Load Image
dinamalar telegram
Advertisement

அம்பிகா - அர்ச்சனா - ஆராதனா! (10)

முன்கதை சுருக்கம்: கேரளாவுக்கு சென்ற விக்ரம், தன்னை இடித்த காரிலிருந்து இறங்கிய ஆராதனாவை பார்த்து, அவளை பின் தொடர்ந்து சென்றான். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தன் தாத்தாவுக்கு, ஆராதனா ஆறுதல் கூற, அறை வாசலில் நின்று அவர்கள் பேசுவதை கேட்டான், விக்ரம்-

மருத்துவமனையிலிருந்து ஆராதனா போனதும், அதன் எதிரில் இருந்த கடையில் ஒரு டஜன் சாத்துக்குடி வாங்கி, நிதானமாக 32ம் நம்பர் அறைக்கு வந்தான், விக்ரம்.

தாத்தா வேறு சட்டையை மாட்டி பட்டன் போட்டபடி இருக்க, துணிகளை ஒரு பையில் மடித்து வைத்தபடி இருந்தாள், பாட்டி.
அறை வாசலில் நின்ற விக்ரம், ''வரலாமா?'' என, பணிவாக கேட்டான்.
தாத்தாவும், பாட்டியும் நிமிர்ந்து பார்த்தனர்.
'சிரித்த முகத்துடன் அழகான இளம் வயது பையன், வரலாமா என்று கேட்கிறானே, யார் இவன்?' என்று அவர்கள் அவனையே பார்த்தனர்.
''உள்ளே வாங்க,'' என்றார், தாத்தா.
சாத்துக்குடி பையை அங்கிருந்த டேபிள் மீது வைத்தான், விக்ரம்.
''நீங்க?''
''வினோத், துரைராஜோட பையன்,'' கொஞ்சம் கூட தயக்கம், நடுக்கம் இல்லாமல் சிரித்தபடி தெளிவாக சொன்னான்.
சந்தோஷமும், ஆச்சரியமுமாக தாத்தாவும், பாட்டியும் பார்த்துக் கொண்டனர்.
தாத்தா அவன் கையை பிடித்து, ''நீ வருவேன்னு கேள்விப்பட்டேன். ஆனா, இங்க வருவேன்னு எதிர்பார்க்கலை.''
''நாங்க இங்க இருக்கறது எப்படி தெரியும்?'' என்றாள், பாட்டி.
''பக்கத்தில் இருக்கற வங்கிக்கு வந்தேன். அப்போ ஹாஸ்பிடல்லேர்ந்து ஆராதனா கார்ல போறத பாத்தேன்.''
''ஆராதனாவை முன்னாடியே பாத்திருக்கியா?''
''அப்பா ஒரு புகைப்படத்தை காட்டியிருக்கிறார். இத பாருங்க,'' என்றபடி, அவனிடம் ஏற்கனவே இருந்த புகைப்படத்தை காட்டினான். தாத்தாவும், பாட்டியும் சிரித்தபடி தலையை ஆட்டி கொண்டனர்.
''அவகிட்ட பேசினியா?'' கேட்டாள், பாட்டி.
''வந்து... என்னை அறிமுகபடுத்திக்கிட்டு பேசினேன். அவ ஜஸ்ட் ஹலோ சொல்லிட்டு போயிட்டா. ஆனா, ஒண்ணு... முத தடவை பார்த்ததுமே எனக்கு அவள பிடிச்சு போச்சு. அவளை தான் கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு முடிவு பண்ணிட்டேன்.''
''கேட்கவே சந்தோஷமா இருக்கு.''
''ஆனா, அவளுக்கு கல்யாணத்துல இஷ்டம் இல்லை போலிருக்கு. கொஞ்சம் கோவமா இருந்தா. அதெல்லாம் பேசி சரி பண்ணிடறேன். கவலைபடாதீங்க.''
''நல்ல பொண்ணு,'' என, கண் கலங்கிய பாட்டி, ''மத்தவங்களுக்கு உதவி தேவைன்னா ஓடி வந்து நிப்பா. அவளுக்கு நல்ல இடம் அமையணும்,'' என்றாள்.
''கவலையேபடாதீங்க பாட்டி. இனிமே அது என் பொறுப்பு. அவகிட்ட,- 'அந்த பையன் உன்னை பார்த்து பேசினேன்னு சொன்னான். உனக்கு பிடிச்சிருக்கா'ன்னு எதுவும் கேட்காதீங்க. நான் இங்க வந்தது கூட தெரிய வேணாம், சரியா?'' என்றான்.
மகிழ்ச்சியாக அவர்கள் தலையாட்டினர்.
''எனக்கு நீங்க சில விபரங்கள் சொல்லணும். அவ வழக்கமா எங்கெங்க போவான்னு?''
''காலைல சீக்கிரமே எழுந்துடுவா. முதல்ல, 'ஜிம்' - ஒரு மணிநேரம், எங்களுக்கு வேண்டியதை செஞ்சு கொடுத்துட்டு ஹோட்டலுக்கு வேலைக்கு போயிடுவா... ஸ்டார் ஹோட்டல்ல வேலை செஞ்சாலும் ரோடு கடைல சாப்பிட ரொம்ப பிடிக்கும்... நிறைய ப்ரெண்ட்ஸ்... ஆனா, அனாவசியமா எங்கேயும் சுத்தமாட்டா...
''வெள்ளிக்கிழமை ஆழிமலை சிவன் கோவிலுக்கு போவா... ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் எங்களை கோவளம் பீச்சுக்கு கூட்டிட்டு போவா,'' தாத்தாவும், பாட்டியும் மாறி மாறி சொன்னது எதுவும் அவன் காதில் விழவில்லை.
ஆட்டோக்காரன் இடித்தது, ஆராதனாவை பார்த்தது, தாத்தா, பாட்டி தகவல்கள் சொன்னது என்று எல்லாமே காக்கா உட்கார பனம் பழம் விழுந்த மாதிரி நடந்தது, விக்ரமுக்கு.

