க்கங்காயும் விளைகிறது. புடலங்காய் விதைக்கு வெளியில் வாங்குவதில்லை. என்னிடம் உள்ளது நாட்டு ரகம் என்பதால் ஐந்தடி நீளத்திற்கு காய் காய்த்து தொங்கும். பந்தல் உயரமாக அமைக்க வேண்டும். விதைக்காக கொஞ்சம் காய்களை முற்ற வைப்பேன். விதைகளை விதைத்த 15 நாட்களில் முளைவிடும்.

ஒரு மாதத்தில் கொடிவிட ஆரம்பிக்கும் போது கயிறால் பந்தலில் கட்டி விடுவேன். 60வது நாளில் பூக்க ஆரம்பிக்கும். அடுத்த 25 நாட்களில் காய்கள் நீள நீளமாக தொங்கும். ஒவ்வொரு காயும் முக்கால் கிலோ முதல் ஒரு கிலோ எடையிருக்கும். வாரத்திற்கு ஒருநாள் ஒன்றரை டன் அளவு காய்க்கும். இப்போது மழையால் பிஞ்சு இறங்குவது குறைந்ததால் வாரத்திற்கு 500 கிலோ அளவே கிடைக்கிறது. இதை நான் வியாபாரியிடம் விற்றால் கிலோ ரூ.20க்கு தான் எடுப்பார்கள். விலை கட்டுபடியாகாது.

எனவே மேலுாரிலிருந்து பீபி குளம் உழவர் சந்தைக்கு வந்து காய்களை விற்பனை செய்கிறேன். கிலோ ரூ.40 வரை விலை போகிறது. சந்தை விலை என்பதால் ஏற்றி இறக்க வேண்டியதில்லை. 40 சென்டில் பீர்க்கங்காய் பயிரிட்டுள்ளேன். ஒருநாள் விட்டு ஒருநாள் 50 கிலோ வரை பறிப்பேன்.
இதுவும் தொடர்ந்து 2 மாதம் காய்க்கும். மொத்தத்தில் புடலை, பீர்க்கங்காய் 3 மாதத்தில் முடிந்து விடும். மறுபடியும் விதைபோட்டு சாகுபடி செய்ய வேண்டும். வெறும் விவசாயியாக மட்டும் இருந்தால் வியாபாரி கேட்ட விலைக்கு விற்றுவிட்டு முதல் போச்சே' என புலம்ப வேண்டியிருக்கும். வியாபாரியாகவும் இருப்பதால் கூட கொஞ்ச நேரம் சந்தையில் உட்கார வேண்டும். அதற்கேற்ப நியாயமான லாபம் கிடைக்கிறது. அறுவடையோடு விவசாயியின் வேலை முடிந்துவிட்டதென நினைத்தால் எதிர்பார்த்த லாபம் கிடைக்காது என்பதை என் அனுபவத்தில் உணர்ந்து கொண்டேன். நேரடியாக விற்பனை செய்வதால் மக்களின் எதிர்பார்ப்பையும் புரிந்து கொள்ள முடிகிறது என்றார்.

இவரிடம் பேச: 99432 70821.
எம்.எம்.ஜெயலெட்சுமி மதுரை

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • Krishna - Chennai,இந்தியா

    பாராட்டுகள் நண்பரே , மேன்மேலும் ஓங்க வாழ்த்துக்கள்.

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement