ஐரோப்பிய நாடான இத்தாலி, பிளோரன்ஸ் நகரத்தில் கி.பி., 1489ல், சிறிதும் கவனம் பிசகாமல் சிலை செதுக்கிக் கொண்டிருந்தான் ஒரு சிறுவன்.
கையிலிருந்த உளி லாவகமாக விளையாட, முகம் ஒன்று உயிர் பெற்றுக்கொண்டிருந்தது. செதுக்குவதை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர் மக்கள்.
புன்னகையுடன் துலங்கியது அவன் செதுக்கிய முகம். அது, ரோமானிய புராணக் கதைகளில் வரும் கடவுளின் முகம். மரம், மக்களைக் காக்கும் அந்தக் கடவுளின் பெயர், பான்.
ஆட்டின் கண்கள், மான் கொம்புகள், நீண்ட காதுகள், அகல மூக்கு, அடர்த்தியான புருவம், தொங்கும் மீசை, தாடி, இடுப்புவரை மனித உடல், அதற்குக் கீழ் ரோமம் கொண்ட ஆட்டின் உடல்.
இதுதான் அந்த சிலையின் உருவ அமைப்பு.
பழைய சிலை ஒன்றை மாதிரியாக கொண்டு, செதுக்கினான் சிறுவன். வழக்கமான கடவுள் முகத்தில் இளமை ததும்பும். சிறுவன் செதுக்கியதில் முதியவர் வாய் பிளந்து புன்னகை புரிவது போல இருந்தது.
அப்போது, பிளோரன்ஸ் அரசர் லொரென்ஸோ டி மெடிஸி அங்கு வந்தார். அவர் கலைகள் மீது நாட்டம் கொண்டவர். சிறுவன் செதுக்கியிருந்த சிலை, அவரைக் கவர்ந்தது; புருவங்கள் அனிச்சையாக உயர்ந்தன.
பழைய சிலையை, அப்படியே செதுக்காமல் கற்பனை கலந்து செதுக்கியிருந்தான். கடவுள் உருவமான பானை, கிழவராக, புன்னகை நிறைந்த முகத்துடன் படைத்திருந்தது கண்டு அசந்து நின்றார் லொரென்ஸோ.
அதே நேரம், 'தம்பி... இந்த கிழட்டு பானுக்கு எப்படி இத்தனைப் பற்கள் இருக்கின்றன...' என கேட்டார்.
சிறுவன் யோசிக்கவே இல்லை. அந்த சிலையில் மேல்தாடைப் பல் ஒன்றைத் தட்டி எடுத்தான். இப்போது, பொக்கை சிரிப்புடன் மேலும் அழகு தெரிந்தது. அந்தச் சிறுவனுக்குள் மாபெரும் கலைஞன் இருக்கிறான் என்பதை உணர்ந்து கொண்டார் அரசர்.
லொரென்ஸோ உருவாக்கியிருந்த கலைப்பள்ளியில் படிக்க ஏற்பாடு செய்தார். பிற்காலத்தில், மிகச்சிறந்த சிற்பியாக, ஓவியராக, கட்டடக்கலை நிபுணராக, கவிஞராக புகழ்பெற்ற அந்த சிறுவன் தான் மைக்கேலாஞ்சலோ.
அவரது படைப்புகளான பியேட்டா சிலை, டேவிட் சிலை, சிஸ்டின் சிலை, ஆலயமேற்கூரை ஓவியங்கள், சிஸ்டின் மண்டப பலிபீடத்தில் கடைசித் தீர்ப்பு, சுவரோவியம் போன்றவை உலக அளவில் புகழுடன் திகழ்கின்றன.
- கு.நவதாரணி
மைக்கேலாஞ்சலோ!
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!