'ஜிம்'முக்கு வெளியே ஆராதனாவின் கார் அருகே நின்றிருந்தான், விக்ரம். இளம் வயது ஆண்கள் மற்றும் பெண்கள், 'ஜிம்'முக்கு வருவதும் போவதுமாக இருந்தனர்.
கண்ணாடி வழியே உள்ளே உடற்பயிற்சி செய்பவர்களை கவனித்தான். பெரிய ஹாலில், 10 பேர் பரவலாக, 'ட்ரெட்மில், சைக்கிள், வெயிட் லிப்டிங்' எல்லாம் செய்து கொண்டிருந்தனர்.
'டி - ஷர்ட், ட்ராக் சூட்' அணிந்திருந்த ஆராதனா, 'ட்ரெட் மில்'லில் ஓடி வியர்த்திருந்தாள்.
சற்று தள்ளி சென்று சிகரெட்டை பற்ற வைத்தான். அவள் வெளியே வந்ததும், நாலு வார்த்தையாவது பேசி, ஆரம்பித்து விட வேண்டும் என, தனக்குள் பலவிதமாக ஒத்திகை பார்த்துக் கொண்டான். திரும்பி பார்த்தபோது ஆராதனா அங்கே இல்லை.
டவலை போர்த்தி, கார் கதவை ஆராதனா திறப்பதை பார்த்தான். சிகரெட்டை போட்டு காலால் அணைத்து விட்டு, வேகமாக அவள் அருகில் வந்தான்.
''எக்ஸ்க்யுஸ் மீ?''
''யெஸ்?'' முகத்திலிருந்த வியர்வையை துடைத்தபடி கேட்டாள்.
''நான் துரைராஜோட பையன்.''
யாரு என்பது போல் புரியாமல் பார்த்தாள்.
''தாத்தா சொல்லி இருப்பாரே?'' என்றான்.
ஞாபகம் வந்தவள் போல, ''ஓ.கே., என்ன இப்போ?'' என்றாள்.
''உங்க கிட்ட பேசணும்.''
''ஸாரி எனக்கு வேலை இருக்கு,'' என்று கோபமாக காரை எடுத்து கிளம்பினாள்.
தன் கேரளா நம்பரிலிருந்து, ஆராதனாவுக்கு போன் செய்தான், விக்ரம்.
கார் ஓட்டியபடி, 'ப்ளு டூத்'தில் கார் ஸ்பீக்கர் போனில், ''யாரு?'' என்றாள்.
''உங்ககிட்ட பேசணும்... துரைராஜ் பையன்,'' என்றான்.
பட்டென்று போனை, 'கட்' செய்தாள். சிரித்தபடி கிளம்பினான், விக்ரம்.
ஹோட்டல் வேலையில் ஆராதனாவால் முழுமையாக ஈடுபட முடியவில்லை. விக்ரம் தொடர்ந்து போன் செய்வதும், 'மெஸெஜ்' அனுப்பியபடியும் இருந்தது, அவளுக்கு எரிச்சலை ஊட்டியது.
'தாத்தா... அவன் என்னை ரொம்பவே, 'டார்ச்சர்' பண்றான். ஒரு நாள் பளார் பளார்ன்னு அறைஞ்சிடப் போறேன்...' என்று அவள் கோபமாக சொன்னாள். -
'சரிம்மா... உன் இஷ்டம்,' என்றார், தாத்தா.
'ஆராதனாவை கல்யாணம் பண்ணிக் கொள்ளாமல் விட மாட்டான், கெட்டிக்கார பய...' என்று தாத்தாவும், பாட்டியும் தனியாக பேசிக் கொண்டனர்.
ஞாயிற்றுக்கிழமை கோவளம், 'பீச்' கூட்டமாக இருந்தது. நண்பர்கள், குழந்தைகளுடன் குடும்பங்கள், காதலர்கள் என, ஆங்காங்கே சிரித்தபடியும், அலையில் நனைந்தும், சாப்பிட்டபடியும் பேசிக் கொண்டிருந்தனர்.
''நீங்க ரெண்டு பேரும் இங்கேயே இருங்க. கூட்டமா இருக்கு நான் போய் எதாவது வாங்கிட்டு வரேன்,'' என்று தாத்தா, பாட்டியை ஓரிடத்தில் உட்காரவைத்து விட்டு போனாள், ஆராதனா.
கோவளம் பீச்சுக்கு வந்த விக்ரம், ஆராதனாவின் கார் இருக்கிறதா என்று பார்க்க, அங்கே இருந்தது.
சுற்றுமுற்றும் தேடியவன் கண்களில் தாத்தாவும், பாட்டியும் தனியாக உட்கார்ந்திருந்தது தெரிந்தது.
நிதானமாக அவர்கள் அருகில் போய், ''ஹலோ... தாத்தா,'' என்றான்.
அலையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்கள், அவனைப் பார்த்ததும் மகிழ்ந்தனர்.
''எப்படி பா இருக்க?''
''நல்லா இருக்கேன். ஆராதனா எங்க?''
''ஏதோ வாங்கிட்டு வரேன்னு போயிருக்கா உட்காரு... வந்திடுவா.''
''நான் போய் பார்த்துட்டு வரேன்.''
அவன் போவதைப் பார்த்து, ''அவளுக்கு பொருத்தமான பையனைத் தான் கடவுள் கொடுத்திருக்கிறார்,'' என்றாள், பாட்டி.
ஆராதனா, ஆராதனா என முணுமுணுத்தபடி கூட்டத்தில் தேடினான். கையில் இரண்டு இளநீரில் ஸ்ட்ரா போட்டு, நடந்து வந்து கொண்டிருந்தாள்.
அவளைப் பார்த்ததும், முதுகு பக்கமாக போய், ''ஹலோ!'' என்றான், விக்ரம்.
திடீரென மிக நெருக்கமாக ஆண் குரல் கேட்டதில் பயந்து, இரண்டு இளநீரையும் கீழே போட்டு விட்டாள். சிரித்தபடி அவள் முன் வந்து நின்றான், விக்ரம்.
''ஸாரி நான் போய் வேற வாங்கிட்டு வரேன்,'' என்றான்.
அவள் கோபத்தின் உச்சத்தில், ''யோவ் யார்யா நீ... என்ன வேணும் உனக்கு?'' என்று கத்தினாள்.
''பேசணும்.''
''நீ யாருன்னே எனக்கு தெரியாது... எதுக்கு பேசணும்?''
''நான் துரைராஜ் பையன் வினோத். போன் பண்ணேன் எடுக்கல. 'மெசேஜ்'அனுப்பினாலும் பதில் இல்லைன்னா, நான் என்ன பண்றது?''
''போலீஸ்ல புகார் குடுத்தா அடுத்த நிமிஷம் உள்ள இருப்ப,'' என்றாள்.
''எந்த போலீஸ் வந்தாலும் தாத்தா, பாட்டி எனக்கு சப்போர்ட்டா வருவாங்க,'' சிரித்தபடி கூறினான், விக்ரம்.
ஏற்கனவே இளநீர் கீழே விழுந்த ஆத்திரத்தில் இருந்தவள், இவன் இன்னும் வெறுப்பேற்றுகிறானே என்று பயங்கரமாக கோபப்பட்டு, ஒரு நொடியில் அவனை, 'பளார்' என அறைந்தாள்.
- தொடரும்
கோபு பாபு

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement